நடப்போம் பெரியார் வழியில்!

1 Min Read

மூன்று அடிகளால்

உலகளந்த பெருமான்

என்று கூறுவது எல்லாம் – அடி

முட்டாள்களின் உளறல்!

தான் வைத்த ஒவ்வொரு அடியிலும்

ஆரியக் களையழிப்பு!

தேன் சுரக்கும் கல்வியறிவை

சுரக்க வைத்தார் பெரியார் என்பதுதான்

சுயமரியாதை மார்க்கத்தின் ஈர்ப்பு!

பெட்டையென்று பெண்களைப்

பேசிக் கிடந்த சுடுகாட்டு

மனிதர்களின் செவிக்கிழித்து

மானுடத்தில் சரி பகுதி

பெண்கள் என்ற பேரொலியை

எழுப்பிய எழுகதிரோன் பெரியாரன்றோ!

மூடத்தனத்தின் முட்காட்டில்

முடக்கப்பட்ட பகுத்தறிவை

முழு மூச்சில் தகர்த்தெறிந்து

முழு நிலா போல் மீட்டெடுத்த

மூலக் காரணத்தின் பெயர் பெரியாரன்றோ!

அரசுப் பதவிகள் கதவு தட்டி

வந்தபோதும்

‘கண் திறந்து பாரேன்’ என்று

விரட்டியடித்து

சமூகப் புரட்சி என்ற

புலிவேட்டையாடிய

புரட்சிக்கு மறுபெயர் தான்

தந்தை பெரியார்!

மனித மூளையின் நரம்புகளில்

பதிந்திருந்த மூலநோயாகிய கடவுள் மீதும்

கைவைத்து ஒரு ‘கைபார்க்கிறேன்!’

என்று எக்காளம் கொட்டி

இடியை இறக்கிய ஏந்தலுக்குப்

பெயர்தான் ஈரோட்டுப் பெரியார்!

மறைந்து அரை நூற்றாண்டு ஓடினாலும்

மடமையின் கழுத்தை நெரிப்பதிலும்

சமூக நீதிக் காற்றை வாரி இறைப்பதிலும்

ஆதிக்கக் கட்டு மானம்

எங்கு எழுந்தாலும்

அதனைத் தகர்த்து அழிப்பதிலும்

சமத்துவத் தென்றலைத்

தாலாட்டி உலாவச் செய்வதிலும்

இருக்கிறார் பெரியார்

தத்துவத் தூதராய்!

எங்கும் இருக்கிறார் பெரியார்

இருளைக் கிழிக்கும் ஈட்டி

முனையாய்ச் சிரிக்கிறார் பெரியார்.

உலகமயமாகிறார் பெரியார் – புது

உருவாக்கத்தின் சிற்பியாய்

உலகப்பன் கண்களில் ஜொலிக்கிறார்

உதையப்பராகவும் தேவையான தருணத்தில்

உதிக்கிறார் பெரியார்.

வெல்ல முடியுமா வெண்தாடி வேந்தரை?

வீழ்ச்சிகள் வெற்றியாகாது

வெற்றுரைகளும் போணியாகாது!

உண்மை மட்டும் இறுதியில் நிமிர்ந்து நிற்கும்

என்பதால் பெரியார் வாழ்கிறார், வாழ்வார்

நன்றே எனும் மூச்சுக்காற்றுத் தொடர

நடை போடுவோம் பெரியார் என்னும்

தடை உடைக்கும் பாதையைப் பற்றியே!

– கவிஞர் கலி.பூங்குன்றன் –

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *