நீதிக்கட்சி, அதன் தொடர்ச்சியாக அண்ணா, கலைஞர் ஆட்சி வழியில் ‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தி வருகிறார் நமது முதலமைச்சர்!

4 Min Read

குறுகிய காலத்தில் முப்பெரும் சாதனைகளைப் படைத்தவர் முதலமைச்சர் அண்ணா!
அண்ணா மறைந்தாலும், கொள்கையால் வாழ்கிறார், வாழ்வார்!
அறிஞர் அண்ணா பிறந்த நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

நீதிக்கட்சி தொடங்கி, அண்ணா, கலைஞர், தளபதி மு.க.ஸ்டாலின் ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சியாக நடைபோட்டு வருகிறது. குறுகிய காலமே அண்ணா ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், அழிக்க முடியாத முப்பெரும் சாதனைகளைப் படைத்தார் – உடலால் மறைந்தாலும், கொள்கையால் என்றும் வாழ்வார் அண்ணா என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இன்று (15.9.2025) அறிஞர் அண்ணாவின் 117 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா!

பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார் என்ற பேராசான் தந்த பெரும் சிறப்புக்குரிய சரித்திரச் சாதனையாளர்.

1920 இல் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சி –
அதன் தொடர்ச்சியே அண்ணா ஆட்சி!

1920 ஆம் ஆண்டு ‘ஜஸ்டிஸ் கட்சி’ என்று வெகு மக்களால் அழைக்கப்பட்ட நீதிக்கட்சியின் ஆட்சி நடைபெற்றது. ‘அந்த ஆட்சியை 500 அடி ஆழக் குழியில் புதைத்துவிட்டோம்! இனி, எமது ஏகபோக சாம்ராஜ்ஜியம்தான்’ என ஆரிய ஆணவத்துடன் பேசியவர்களுக்குத் தமது ஆட்சிமூலம் பதிலடி கொடுத்தார் முதலமைச்சர் அண்ணா. ‘‘ஆயிரம் அடி  ஆழத்தில் உங்களைப் புதைக்கிறோம்; காரணம், தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம்’’ என்று அறிஞர் அண்ணா அவர்கள், பெரியாரின் கொள்கை வீச்சுகளை நாடெங்கும் பேசியும், எழுதியும், கலை உலகத்தைப் பயன்படுத்தியும், அரசியல் அடிக்கட்டுமானத்தோடு, 1967 இல் மகத்தான  ‘திராவிட ஆட்சி’ மாளிகை அமைத்தார். அதனை தனது ஆசானுக்கே காணிக்கை என்றார். ‘இப்படி ஓர் அதிசயமா?’ என்று உலகத்தை வியக்க வைத்த வித்தகர் நமது பேரறிஞர் அண்ணா.

பல பல்கலைக் கழகங்களின்
கூட்டுப் பேரவை அறிஞர் அண்ணா!

அவர் பல பல்கலைக் கழகங்களின் கூட்டுப் பேரவை; பூட்டுப் போட்டுத் திறக்க முடியாதிருந்த மனங்களைக்கூட, அறிவும், செறிவும் வாய்ந்த தனது ஆற்றல், ஆளுமைமூலம் திறந்தவர். திராவிடரின் மானங்காக்கத் தந்தை பெரியார் என்ற தனது தலைவரின் கொள்கைகளை வளர்ந்தோங்கச் செய்து, வாகை சூடி வரலாறு படைத்த வையத்து அதிசயம் நம் அண்ணா!

குறுகிய காலம் மட்டுமே அவரது நேரிடை ஆட்சியை நாம் பெற்றோம். இயற்கையின் கோணல் புத்தியால் அண்ணாவை இழந்தோம்.

அண்ணாவின் அழிக்க முடியாத முப்பெரும் சாதனைகள்! 

பல ஆண்டுகள் நிறைவேறாத லட்சியங்களை அந்தக் குறுகிய காலத்தில் நிறைவேற்றி நிலைக்கச் செய்த அரசியல் விற்பன்னர் அவர்.

கொள்கைகளை வேட்டியாகவும், பதவிகளை மேல்துண்டாகவும் உவமித்துக் காட்டி, ‘எமது பாதை எப்போதும் தந்தை பெரியார்   பாதைதான்’ என்பதைச் செயல்மூலம் நிலை நிறுத்தி, கொள்கை எதிரிகளை வீழ்த்தினார்.

அய்யாவுக்குக் காணிக்கை ஆக்கிய அறிஞர் அண்ணா ஆட்சியின் முப்பெரும் சாதனைகள் – எப்படிப்பட்ட காலத்தை வென்ற சாதனைகள், அடடா!

  1. சுயமரியாதைத் திருமணம் செல்லும் சட்டம்!
  2. தாய் மண்ணுக்குத் ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றம்!
  3. தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கை!

இவற்றையெல்லாம் தாண்டி, மாநில உரிமைகளுக்காக டில்லி நாடாளுமன்றத்தில் அமைதிப் புரட்சியாக எழுப்பப்பட்ட முழக்கங்கள் மூலம் அதிர வைத்து, அன்றைக்கு இந்திய ஒன்றியத்தைச் சிந்திக்கச் செய்திட அடித்தளம் இட்டார் அண்ணா!

அண்ணா, கலைஞருக்குப் பின்
‘திராவிட மாடல்’ ஆட்சி!

தனக்குப் பின்னால் தந்தை பெரியாரின் குருகுல மாணவர், செயல்திறன் மிக்க பல்கலைக் கொள்கலன் கலைஞரை அரசியல் ஆளுமைமிக்கவராக உருவாக்கினார். கொள்கையாளர் கலைஞர் அவர்களின் மறைவுக்குப் பின்னர், பதற்றமேயின்றி, முழுதும் பக்குவப்பட்ட ஒப்பற்ற திராவிட நாயகனாக, ‘திராவிட மாடல்’ ஆட்சியை நடத்தி, திக்கெட்டும் சாதனைகளால் புகழ்பெற்று, சமூகநீதி என்ற மூலக் கொள்கைகளுக்கு, மேலும் வலு சேர்த்து, சுயமரியாதை இயக்கப் பெருமை, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என்ற வரிசையில் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கொள்கைச் சமரசமின்றி ஆட்சி நடத்துகிறார். பீடு நடை போட்டு, அவரது ‘திராவிட மாடல்’ ஆட்சி திக்கெட்டும் புகழ் சேர்ப்பது மட்டுமல்ல – உலகத்தார் கவனத்தைத் ‘திராவிட உரிமை முழக்கப் பாசறையாக’ ஈர்க்கிறது.

‘‘ஆட்சி என்பது காட்சியல்ல –

மீட்சிக்காகவே’’ என நாளும் ஓய்வறியா ஒப்பற்ற உழைப்பாளராகி, பெரியாரின் பெரு விழுதாக நாளும் பலமாகி, அண்ணாவின் ஆட்சியினை அகண்டமாக்கி வருகிறார்!

எனவே, பெரியார் என்ற கலங்கரை வெளிச்சத்தில், பாதை மாறாமல் பயணித்து, அரசியலில் அறிஞர் அண்ணா ஆட்சி, சமூகவியலில் பெரியாரின் கொள்கைப் பயணக் களங்கள், கலைஞர்  வழியில் ‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தி வருகிறார் – நமது முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள். திராவிட இளைஞர்களை கொள்கைப் பாசறையாக்கி வருகிறார், நமது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். விழுதுகள் நாளும், பழுதில்லாமல் நிலைப்பெற்று சுயமரியாதை என்னும் ஆலமரத்திற்கு வலுவூட்டுகின்றன;  பாதை மாறா பயணத்தினால் வெற்றிப் படிக்கட்டுகளில் உயர்ந்து நிற்கின்றன!

அதற்கு அடிப்படை அறிஞர் அண்ணாவின் அரும்பெரும் சாதனை!

அண்ணா என்றும் வாழ்கிறார்; வாழ்வார்!

வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!

 கி.வீரமணி

தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
15.9.2025

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *