புதுடில்லி, செப். 21 2023 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஹிந்துத்துவ குண்டர்களால் தந்தை பெரியார் படம் சேதப்படுத்தப்பட்ட அதே இடத்தில், இந்த ஆண்டு அவரது 147 ஆம் பிறந்தநாள் விழா கோலா கலமாகக் கொண்டாடப்பட்டது.
2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் ‘ரிசர்வேஷன் கிளப்’ என்ற பெயரில் பெரியார் குறித்த கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்தனர். அப்போது ஏ.பி.வி.பி. அமைப்பினர் பெரியாரின் படத்தை சேதப்படுத்தியதோடு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழ்நாட்டு மாணவர்களையும் தாக்கினர். மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறும் மாணவர்களுக்கும் அவர்கள் இடையூறு செய்தனர்.
பெரியார் படம் ஊர்வலம்!
இந்த நிலையில் இந்த ஆண்டு தந்தை பெரியாரின் 147 ஆம் பிறந்தநாளின் போது ஜே.என்.யூ.வில் பிர்சா அம்பேத்கர் பூலே மாணவர் அமைப்பைச் (BAPSA) சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் இணைந்து, பெரியாரின் படத்தை ஊர்வலமாக எடுத்து வந்து, ‘பெரியாருக்கு வீரவணக்கம்!’ என்று தமிழில் முழக்கமிட்டு மரியாதை செலுத்தினர்.
ஏற்கெனவே பெரியார் படம் தூக்கி எறியப்பட்ட TEFLAS அரங்கில், அதே இடத்தில் அவரது படம் மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, ‘‘தனக்கு விளம்பரமே எதிரிகள்தான்’’ என்ற பெரியாரின் கூற்றை மீண்டும் மெய்ப்பித்திருக்கிறது.