நாங்கள் தந்தை பெரியார் அவர்களின் வழியில் வந்தாலும் –
ஆசிரியர் காட்டும் வழியில்தான் இன்று நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம் – அதிலிருந்து எப்பொழுதும் மாறாதவர்கள்!
தாம்பரம், மே 24 தந்தை பெரியார் அவர்களின் வழியில் நாங்கள் வந்தாலும், ஆசிரியர் அவர்கள் காட்டும் வழியில்தான் இன்று நாங்கள் செயல் பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதிலிருந்து எப் பொழுதும் மாறாதவர்கள். அப்படியே இருக்கக் கூடியவர்கள் என்றார் தொ.மு.ச. பேரவையின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினருமான மு.சண்முகம் அவர்கள்.
திராவிடர் தொழிலாளர் கழக
4 ஆவது மாநில மாநாடு
கடந்த 20.5.2023 அன்று காலை சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற திராவிடர் தொழிலாளர் கழக 4 ஆவது மாநில மாநாட்டினைத் தொடங்கி வைத்த தொ.மு.ச. பேரவையின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினருமான மு.சண் முகம் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.
அவரது தொடக்கவுரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
நான் அன்றைக்கே எச்சரித்தேன்!
உதாரணத்திற்கு ஹூண்டாய் கம்பெனி – முதன் முதலில் கொரியன்ஸ் இங்கே வரும்பொழுது, நாங்கள் எல்லா பணிகளையும் ரோபோக்களை வைத்துத் தான் செய்வோம் என்று சொன்னார்கள்.
அப்பொழுது நான் சொன்னேன், ‘‘இவன் நம்மிடம் உள்ளவற்றை எல்லாம் வாங்கிக் கொண்டு, நம்மை ஏமாற்றி விட்டுச் சென்றுவிடுவான்” என்றேன்.
தலைவர் சொன்னார், அந்த ஒப்பந்தம் வேண் டாம் என்று.
மிகவும் கஷ்டப்பட்டு, ‘ஒன்-தேட் ரோபோ’ என்று வந்தது. நம்முடைய ஆட்சியும் போயிற்று. இப்பொழுது நூற்றுக்கு நூறு சதவிகிதம் ரோபோக் களை வைத்துப் பணி நடைபெறுகிறது.
தொழிற்சாலைகள் இங்கே வந்தால், நம்முடைய இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவேண்டும்!
எத்தனை லட்சம் கார்கள் இங்கே தயாரிக்கப்பட்டு, நம்முடைய அனைத்து சாதனங்களையும் பயன் படுத்திக்கொண்டு, அவர்கள் பணம் பெருக்கிக் கொள்கின்றனர்.
ஆகவே, தொழில் வருவது பெரிதல்ல; தொழிற் சாலைகள் இங்கே வந்தால், நம்முடைய இளைஞர் களுக்கு வேலை கிடைக்கவேண்டும்.
எதற்காக நாங்கள் போக்குவரத்துத் துறையில் ஆட்களை போடுங்கள்; மின்சார வாரியத்தில் ஒப் பந்தக்காரர்களை நிரந்தரப்படுத்துங்கள்; சர்க்கரை ஆலையில் செய்யுங்கள்; சிவில் சப்ளையில் செய் யுங்கள் என்று சொல்கிறோம் என்றால், பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள், அய்.டி.அய்., படித்தவர்கள் போன்றவர்கள்தானே இருக்கிறார்கள்; அதற்குமேல் எங்கே படிக்கிறார்கள்? இவர்களுக்கு வேலை கொடுக்கவேண்டும் என்று சொன்னால், இந்த அமைப்புகள் கொடுத்தால்தான், நம் மக்களுடைய பொருளாதார வளர்ச்சி உயரும் என்பதற்காக அதற் கென்று ஒரு அஜெண்டாவை போட்டு, தொடர்ந்து அரசோடு நாங்கள் சண்டை போட்டு வருகின்றோம். அதுகுறித்துகூட இப்பொழுது ஆசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
ஊழியர்களுக்கு ஒரு கேண்டீன்; தொழிலாளர்களுக்கு இன்னொரு கேண்டீன்
நம்மைச் சார்ந்தவர்கள், ஒரு தொழிற்சங்கத்தைப் பார்க்கும்பொழுது, தொழிலாளர்களைப் பாகுபாடு படுத்திப் பார்க்கக் கூடாது; அவர்களும் நம்மோடு உள்ளவர்கள்தான். ஒரு பெரிய கம்பெனி இங்கே இருந்தது. அந்தக் கம்பெனியில், அலுவலக ஊழியர் களுக்கு ஒரு கேண்டீன்; தொழிலாளர்களுக்கு இன் னொரு கேண்டீன்.
ஊழியர்கள் யார் என்று கேட்டால், தொழிலாளி களுடைய பிள்ளைகள்தான் அங்கே ஊழியர்களாக இருக்கிறார்கள். அவன் என்னமோ பார்ப்பான் போலவும், இவர்கள் என்னவோ சூத்திரர்கள் போல வும் இரண்டு பேரும் தனித்தனியே சாப்பிடுகிறார்கள். இதுபோன்ற பாகுபாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வந்து, மறுபடியும் மறுபடியும் – என்னதான் நம்மைப் போல் உள்ளவர்கள் எல் லாம் அதையெல்லாம் பிடுங்கி எறிந்துவிட்டுப் போனாலும், வயலில் களை முளைப்பதுபோன்று, இதுபோன்ற விஷயங்கள் உள்ளே வந்து கொண்டி ருக்கின்றன. இதுபற்றி நான் பேசவேண்டும் என்றால், இப்படிப்பட்ட மாநாட்டில்தான் என்னால் பேச முடியும்; வேறு எங்கும் என்னால் பேச முடியாது.
அதற்குப் பிரச்சார பீரங்கி
அதற்கு முக்கிய காரணம் என்னவென்று சொன் னால், நீங்கள்தான் அதற்குப் பிரச்சார பீரங்கி.
நீங்கள் ஒரு கோரிக்கை வைத்து, அதனால் ஊதிய உயர்வு கிடைக்கின்றது என்பதைவிட, நம்முடைய கொள்கைகள் அந்தத் தொழிலாளர்களின் மத்தியில் உணர்வாகப் போய்ச் சேரவேண்டும்.
பல இடங்களில், 40 ஆயிரம் ரூபாய், 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கியவுடன், பெற்ற அப்பா – அம்மாவையே மதிக்கமாட்டேன் என்கிறான். அவனுக்கு பி.எஃப் எவ்வளவு பிடிக்கவேண்டும் என்றே தெரியவில்லை.
இதற்காக நாங்கள் சண்டை போட்டு, 2014 ஆம் ஆண்டிலிருந்து, ஒருமுறை ஒருவருக்கு பி.எஃப். தொகை பிடித்துவிட்டால், அவனுக்கு யுனிவர்சல் அக்கவுண்ட் கார்டு ஒன்றை வாங்கிக் கொடுத்தோம். இப்பொழுது அவன் எந்தக் கம்பெனிக்கு வேலைக் குச் சென்றாலும், அந்த அக்கவுண்ட்டுக்குப் பணம் வரும்.
அதற்கு என்ன காரணம்?
1948 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை…
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் வைப்பு நிதியில், 1948 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை ‘க்ளைம்’ செய்யாமலே அந்தப் பணம் நிதித்துறையில் இருக்கிறது.
காரணம் என்ன?
நம்முடைய தொழிலாளியின் அலட்சியம்தான்!
‘ரிட்டன்ட் ஆஃப் தி கேப்டல்’
இதையெல்லாம் நாம் எடுத்துச் சொல்கிறோம். ஓய்வூதியம் வாங்கிக் கொடுத்தோம்; அதில் ‘ரிட் டன்ட் ஆஃப் தி கேப்பிட்டல்’ என்று ஒன்று இருந்தது. ஓய்வூதியதாரர்களிடம் ரூ.100 பிடிப்பார்கள். 10 ஆயிரம் ரூபாய் சேர்ந்தவுடன், அந்த ஓய்வூதிய தாரர் இறந்து போனவுடன், அவருடைய வாரிசுதாரர் களிடம் கொடுப்பார்கள்.
ஓய்வு பெற்ற ஒருவர் என்னிடம் வந்தார்; ஓய்வூ தியதாரர் ஒருவர் இறந்துவிட்டார் என்று சொன்னார்.
சரி, அவருக்கு ஆர்.ஓ.சி. கிடைத்ததா?
கிடைக்கவில்லை என்றார்.
சரி, வாங்க என்று அவரை அழைத்துக்கொண்டு போய், வைப்பு நிதி ஆணையரை சந்தித்துப் பேசி னேன்.
அவரோ, சார், இதுபோன்ற ஒரு க்ளைமே வரவில்லை என்றார்.
உடனே நான், அந்த அசோசியேசனைச் சேர்ந்த வர்கள் அனைவரையும் அழைத்து, எத்தனை ஓய் வூதியதாரர்கள் இறந்து போயிருக்கிறார்களோ, அவர் களுடைய குடும்பத்தினரைச் சந்தித்து, அவர்களிடம் பேசி, அந்தப் பணத்தை வாங்கிக் கொடுங்கள் என்று சொன்னேன்.
உரிமையைப் பெற்றுக்கொள்வதில்,
யாரும் கவலைப்படுவதே இல்லை
அதற்குப் பிறகு வைப்பு நிதி ஆணையர் என்னை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, ‘‘சார், நீங்கள் வந்துவிட்டுச் சென்ற பிறகு, மாதம் 10 க்ளைம் வருகிறது; நாங்களும் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம்” என்று சொன்னார்.
ஏனென்றால், அது நம்முடைய உரிமை. அந்த உரிமையைப் பெற்றுக்கொள்வதில், யாரும் கவலைப்படுவதே இல்லை.
எதற்காகப் பயப்படவேண்டும்?
யாரிடமும் அடிமையாக இருக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
நேற்றுகூட நான் முதலமைச்சரை அருகில் வைத்துக்கொண்டு பேசினேன். 8 மணிநேரம் வேலை செய்கிறோம்; நல்ல சம்பளம் வாங்குகிறோம். குடும்பத்தை நடத்துகின்றோம். கொஞ்சம் மிச்சத்தை அரசியலுக்கும் பயன்படுத்துகின்றோம். யாரிடமும் அடிமையாக இருக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? பயப்படவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அவன்தான் தொழிலாளி.
அப்படிப்பட்ட சூழ்நிலையை நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டும். அதை செய்யவில்லை என்று சொன்னால், நம்மை மற்றவர்கள் அடிமையாக்குவது என்பது சர்வ சாதாரணம்.
ஆகவே, பல்வேறு கோணங்களில், சனாதனம் ஒரு பக்கம் – கும்பகோணத்தைவிட்டு அய்யரையெல்லாம் ஒழித்துவிட்டாலும்கூட, இன்னும் சில அய்யர்கள் வந்து உள்ளே நுழைகிறான். அந்த அய்யர்களை கவனிக்கவேண்டி இருக்கிறது.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரிடம் சென்று, புரோகிதம் செய்ய வரமாட்டேன் என்று சொன்ன அய்யர்கள் – இன்றைக்கு என்ன செய் கிறார்கள் என்றால், ஆதிதிராவிடர் சமூகத்தினர் இருக்கின்ற காலனியில்கூட புரோகிதம் செய்கிறேன் என்று வருகிறான்.
அவன் அங்கே வருவது ஒன்றும் பெரிய காரியம் அல்ல. நம்மாள்தான் இளிச்சவாயன்.
‘‘அய்யோ, சாமியே இங்கே வந்துட்டாருங்க; அத னால், அவருக்கு வேண்டியதை இன்னும் கொஞ்சம் கொடுங்கள்” என்கிறான்.
அய்யர்களுக்கு வேண்டியது வருமானம்.
நாம் எப்படி தடுமாறுகின்றோம்; அந்த நிலை யிலிருந்து எப்படியெல்லாம் போகிறோம் என்பதை அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.
ஆட்களைப் போடவேண்டியதில்லை என்று சொல்கிறார்கள் அய்.ஏ.எஸ். அதிகாரிகள்
அய்.ஏ.எஸ். அதிகாரிகள் எல்லாம் மேலே அமர்ந்துகொண்டு, அடித்தட்டு மக்கள் – சி.என்.டி. ஓர்க்கர்ஸ் என்று சொல்வார்கள் – அவர்கள் எல்லாம் தேவையில்லை – நாங்கள் கம்ப்யூட்டரிலேயே வேலை செய்துவிடுவோம். ஆட்களைப் போட வேண்டியதில்லை என்று சொல்கிறார்கள்.
நேற்று முன்தினம் ஓர் அறிக்கை வந்திருக்கிறது – அய்.ஏ.எஸ். அதிகாரிகள், யு.பி.எஸ்.சி.லிருந்துதான் வேலைக்கு ஆட்களை எடுக்கவேண்டும்; சர்வீஸ் கமிசனிலிருந்துதான் எடுக்கவேண்டும். அதற்குப் பதிலாக, அறிவார்ந்த அறிவாளிகளை தாங்களே தேர்வு செய்து, அவர்களை இணை செயலாளர் அளவிற்கு, அவர்களைக் கொண்டு வரலாம் என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து உள்ளே புகுத்துகின்றார்கள் என்று சொன்னால், யாரைக் கொண்டுவரப் போகிறார்கள்?
யு.பி.எஸ்.சி. தேர்வில் – தாழ்த்தப்பட்டவர்களுக்கு இத்தனை சதவிகிதம்; பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இத்தனை சதவிகிதம் என்று நம்முடைய மக்களுக்குக் கிடைக்கும்.
இவர்களே தேர்ந்தெடுத்தால், நமக்கு என்ன கிடைக்கும்?
ஒன்றும் கிடைக்காது.
அய்.ஏ.எஸ். அதிகாரிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆகவே, இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங் கள் நம்மைச் சுற்றி சுற்றி வளைத்து, வளைத்து வந்துகொண்டிருக்கின்றன.
ஜாக்கிரதையாகவும் – பாதுகாப்பாகவும்
நாம் இருக்கவேண்டும்!
ஆகவே, நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பாதுகாப்போடு இருக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.
ஊதியம் பெறுவதோ அல்லது பஞ்சப்படியை பெறுவதோ அல்லது போனசைப் பெறுவதோ என்பது பெரிய விஷயமே அல்ல. ஒன்றுபட்ட சக்தி இருக்குமேயானால், நீ கேட்பது நிச்சயம் கிடைக்கும்.
அதைத்தான் தந்தை பெரியார் சொன்னார், ‘‘கூலி கேட்காதே, அது ஒரு கேவலமானது; பங்கைக் கேள்” என்று சொன்னார்.
இன்றைக்கு அது நிரூபிக்கப்பட்டு இருக்கின்றது.
என்னுடைய ஊரில் நிறைய நிலச்சுவான்தாரர்கள் தான். சனிக்கிழமை தோறும் கூலி போடுவார்கள்; என்னுடைய அப்பா, மதியமே கூலி வாங்கிக் கொண்டு போகச் சொல்லிவிடுவார்.
இன்னும் சில மிராசுதாரர்கள், இரவு 9 மணிவரை யிலும் கூலி கொடுக்கமாட்டார்கள்; அவர்களிடம் சென்று நான் கேட்பேன், ‘‘ஏன் இப்படிச் செய் கிறீர்கள்?” என்று.
‘‘உனக்கு ஒன்னுந்தெரியாது மாப்பிளே, கூலி கொடுத்தால் உடனே கள்ளுக்கடைக்குச் சென்று விடுவான்” என்று சொல்லுவார்கள்.
நீங்கள் அவர்களின் வீட்டின் வாசலில் நிற்கின்ற காலம் வரும் என்றேன்!
நான் சொல்லுவேன், ‘‘இன்றைக்கு அவனை உன்னுடைய வாசற்படியில் நிற்க வைக்கிறீர்கள்; ஒரு காலம் வரும், நீ அவனுடைய வாசல்படியில் நிற்கவேண்டிய காலம் வரும்” என்று சொன்னேன்.
10 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு 98 வயது; அவருடைய மகன் அழைத்ததால், நான் சென் றிருந்தேன். அவரைப் பார்த்தேன், ‘‘நீ என்னைக்கு வாயைத் திறந்தாயோ, காலையில் அவனுடைய வீட்டிற்குமுன் நின்று வேலைக்கு வாப்பா என்று கூப்பிடுகிறேன். அவன் வேலைக்கு வந்தவுடன், அவனுக்கு டிபன் வாங்கிக் கொடுக்கிறேன்; 8 மணிக்கு சாப்பிடுகிறான். பிறகு, டீ, வடை வாங்கிக் கொடுக்கிறேன். பகல் 12 மணியோடு வேலை முடிந்து விட்டது என்ற டிமாண்ட் செய்கிறான் என்றார்.
அவனுக்கு அந்த சக்தி இருக்கிறது. ஒரு விவ சாய கூலித் தொழிலாளி, 500 ரூபாய் சம்பளம் கொடுத்தால்தான், 4 மணிநேரம் வேலை செய்வேன் என்று டிமாண்ட் செய்கிறான்.
ஆனால், படித்துவிட்டு நீங்கள், ஒப்பந்தப் பணிக்குச் செல்கிறீர்கள்; கேசுவலுக்குச் செல்கிறீர்கள். அந்த சக்தியை இழந்து ஏன் நீங்கள் இருக்கிறீர்கள்.
நான் ஊருக்குச் செல்லும்பொழுது, அந்தக் கூலித் தொழிலாளி, இப்படி கேட்கிறான், அப்படிக் கேட் கிறான் என்று சொல்லும்பொழுது, எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கும்.
ஒரு காலத்தில் அவர்களை எவ்வளவு தொல்லை கொடுத்தீர்கள். அதற்குப் பதிலடி இப்பொழுது கொடுக்கிறார்கள்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’’
வயலில் நீ இறங்கி வேலை செய்; சங்க காலத்தில் எப்படி இருந்தது; ‘‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என்றுதானே சொன்னார்கள்.
எல்லோரும் வேலை செய்து, வரக்கூடியதை சமமாகப் பிரித்துக்கொள்ளவேண்டிய ஒரு சமத்துவம் தான் திராவிட நாட்டில் இருந்தது.
அப்படிப்பட்ட நாட்டில், பாகுபாட்டை ஏற்படுத்தி, பிரித்து, நான் உயர்ந்தவன் – நீ தாழ்ந்தவன் என்று போனதினுடைய விளைவை எல்லோரும் அனு பவிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.
அமைச்சரிடமும் சொல்லியிருக்கிறேன்!
அமைச்சரிடம்கூட நான் சொல்லியிருக்கிறேன், ‘‘நிரந்தர வேலைகளையெல்லாம் ஒப்பந்தக்காரர் களிடம் கொடுத்தீர்கள் என்றால், ஒரு காலத்தில் ஒப்பந்தத் தொழிலாளி, கட்டி வைத்து உன்னை அடித்து உதைத்துவிட்டுச் செல்லுவான்; அவன்மேல் நீங்கள் வழக்குக்கூட போட முடியாது.
நிரந்தரப் பணியாளர் என்றால், அவனுக்கு சார்ஜ்சீட் கொடுக்கலாம்; வேலையிலிருந்து நீக்கலாம்; ஆனால், ஒப்பந்தத் தொழிலாளியை வேலையை விட்டு நீக்கினால் என்ன செய்ய முடியும்? ஒன்றும் செய்ய முடியாது; உதைதான் வாங்குவீர்கள்” என் றேன்.
ஆகவே, இப்படிப்பட்ட சின்னச் சின்ன இடர்ப் பாடுகள்; நம்மீது பல்வேறு முனைகளிலிருந்து தாக்குதல்கள் வருகின்றன. அந்தத் தாக்குதல் களையெல்லாம் நாம் சமாளிக்கவேண்டும்.
சட்ட ரீதியாக இருக்கக்கூடிய பிரச்சினைகள், குறைந்தபட்ச ஊதியம், ஒப்பந்தத் தொழிலாளர் முறையை எப்படி ஒழிப்பது? ஓய்வூதியத்தை எப்படி உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து நாம் செய்துகொண்டிருக்கின்றோம்.
மற்ற இடத்தில் பேச முடியாததை, இந்த இடத்தில் நான் பேசியிருக்கின்றேன்!
ஆனால், இதையும் நாம் கவனிக்கவேண்டிய சூழ்நிலைகள் இருக்கின்றது என்பதை, மற்ற இடத் தில் பேச முடியாததை, இந்த இடத்தில் நான் பேசியிருக்கின்றேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது, மோகன் உங்களுடைய கருத்து என்ன? என்று கேட்டேன்.
உடனே மோகன் அவர்கள், ‘‘ஆசிரியர் சொல்லி அனுப்பிவிட்டார்; சண்முகத்தின் கருத்து என்னவோ, அதுதான் உங்கள் கருத்தாக இருக்கவேண்டும்” என்று சொல்வார்.
ஆசிரியர் அவர்கள் காட்டிய வழியில்தான் இன்று நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம்!
எனக்கு அது ஒரு பெரிய பெருமையாகும். ஏனென்று சொன்னால், தந்தை பெரியார் அவர்களின் வழியில் நாங்கள் வந்தாலும், ஆசிரியர் அவர்கள் காட்டிய வழியில்தான் இன்று நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அதிலிருந்து எப்பொழுதும் மாறாதவர்கள். அப்படியே இருக்கக் கூடியவர்கள்.
ஆகவே, நான் அனைவரையும் கேட்டுக்கொள்வது, நம்முடைய செல்வங்களுக்கு பகுத்தறிவுச் சிந்தனையையும், சுயமரியாதை உணர்வையும் ஊட்டவேண்டும். அப்படி நாம் செய்தால்தான், நாம் தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் என்பது வரும். அது இல்லாதவரை, வெறும் பணம் பண்ணுகின்ற ஏடிஎம்மாக இருந்தால், ஒன்றும் பிரயோஜனம் இல்லை.
எங்களுடைய உறவினரைப் பார்க்க அமெரிக்காவிற்குச் சென்றேன்; அங்கே சென்றதும், நம்மை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு, அவர்கள் வெளியே போய்விடுகிறார்கள். ஏனென்றால், அங்கே சுதந்திரமாகப் போக முடியாது என்பதால்.
அவர்களும் காலையில் செல்கிறார்கள், மாலையில்தான் வருகிறார்கள். அந்த அளவிற்கு உழைக்கிறார்கள்.
‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படி அவர்கள் உழைக்கிறார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள், ‘‘உழைப்போம்; கொஞ்சம் சேர்த்து வைப்போம்; பின்னர் வந்தாவது, தமிழ்நாட்டிற்குச் சென்று சுதந்திரமாக இருப்போம்” என்கிற ஏக்கத்தோடு அவர்கள் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
நம்முடைய உரிமைகளை, நாம் என்றும்
விட்டுக் கொடுக்கக் கூடாது!
ஆகவே, நம்முடைய உரிமைகளை, நாம் என்றும் விட்டுக் கொடுக்காமல், மற்ற மூடநம்பிக்கைகளுக்கு இடம் கொடுக்காமல் நீங்கள் அனைவரும் இருப்பீர்கள் உறுதி. ஆனால், உங்கள் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் அதைச் சொல்லி, அவர்களையும் உங்கள் வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆவல்; அதை நீங்கள் செய்து முடிப்பீர்கள் என்று சொல்லி,
உங்களுக்கு என்றும் நான்
உறுதுணையாக இருப்பேன்!
இந்த மாநாட்டை நான் மனமார எங்கள் பேரவையின் சார்பில் வாழ்த்துவதோடு, அய்யா ஆசிரியர் தலைமையில் இயங்கக்கூடிய நீங்கள் வீரர்கள்; கொஞ்சம்கூட சோடை போகாதவர்கள். தொடர்ந்து உங்களுடைய பணிகளைத் தொடர்வீர்கள். உங்களுக்கு என்றும் நான் உறுதுணையாக இருப்பேன் என்று கூறி, வாழ்த்தி, விடைபெறுகின்றேன்.
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு தொ.மு.ச. பேரவையின் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினருமான மு.சண்முகம் அவர்கள் உரையாற்றினார்