யானையையே திருடி ரூ.27 லட்சத்திற்கு விற்றனர்
காவல்துறைக்கு சவால் விட்ட ‘கில்லாடி’ திருடர்கள்
ராஞ்சி, அக்.1– பொதுவாக ஒரு பொருளை திருடுபவர்கள் மறைத்து வைக்கக்கூடிய “அளவிலான பொருட் களையே திருடுவார்கள். ஆனால் இப்போ தெல்லாம் ஒட்டகம், பேருந்து போன்ற உருவத்தில் பெரியவற்றையும் திருடிச் செல்கிறார்கள் கில்லாடித் திருடர்கள். அந்த வரிசையில் மிகப்பெரிய யானையையே ஒரு கும்பல் திருடியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாபூரை சேர்ந்தவர் நரேந்திர குமார் சுக்லா. இவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து ஜெயமதி என்ற பெண் யானையை ரூ.40 லட்சம் கொடுத்து வாங்கினார். அங்குள்ள பலாமு மாவட்டத்தின் சுகூரில் யானையுடன் அவர் தங்கி இருந்தார்.
இந்தநிலையில் அந்த யானை காணாமல் போனது. இது தொடர்பாக மேதினி நகர் காவல்துறையில் நரேந்திர குமார் சுக்லா புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, யானையைத் தேடி வந்தனர். பீகார் மாநிலம் சப்ராவில் ஒரு கும்பல், பெண் யானை ஒன்றை ரூ.27 லட்சத்துக்கு விற்றதாக ஜார்கண்ட் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்த காவல்துறையினர், அங்கிருந்த யானையை மீட்டனர். அதே நேரம் யானையை திருடி விற்ற கும்பலை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.