மார்க்சிய அறிஞர் எஸ்.வி.ராஜதுரை, “Periyar – Caste, Nation & Socialism” என்கிற புதிய நூலை எழுதியுள்ளார். பெரியார் மறைந்து 50 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும், அவர் குறித்த தவறான பிம்பம் இன்னும் பரவலாக பரப்பப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறது. இந்தப் பின்னணியில் தன் உடல் பிரச்சினைகளைத் தாண்டி இந்தப் புதிய நூலை எஸ்.வி.ஆர். எழுதியுள்ளார். கேள்வி -பதில் வடிவில் எழுதப்பட்டுள்ள இந்த நூலில் அம்பேத்கர்-பெரியார் பற்றாளரான ‘வித்யா பூஷண்’ ராவத் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
பிள்ளையார் சிலையை உடைத்தவர், இந்துக் கடவுள்களை விமர்சிப்பவர், இந்தி மொழி எதிர்ப்பாளர் எனக் குறுகிய நோக்கிலேயே பெரியார் பெரும்பாலும் அடையாளப்படுத்தப்பட்டார். ஆனால் ‘பெரியாரின் சுயமரியாதை இயக்க’மும் ‘திராவிடர் கழக’மும் எப்படித் தமிழ்ச் சமூகத்தை உருமாற்றின என்பதை இந்த நூலில் விவரித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் வடஇந்தியாவில் அன்றைய ‘அம்பேத்கரியர்கள்’ ஏற்பாடு செய்த பல கூட்டங்களில் பெரியார் பேசியது, அம்பேத்கருடன் பெரியார் ஒன்று படும்-முரண்படும் புள்ளிகள், கம்யூனிஸ்ட் களுடனான அவருடைய தொடர்பு-விமர்சனங்கள், ஜாதியை ஒழிப்பது சார்ந்த அவருடைய வாழ்நாள் போராட்டம், சமதர்ம சமுதாயம் உருவாக வேண்டும் என்கிற அவருடைய உலகளாவிய பார்வை ஆகியவை சார்ந்து இந்த நூலில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. பெரியாரின் பொது வாழ்க்கை பபணத்தை உத்வேகமூட்டும் வகையில் முன் வைக்கும் இந்த நூல், அவர் எப்படி ஓர் உயிர்ப்புமிகு அறிவுஜீவியாக (organic intellectual) செயல்பட்டார் என்பதை விவரிக் கிறது.
பெரியார் குறித்து தமிழ்நாட்டிலேயே இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப் படாத நிலையில், தமிழ்நாட்டுக்கு வெளியேயும் குறிப்பாக வடஇந்தியா விலும் பெரியார் குறித்து தவறான பிம்பம் வலுவாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெரியார் குறித்து குறிப் பிடத்தக்க நூல்கள் ஆங்கிலத்தில் தாமதமாக வெளியானதும் இதற்கு ஒரு காரணம், இப்படிப் பெரியாருக்கு எதிராகக் காலம்காலமாக முன்வைக்கப்பட்டுவரும் அடிப்படை அற்ற குற்றச்சாட்டுகளைத் தீவிர மாக இந்த நூல் மறுக்கிறது. மும்பையைச் சேர்ந்த பீப்பிள்ஸ் லிட்டரேச்சர் பப்ளி கேஷன்ஸ் வெளியிட்டுவரும்’ உரையாடல் வரிசை’யில் மூன்றாவது நூலாக இது வெளிவந்துள்ளது.
தலித் மக்கள் சார்ந்த பெரியாருடைய பார்வை இந்த நூலில் முன்வைக்கப் பட்டுள்ளவிதம், பெரியாரைமறுக்கும் அம்பேத்கரியவாதிகளுக்கு பதில் தரும் வகையில் அமைந்துள்ளது. ‘செங்குத்தான மலையில் தலைகீழாக ஏறுவதைப் போன்றது’ என்று பெரியார் குறிப்பிட்ட ஜாதி ஒழிப்பு பற்றியும் விரிவாகப் பேசியுள்ளது.
சுயமரியாதையுடன் வாழ்தலை முதன்மைப் படுத்தி சமதர்ம சமுதாயத்தைக் காண வலியுறுத்திய பெரியாரை பற்றிய இந்த ஆங்கில நூல் அவரை இன்னும் பரவலாக எடுத்துச்செல்லும்.
நன்றி: ‘இந்து தமிழ்திசை’ 13.9.2024