தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்பது – அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்ட கொள்கை முடிவு. இந்த நிலையில், தேசியக் கல்விக் கொள்கை என்ற பெயரால் ஹிந்தி, சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டால்தான், தமிழ்நாட்டுக்குக் கொடுக்க வேண்டிய நிதியை அளிப்போம் என்று ஒன்றிய பி.ஜே.பி. அரசு நிபந்தனை விதிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல! தமிழ்நாட்டு மக்கள் ஒருக்காலும் மும்மொழியை ஏற்கமாட்டார்கள்; ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை என்னும் முகத்திரையை அகற்றுவார்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
நேற்று (21.9.2025) அய்.அய்.டி.யில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பிரிவுகளில் ஒன்று நடத்திய நிகழ்வில் கலந்துகொண்ட ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர், ‘‘தமிழ்நாடு (தி.மு.க.) அரசு மும்மொழித் திட்டத்தை ஏற்றாலொழிய நாங்கள் (ஒன்றிய அரசு) கல்விக்கான நிதியைத் தரமாட்டோம். மும்மொழித் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு ஏற்பதில் என்ன பிரச்சினை?’’ என்றெல்லாம் ஆணவத்துடன் பேசியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது!
புதிய கல்வித் திட்டம் என்ற ‘மதயானை!’
‘‘புதிய கல்வித் திட்டம் என்ற ஒன்றிய அரசின் ‘மத யானை’ மாணவர்களிடையே புகுந்து, பகுத்தறிவையும், தமிழ்நாட்டின் பாரம்பரிய பண்பாட்டினையும் பாழாக்க ஒருபோதும் இசையமாட்டோம்’’ என்று வெளிப்படையாகவே – அதற்குரிய காரண, காரிய விளக்கங்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களும் தெளி வாகத் தெரிவித்துவிட்ட பிறகும், மும்மொழித் திட்டத்தை, அவர்களின் வடமொழி, சமஸ்கிருத பண்பாடு என்ற ‘ஆரியப் பண்பாட்டை, மொழித் திணிப்புமூலம் ஏற்படுத்தும் ஏற்பாடு என்பதை, பா.ஜ.க. பிறப்பதற்கு முன்பே, பல ஆண்டுகளாகக் கூறி, திட்டவட்டமான நிலைப்பாட்டினை எடுத்துள்ளது திராவிட இயக்கம்.
‘‘மும்மொழித் திட்டத்தினை ஏற்பதில் என்ன பிரச்சினை?’’ என்று கேட்கிறார், மோடி அரசின் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
அவருக்கு நமது பதில்,
‘‘நீங்கள்தான் பிரச்சினை.
ஆர்.எஸ்.எஸ். (RSS) தான் பிரச்சினை!
உங்கள் பண்பாட்டுப் படையெடுப்புதான் பிரச்சினை!
எங்கள் உரிமைதான் பிரச்சினை!’’
நிதி தருவதற்கு மும்மொழித் திட்டம் என்ற நிபந்தனையா?
அரசியலமைப்புச் சட்டத்தின்படி, உங்களது வலுக்கட்டாய வற்புறுத்தலை – நிதி தருவதற்கு நிபந்தனையாக வைப்பதா?
‘‘கையெழுத்துப் போடு – இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்; இல்லையேல், நிதி இல்லை’’ என்று சொல்வதா?
Coercion என்ற நிர்ப்பந்தக் கட்டாயம் – திணிப்பு அல்லவா இது?
அடிமையா, தமிழ்நாடு?
1967 இல் அறிஞர் அண்ணா தலைமையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி அமைக்கப்பட்ட நிலையில், இரு மொழிக் கொள்கை என்பது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவாகவே (Policy Decision) எடுக்கப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானமாகி (பிறகு ஆணையும் போடப்பட்டது) முன்மொழிந்து ஏற்றுக் கொள்ளப்பட்டு அரை நூற்றாண்டாகவே அமுலில் இருந்து வரும் ஒன்று!
தி.மு.க. ஆட்சி மாறி, அ.தி.மு.க. ஆட்சி வந்த நிலை யிலும், இந்தக் கொள்கை முடிவைத் தொடர்ந்து வந்தது ஏன்? என்பதைப் புரிந்துகொள்ளவேண்டாமா?
மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி
மாற்றப்பட்டது ஏன்?
நமது அரசியலமைப்புச் சட்டப்படி, ‘கல்வி’ என்பது ஒன்றிய அரசின் ஏகபோகத்திற்குரியது அல்ல; ஏழாவது அட்டவணையில், நெருக்கடி காலத்திற்கு முன்வரை (1975) மாநிலப் பட்டியலில்தான் இருந்து வந்த ஒன்றுதான்.
காரணம், கல்வித் திட்டம் என்பது அந்தந்த மாநில மக்களின் பண்பாடு, மொழி உரிமை, உணர்வுகள், பழம்பெரும் பாரம்பரிய வரலாறு இவற்றைப் பொறுத்தது. பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை பயிற்றுவிக்கப்பட வேண்டிய ஒன்று என்று அரசியல் சட்டக் கர்த்தாக்கள் உணர்ந்து, மாநிலப் பட்டியலில் கல்வியை வைத்திருந்தனர்.
பிறகுதான், அது ஒத்திசைவுப் பட்டியலுக்கு (Concurrent List) மாற்றப்பட்டது! Union List என்ற ஒன்றிய அரசின் ஏகாதிகாரத்திற்கு மாற்றப்படவில்லை என்பதை அறவே மறந்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ்., அதன் கொள்கை அஜெண்டாவான சமஸ்கிருதம் – ஹிந்தித் திணிப்பினை ஏற்படுத்த ஒரு வழிமுறையாகவே இந்த ‘மும்மொழித் திட்ட’த்தைக் கொண்டு வருகின்றனர்.
சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தில்
பிற மாநிலங்களில் தமிழ் உண்டா?
கேந்திரிய வித்யாலயா என்ற ஒன்றிய அரசுப் பள்ளி களில், தமிழ் படிக்க என்ன ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர்?
எந்த மொழி வேண்டுமானாலும் மும்மொழித் திட்டத்தின்மூலம் படிக்கலாம் என்று பாசாங்குத்த னத்தின்மூலம் நமது பண்பாட்டை அழிக்கும் முகமூடித் திட்டம்தான் – இந்த மும்மொழித் திட்டம்.
நமது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் முதலமைச்சர் முன்பே, திட்டவட்டமாகவே தெரிவித்துவிட்டார்!
‘பத்தாயிரம் கோடி ரூபாய் நிதி தருகிறோம்’ என்று பாச வலை போட்டாலும்கூட, தமிழ்நாடு அரசு ஒருபோதும் இதற்கு இணங்காது எனப் பிரகடனப்படுத்திவிட்ட பிறகும், இப்படி வறட்டுப் பேச்சு, வக்கணை தேவையா?
‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்’ என்று சூளுரைக்கும் முதலமைச்சர் ஆளும், அகிலம் வியக்கும் ஆட்சியில், இப்படி அரசியலமைப்புச் சட்ட விரோதப் பேச்சை ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் பேசலாமா?
மறைமுகமாக ஹிந்தி, சமஸ்கிருதம் திணிப்பு!
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் மறைமுக ஹிந்தி – சமஸ்கிருதத் திணிப்புக்கான இந்த முகமூடித் திட்டத்தை முறியடித்துக் காட்டுவோம்!
இம்மாதிரி பேச்சை மீண்டும், மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்து பேசுங்கள் ஒன்றிய அமைச்சரே!
2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணி ராஜபாட்டையில் வெற்றிக் கனி பறிக்க, அதுவே உரமாகி, நல்ல விளைச்சலைக் கொடுக்கும்.
உங்களது முகமூடியை, அந்த வீச்சின்மூலம் மக்கள் அகற்றிக் காட்டுவர் எம் மக்கள்.
இதில், அண்ணா தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?
இதிலும் அமித்ஷாவிடம் போய் ஆலோசனைகளைக் கேட்பதுதானா?
அல்லது அவர்களின் முந்தைய தலைவர்களின் நிலைப்பாடுதானா என்பதை அவர்கள் தெளிவுப் படுத்தட்டும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
22.9.2025