பெண்களுக்கு எதிரான குற்றத்தில் உத்தரப்பிரதேசம் முதலிடம்

தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் தகவல்

புதுடில்லி,  அக்.2–   இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கடந்த 2 ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரித்துள்ளதாகவும், நாட்டிலேயே உத்தரப்பிரதேசம் முதலிடத்தை பிடித்திருப்பதாகவும் தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் காவல் நிலையங்களில் பதிவான குற்ற வழக்குகளை தொகுத்து தேசிய குற்ற ஆவண காப்பகம் 2023ஆம் ஆண்டிற்கான தனது அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் நாட்டில் பதிவான குற்றங்கள், தற்கொலைகள், விபத்துகள் குறித்த பல முக்கிய புள்ளிவிவரங்கள் இடம் பெற்றுள்ளன.

கொலை வழக்கு

2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பல்வேறு குற்றங்களில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2023இல் மொத்தம் 27,721 கொலை வழக்குகள் பதிவாகி உள்ளன. இது 2022அய் விட 2.8 சதவீதம் குறைவு. அதே சமயம், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் 28 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022இல் பழங்குடியினருக்கு எதிராக 10,064 வழக்குகள் பதிவான நிலையில், 2023இல் 12,960 வழக்குகள் பதிவாகி உள்ளன. சைபர் குற்றங்கள் தொடர்பாக 86,420 வழக்குகள் பதிவாகி உள்ளன.

இவற்றில் 68.9 சதவீதம் (59,526) மக்களை ஏமாற்றுவதை நோக்கமாக கொண்டவை. 2023இல் மொத்தம் 62,41,569 குற்றங்கள் பதிவாகி உள்ளன. இது 2022அய் விட 4,16,623 வழக்குகள் அதிகம். பெண்களுக்கு எதிரான குற்றங்களை பொறுத்த வரையில் 2022இல் 4.45 லட்சமாக இருந்த
நிலையில், 2023இல் 4,48,211 வழக்குகள் பதிவாகி உள்ளன.

இதில் பெரும்பாலான வழக்குகள் (1,33,676) கணவர் மற்றும் உறவினர்களால் கொடுமைப்படுத்துதல் வழக்குகளாக உள்ளன. அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 66,381 வழக்குகள் பதிவாகி உள்ளன.

மகாராட்டிரா (47,101), ராஜஸ்தான் (45,450), மேற்கு வங்கம் (34,691) ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 9.2 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 1,77,335 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் போக்சோ சட்டத்தின் கீழ் 67,694 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் 1,17,418 தற்கொலைகள் பதிவாகி உள்ளன. இதில் விவசாயிகள் மட்டும் 10,786 பேர் பலியாகி உள்ளனர். இதில் 38 சதவீதம் பேர் மகாராட்டிராவை சேர்ந்தவர்கள். வேலையில்லாததால் தற்கொலை செய்து கொண்டவர்களில் கேரளா (2,191) முதலிடத்தில் உள்ளது.  வன்முறை குற்றங்கள் அதிகம் நடந்த மாநிலமாக மணிப்பூர் உள்ளது. இங்கு 2023இல் மட்டும் 14,427 வன்முறை குற்றங்கள் பதிவாகி உள்ளன..

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *