இன்று (15.9.2025) அறிஞர் அண்ணாவின் 117ஆம் ஆண்டு பிறந்த நாள். இந்த நாளில் ‘அண்ணா நாமம் வாழ்க!’ என்று முழக்கமிடுவதால் மட்டும் அவருக்குப் பெருமை சேர்ப்பது ஆகாது!
நான் கண்டதும் கொண்டதும் ஒரு தலைவர் தந்தை பெரியார் தான் என்று சொன்னவர் அறிஞர் அண்ணா. அவர் அரசியலுக்குச் சென்றாலும், அவர்தம் சிந்தனையும், செயல்பாடுகளும் தந்தை பெரியாரின் கொள்கையை ஒட்டியே அமைந்திருந்தன.
தந்தை பெரியாருடன் வாழ்ந்த – இருந்து பணியாற்றிய காலத்தைத் தான் தனது ‘வசந்த காலம்’ என்று குறிப்பிட்டார் அறிஞர் அண்ணா.
18 ஆண்டுகள் தந்தை பெரியாரை விட்டுப் பிரிந்திருந் தாலும், 1967 தேர்தலில் தி.மு.க. பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பதற்குமுன் அவர் சென்ற இடம் தந்தை பெரியார் இருந்த திருச்சி பெரியார் மாளிகையை நோக்கித்தான்.
பலருக்கு ஆச்சரியமாகவும் பார்ப்பனர்களுக்கு அதிர்ச்சி யாகவுமே இருந்தது. காரணம் ஆச்சாரியாரின் (ராஜாஜியின்) சுதந்திரா கட்சியோடு 1967 சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி வைத்து நின்றார்.
அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்று ஆச்சாரியாரின் வழி காட்டுதலுடன் ஆட்சி நடக்கும் என்ற நப்பாசையுடன் இருந்த ஆரியத்துக்கு அடி வயிற்றைக் கலக்கும் அளவுக்கு இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.
இதுவரை ஆரியம் தான் தமிழர்களை விபீடணர்களாகப் பயன்படுத்தி வெற்றி கண்டு வந்தது; அந்த ஆரியத்துக்கே அதிர்ச்சியைக் கொடுத்தவர் அறிஞர் அண்ணா.
ஆச்சாரியார் ஒரு திட்டத்தைத் தனக்குள் வைத்திருந்தார்; அதை வெளிப்படையாகவே கூறியிருந்தார்.
‘விரைவில் மத்திய ஆட்சியில் சுதந்திரா, ஜனசங்கம், திமுக வந்து விடும். இந்த மூன்று கட்சிகளும் நன்றாக அய்க்கியமாகி விடும். இந்தக் கட்சிகளிடையே வேறுபாடுகள் இருப்பதாகக் கூறுவது மேலுக்குத்தான்; உள்ளே மூன்று கட்சிகளும் ஒரே நோக்கமுடையவை.
சுதந்திரா கட்சி தேசப் பொருளாதாரத்தை நன்கு உணர்ந்தது; ஜனசங்கம் மக்களை ஊக்குவிப்பதிலும் ஒற்றுமையை வளர்ப்பதிலும் அக்கறை கொண்டது.
தி.மு.க.வும் அப்படித்தான். ஆனால் தமிழ்நாட்டில் நிலைமை வேறு மாதிரியாக இருப்பதால் தி.மு.க. தமிழ்நாட்டிலேயே இருக்கட்டும்.
மத்திய ஆட்சியில் இந்த மூன்று கட்சி கூட்டாட்சி ஏற் பட்டதும், கஷ்டங்கள் குறையும்; மோசங்கள் நீங்கும்; அதுவரை எப்படிக் காலந் தள்ளுவது என்று கவலைப்படாதீர்கள். கடவுள் அதற்காக அருள் செய்வான்’ என்று நினைத்திருந்த எண்ணத்தில் மண் விழுந்தது.
ஆட்சி அமைத்த அண்ணா அவர்கள் சட்டப் பேரவை உறுப்பினர் முனுஆதி தந்தை பெரியாருக்குத் தியாகிகள் மான்யம் அளிக்கப்படுமா? என்று கேள்வி கேட்ட நேரத்தில், ‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை தான்!’ என்று முதலமைச்சர் அண்ணா சொன்ன வரிகள் தமிழ் நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்கவையாகும்.
சொன்னது மட்டுமல்ல; சொன்னபடியே செய்தும் காட்டியவர். அவர் முதல் அமைச்சராக இருந்தது குறைந்த காலமே (698 நாட்கள்தான்) என்றாலும், அந்தக் குறைந்த காலத்தில் மூன்று முத்தான சாதனைகளை என்றென்றும் அழிக்கப்பட முடியாத சாதனைகளை செய்து காட்டினார்.
சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்டவடிவம், சென்னை மாநிலத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டல், தமிழ்நாட்டில் மூன்று மொழிக்கு இடம் கிடையாது; தமிழும், ஆங்கிலமும் மட்டுமேதான் என்ற இந்த மூன்று சட்டங்கள்மீதும் எவராலும் கை வைக்க முடியாது.
‘‘இந்த மூன்றிலும் யாரும் கை வைக்காத வரை இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆண்டு கொண்டிருக்கிறான்!’’ என்று சொன்னவை அண்ணாவுக்கே உரித்தான அர்த்தம் பொதிந்த சொல்லாடல்கள் ஆகும்.
அரசியலில் அண்ணா அவர்கள் பயணித்தாலும் தான் ஏற்றுக் கொண்ட தந்தை பெரியார் கொள்கைகளிலிருந்து ஓர் இம்மியும் விலகினார் இல்லை. எந்தக் கோயிலுக்கும் சென்றதில்லை; அவர் நெற்றியில் எந்த மதச் சின்னமும் இல்லாத வகையில் பரிசுத்தமாகவே இருந்தது.
அண்ணா பெயரைக் கட்சியிலும், உருவத்தைக் கொடியிலும் பொறித்துக் கொண்டிருக்கும் ஒரு கட்சி அண்ணாவின் கொள்கைக்குச் சற்றும் சம்பந்தமே இல்லாத வகையில் அண்ணாவை அவமதிக்கும் தன்மையில் சற்றும் வெட்கமில்லாமல் நெற்றியில் திருநீறு, குங்குமம், பூசிக் கொண்டும், கையில் வண்ண வண்ண கயிறுகளைக் கட்டிக் கொண்டும் திரிகிறார்களே, இந்த வெட்கக் கேட்டை என்னவென்று சொல்லுவது!
அண்ணா பெயரைக் கொண்ட கட்சி, தன் உள்கட்சிப் பிரச்சினைகளைத் தீர்க்க – அண்ணா, திராவிடக் கொள்கைக்கு நேர் எதிரான சித்தாந்தத்தைக் கொண்ட ஒரு கட்சியிடம் தண்டனிட்டுக் கிடப்பது கறைபடிந்த அத்தியாயம் ஆகும்.
இதைத் தட்டிக் கேட்க அக்கட்சியில் ஒரே ஒருவரைக் கூடக் காண முடியாதது தலைகுனியத் தக்கதாகும்.
அண்ணா காலத்தை வென்று வாழ்வார், வாழ்க அண்ணா!