சென்னை, செப்.24- உறுப்பு கொடை செய்தவர்களின் பெயர்கள் அரசு மருத்துவமனை களின் நுழைவுவாயில்களில் கல்வெட்டில் பதிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
உறுப்பு கொடை நாள்
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று (23.9.2025) தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் சார்பில் உறுப்பு கொடை நாள் நிகழ்ச்சி நடந்தது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு உறுப்பு கொடை செய்தவர்களின் குடும்பத்தினர், மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கினார். தொடர்ந்து, உறுப்பு கொடை செய்தவர்களின் ஆண்டு படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், வருடாந்திர அறிக்கையை வெளியிட்டார்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிர மணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
2023-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் தற்போது வரை 522 பேர் மூளைச்சாவு அடைந்து உடலுறுப்புக் கொடை செய்துள்ளனர். இதில், கடந்த ஆண்டு 208 பேர் உடலுறுப்புக் கொடை செய்திருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பத்தினருக்கு சிறப்பு செய்யப்பட்டு உள்ளது. அரசு மரியாதை செலுத்தப்படும் என்று அறிவித்த பின்னர் 23,180 பேர் உறுப்புக் கொடைக்குப் பதிவு செய்து உள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 2,242 பேர் உடலுறுப்புக் கொடை செய்துள்ளனர். இதனால், 8,017-க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு வகைகளில் பயன் அடைந்து உள்ளார்கள்.
கல்வெட்டில் பெயர்
நோயாளிகளின் பதிவு மற்றும் உடலுறுப்புகளை ஒதுக்கீடு செய்வதற்காக புதிய அதிநவீன தொழில்நுட்பங்களை புகுத்தி ‘விடியல்’ செயலி அறி முகம் செய்யப்பட்டு உள்ளது. அக்டோபர் முதல் வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் நுழைவு வாயில்களில் அந்தந்த மருத்துவமனைகளில் உறுப்பு தானம் செய்தவர்களின் பெயர்களை கல்வெட்டுகளில் பதிந்து அவர்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது.
இதன்மூலம் உடலுறுப்புக் கொடை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும், 7.5 விழுக்காடு இடஒதுக் கீட்டில் 620 எம்.பி.பி.எஸ். சேர்க்கை நடந்துள்ளது. அதில், 613 பேர் இதுவரை சேர்ந்துள்ளனர். மீதம் உள்ள 7 பேருக்கு நாளை (அதாவது இன்று) முடிவுகள் வர உள்ளது. இட ஒதுக்கீட்டில் புது மாணவர்கள் சேரும் போது எண்ணிக்கை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்