திருநெல்வேலி, செப்.25 கடந்த 2014-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே ரஸ்தா பகுதியில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே, கோவில் நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில், ரஸ்தாவைச் சேர்ந்த பெருமாள்சாமி (வயது 29) கொலை செய்யப்பட்ட வழக்கில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருநெல்வேலி மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி ராபின்சன்ஜார்ஜ் தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான ராஜாபாபு(வயது 35), முருகன் (வயது 50) ஆகிய இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில், சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்த திருநெல்வேலி ஊரக உட்கோட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரகுபதிராஜா, காவல்துறை ஆய்வாளர் சந்திரசேகரன் மற்றும் மானூர் காவல்துறையினர், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் (தற்போது மதுரை மாநகரம்), நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு வழக்குரைஞர் சூரசங்கரவேல் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் பாராட்டினார்.
2025-ஆம் ஆண்டில் மட்டும், இதுவரை 20 கொலை வழக்குகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 66 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. இதில் சரித்திர பதிவேடு உடைய நபர்கள் 21 பேர் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.