புதுடில்லி, செப்.16- இந்தியாவில் புகைப்பழக்கம் பற்றிய பரபரப்பான புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மய்யங்களின் (சி.டி.சி.) தரவுகளின்படி, புகையிலை பழக்கத்தால் ஆண்டுதோறும் இந்தியாவில் 13 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இறக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. இந்தியாவில் புகையிலையின் சுமை மிகப்பெரியது, 10 இந்தியர்களில் ஒருவர் புகையிலை தொடர்பான நோய்களால் முன்கூட்டியே இறக்கிறார் என்று கணிக்கப்பட்டு உள்ளது.இந்தியாவில் புகைபிடிப்பதை கைவிடுபவர்களின் விகிதம் குறைவாகவே உள்ளது.
சுமார் 7 சதவீதம் பேர் மட்டுமே எந்த உதவியுமின்றி வெற்றிகரமாக புகைபிடிப்பதை விட்டுவிடுகிறார்கள்.புகையிலை தொடர்பான நோய்களுக்கு இந்தியா ஆண்டு தோறும் ரூ.1.77 லட்சம் கோடிக்கு மேல் செலவிடுகிறது.
உலகளவில், சிகரெட்டுகளுக்கு விவேகமான மாற்றாக நிகோட்டின் பைகள் பிரபலமடைந்து வருகின்றன. இந்த தயாரிப்புகள் இப்போது சுவீடன், நார்வே, அமெரிக்கா மற்றும் டென்மார்க் உள்பட 34 நாடுகளில் கிடைக்கின்றன. புகையற்ற நிகோட்டின் மாற்றுகள், புகையிலையில் உள்ள தார் மற்றும் எரிப்பை தடை செய்வதால், புகைபிடிப்பதைவிட 95 சதவீதம் வரை தீமை குறைந்ததாக உள்ளதாக இங்கிலாந்து ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது புகைபிடிப்பவர்கள் சிகரெட்டுகளை விட்டு விலகுவதை அதிகரிக்கும் என்று இந்திய மருத்துவர்களும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டலில், இந்த ஆண்டுக்குள் புகையிலை பயன்பாட்டை 30 சதவீதம் குறைக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்த இலக்கை, நிகோட்டின் மாற்று மூலம் வேகமாக எட்ட முடியும் என்று கூறப்படுகிறது.