இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த நட்பு நாடுகளுடன் சேர்ந்து நடவடிக்கை கத்தார் எச்சரிக்கை

3 Min Read

தோஹா, செப். 13- இஸ்ரேலின் மீது தாக்குதல் நடத்த நட்பு நாடுகளுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கத்தார் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலையடுத்து, அந்நாட்டு பிரதமர் அப்துல்ரஹ்மான் அல் தானி, இஸ்ரேலின் அட்டூழியம் மற்றும் கொடுமைகள் தொடர்வதைத் தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்க அரபு – இஸ்லாமிய உச்சி மாநாடு நடைபெறும். அதில் இஸ்ரேல் மீதான பதிலடி தாக்குதல் குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த வளைகுடாவும் அபாயத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கத்தார் தலைநகர் தோஹாவின் மீது ஹமாஸின் தலைவர்களைக் குறிவைத்து, கடந்த செப்.9 ஆம் தேதி இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. அத்துமீறி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ஏராளமான நாடுகளின் அரசுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இஸ்ரேல் மீது கத்தாரும் அதன் நட்பு நாடுகளும் தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் மூன்றாம் உலகப் போர் அபாயம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

காங்கோ:
படகு விபத்தில் 86 பேர் உயிரிழப்பு

காங்கோ, செப். 13- மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குளானதில் 86 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அசோசியேட்டட் பத்திரிக்கை செய்தி நிறுவனம் கூறுகையில், வடமேற்கு ஈக்வடேயுா் மாகாணம், பாசங்கூசு பகுதியில் இந்த விபத்து நேரிட்டதாகத் தெரிவித்தது. உயிரிழந்தவா்களில் பெரும்பாலானவா்கள் மாணவா்கள் என்று காங்கோ அரசுக்குச் சொந்தமான செய்தி நிறுவனம் கூறியது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து உடனடி தகவல் இல்லை. இருந்தாலும், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றதும், இரவு நேரத்தில் போதிய வெளிச்சமின்றி அந்த விசைப் படகு இயக்கப்பட்டதும் விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினா். இது போன்ற காரணங்களால் காங்கோவில் அடிக்கடி படகு விபத்துகள் நேரிடுகின்றன.

தென்னாப்பிரிக்காவில்
மனைவியின் குடும்பப் பெயரை கணவர் பயன்படுத்தலாம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டர்பன், செப். 13- தென்னாப்பிரிக்காவில் கணவர்கள் தங்கள் மனைவியின் குடும்பப் பெயரைப் பயன்படுத்துவதற்கு முன்பு தடை இருந்தது. தற்போது, அந்தச் சட்டம் தென்னாப்பிரிக்காவின் அரசமைப்பு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக கணவன் மனைவி இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். ஆரம்பத்தில், கீழ் நீதிமன்றம் சட்டத்தை ரத்து செய்தது. பின்னர், அரசமைப்பு நீதிமன்றமும் அதை உறுதிப்படுத்தியது.

காலனித்துவ ஆட்சியின்போது அறிமுகப்படுத்தப் பட்ட அந்தச் சட்டம் பாலினப் பாகுபாட்டை ஊக்குவிப்பதாக நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டனர். நீதிபதிகள் மேலும் கூறுகையில், பாலினச் சமத்துவத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் தென்னாப்பிரிக்கா பல வெற்றிகளைப் பெற்றிருந் தாலும், ஒரு பாலினத்தைப் பற்றிய ஒரே மாதிரியான கருத்துகளைப் பரப்பும் சட்டங்கள் இன்னமும் நடைமுறையில் உள்ளன என்று தெரிவித்தனர்.

அமெரிக்காவிலிருந்து நாடு
திரும்பிய தென் கொரிய ஊழியர்கள்

டிரம்ப்பின் கோரிக்கையை நிராகரித்தனர்

வாசிங்டன், செப். 13- அமெரிக்காவில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தென் கொரிய ஊழியர்கள், அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு, தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளனர்.

ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ஹுண்டாய் கார் மின்சார மின்கல ஆலை கட்டுமானத்தில் பணிபுரிந்த 475 ஊழியர்கள் அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டனர். இவர்களில் 300க்கும் மேற்பட்டோர் தென் கொரியர்கள் ஆவர்.

முதலில், அவர்கள் “சட்டவிரோத வேற்றுக் கோள் வாசிகள்” என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். பின்னர், அமெரிக்காவிலேயே தங்கி, அமெரிக்கர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு அவர்களிடம் கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை நிராகரித்த ஊழியர்கள், “நாங்கள் அடிமைகள் அல்ல” என்று கூறி, புறப்படத் தயாராகினர். உடல்நலம் பாதிக்கப்பட்ட ஒருவரைத் தவிர, மற்ற அனைவரும் அமெரிக்காவை விட்டுப் புறப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *