தமிழ்நாட்டின் எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றிய அரசு கல்வி வளர்ச்சிக்கு தடை போடுகிறது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

4 Min Read

சென்னை, செப்.26- தமிழ்நாட்டின் எழுச்சியை பொறுத்துக்கொள்ள முடி யாமல் கல்விக்கு தடை ஏற்படுத்த ஒன்றிய அரசு நினைக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மாபெரும் கல்வி விழா

கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன், முதலமைச்சரின் காலை உணவு போன்ற திட்டங்கள் கல்வி வளர்ச்சிக்கு படிக்கட்டாக விளங்குகின்றன. பிற மாநிலங்களும் தமிழ்நாடு அரசின் கல்வி திட்டங்களை பின்பற்ற தொடங்கி உள்ளன. இந்தநிலையில் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’- தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டம்’ என்ற பெயரில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று  (25.9.2025) மாபெரும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார். விழாவில் அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து, 2025-2026-ஆம் கல்வி ஆண்டுக்கான புதுமைப் பெண் – தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 கல்வி ஊக்கத்தொகை வழங்குவதை தொடங்கி வைத்தார்.

ஆரோக்கியமான அரசியல்

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு முக்கிய காரணம் எங்களை பாராட்டி கொள்வதற்காக இல்லை. உங்களை கொண்டாடுவதை பார்த்து அடுத்த ‘பேட்ச்’ மாணவர்களுக்கும் படிப்பின் மேல் இன்னும் ஆர்வம் அதிகமாக வேண்டும். இதுதான் முக்கி யம். நம்முடைய அரசின் மகளிர் பயண திட்டம் போலவே தெலங்கானா மாநிலத்திலும் மகாலட்சுமி என்ற பெயரில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்துப் பயண திட்டத்தை செயல்படுத்தி கொண்டிருக்கிறார். அதேபோன்று தெலங்கானா மாநிலத்தில் செயல்படுத்தி கொண்டிருக்கும் நல்ல திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்துவதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம். இதுதான் ஆரோக்கியமான வளர்ச்சி அரசியல்.

காலை உணவுத் திட்டம்

நீங்கள் (மாணவ- மாணவிகள்) படித்து முன்னேறுகிற காரணத்தால் நீங்கள் மட்டுமல்ல, உங்களுடைய குடும்பமும் முன்னேற போகிறது. உங்களுடைய அடுத்த தலைமுறையும் முன்னேற போகிறது. குடும்பங்கள் முன்னேறினால் மாநிலங்கள் முன்னேறும்.

மாநிலங்கள் முன்னேறினால்…

நாடு முன்னேறும். அதனால்தான் நாம் தொடர்ந்து கல்வியோடு முக்கி யத்துவத்தை எடுத்துச்சொல்லி கொண் டிருக்கிறோம். ஆயிரம் ஆண்டுகளாக ஜாதி எனும் கால் முளைத்த சதி இந்த சமூகத்தை ஆட்கொண்டதால் நம்முடைய கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டது. வரலாறு நெடுக இந்த ஆதிக்கத்துக்கு எதிராக புரட்சியாளர்கள் இருந்து கொண்டு இருக்கிறார்கள்.

அந்த தொடர்ச்சியின் உச்சம்தான், திராவிட இயக்கம் தமிழ் மண்ணில் நிகழ்த்திய புரட்சிதான் இன்றைக்கு இந்த அளவுக்கு வேகமாக நடை போடுவதற்கு காரணமாக இருக்கிறது. அன்றைக்கு சென்னை மாகாண பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை நீதிக்கட்சி அறிமுகப்படுத்தியது. பெருந்தலைவர் காமராஜர் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதுதான் படிப்படியாக வளர்ந்து, இன்றைக்கு நம்மு டைய திராவிட மாடல் அரசில் காலை உணவு திட்டம் உருவாகி இருக்கிறது.

கல்விக்கு தடை

காலை உணவு திட்டம் அறிமுகமான தில் இருந்து மாணவர்களின் வருகை அதிகரித்து உள்ளது. புதுமைப் பெண், தமிழ்ப்புதல்வன் திட்டம் வந்ததில் இருந்து 12-ஆம் வகுப்பு படித்த மாணவர்களில் 75 சதவீதம் பேர் உயர் கல்வியில் சேருகிறார்கள். குறிப்பாக பெண்கள் உயர்கல்வியில் சேருவது அதிகரித்து இருக்கிறது, கடந்த 4 ஆண்டுகளில் அரசு பள்ளியில் படித்த 1,878 மாணவர்கள் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க சென்று இருக்கிறார்கள்.

கல்வியில் தமிழ்நாடு பெற்றிருக்கும் எழுச்சியை இந்தியாவில் பல மாநிலங்கள் திரும்பி பார்க்கின்றன. நம்முடைய திட்டங்களை அவர்கள் மாநிலத்தில் கொண்டு வருவதற்கு ஆய்வு நடத்திகொண்டிருக்கிறார்கள்.

இந்த எழுச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் கல்விக்கு தடை ஏற்படுத்தலாம் என்று ஒன்றிய அரசு நினைக்கிறது. நம்முடைய வளர்ச்சியை பார்த்து பொறுக்க முடியாமல் தடை ஏற்படுத்தக்கூடிய சிலருக்கு பயத்தை வரவழைக்க வேண்டும். நிச்சயம் நம்முடைய திட்டங்களாலும், உங்களுடைய சாதனையாலும் அது நடக்கும். என்னுடைய இலக்கு அனை வருக்கும் உயர்தர கல்வி. கல்வி நிலை யத்துக்குள் எந்த காரணத்தாலும் எவர் ஒருவரும் வராமல் இருக்க கூடாது, தடுக்கப்பட கூடாது.

நம்முடைய அரசு உருவாக்கி தரும் வாய்ப்புகளை எல்லாம் நீங்கள் பயன் படுத்தி கொண்டு உயர, உயர பறக்க வேண்டும். அதை பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடைய வேண்டும்.

கல்வியில் உயர்ந்த மாநிலமாக…

யு.ஜி. (இளங்கலை) முடித்து நல்ல வேலைக்கு சென்றாலும் பி.ஜி. (முதுகலை) படிக்க வேண்டும். ஆராய்ச்சி படிப்புக்கும் செல்ல வேண்டும். உலகம் ரொம்ப பெரியது. உங்கள் வெற்றி எல்லா திசைகளிலும் எதிரொலிக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து படியுங்கள். உங்களுடைய படிப்புக்கு துணையாக வேலைவாய்ப்புகளை உருவாக்க இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். கல்வியில் சிறந்த தமிழ்நாடு உயர்ந்த தமிழ்நாடாக மாற வேண்டும். நிச்சயமாக மாறும். மாற்றுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் கோவி.செழியன், மா.சுப்பிரமணியன், பி.ே்க.சேகர்பாபு, கீதா ஜீவன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, பத்திரிகையாளர் இந்து என்.ராம், நடிகர்கள் சிவகுமார், சிவகார்த்திகேயன், திரைப்பட இயக்குநர்கள் வெற்றி மாறன், மிஷ்கின், மாரி செல்வராஜ், தியாகராஜன் குமார ராஜா, பிரேம்குமார், ஞானவேல் ராஜா, தமிழரசன் பச்சமுத்து, கிரிக்கெட் வீரர் நட்ராஜ், பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா, பாரதி பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *