டில்லியில் உள்ள கார் விற்பனை நிலையத்தில் புதிய மஹிந்திரா காரை வாங்கிய பெண் ஒருவர் பூஜை செய்து திருஷ்டி கழிக்க சக்கரத்தில் எலுமிச்சம் பழம் வைத்து ஓட்ட முயன்ற போது கார் வழுக்கி விற்பனை நிலையத்தின் முதல்மாடியின் கண்ணாடியை உடைத்து கீழே விழுந்ததால் காரும் கார் விற்பனை நிலையமும் பெரும் சேதமடைந்தன. இதனால் கார் ஷோரும் நிறுவனத்தினர் ரூ.17 லட்சம் இழப்பீடு தருமாறு அப்பெண்மணிக்கு அறிக்கை அனுப்பி உள்ளனர்.
டில்லியில் உள்ள மஹிந்திரா கார் விற்பனை நிலையத்தில். மானி என்ற பெயருடைய பெண் ஒருவர் புதிதாகக் கார் ஒன்றை வாங்கி உள்ளார். கார் வாங்கிய பிறகு அதற்குப் பூஜை போட்டு திருஷ்டி கழிக்க சக்கரத்தில் எலுமிச்சைப் பழம் வைத்து ஏற்ற முயன்றுள்ளார்.
கார் முதல்மாடியில் இருந்ததால் காரைச் சிறிது பின்னால் செலுத்தி எலுமிச்சைப் பழத்தின் மீது ஏற்ற முயன்ற போது புதிய டயர் மற்றும் வழுக்குத் தரை போன்ற காரணங்களால் காருக்குப் பிடிமானம் கிடைக்காமல் எலுமிச்சைப் பழத்தின்மீது ஏறிய பிறகு வழுக்கி, கட்டுப்பாட்டை இழந்து,விற்பனை நிலையத்தின் முன் பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் மானி மற்றும் உடனிருந்த இருவரும் கீழே விழுந்தனர். இருவருக்கும் காயமின்றி தப்பினர். காயங்களுடன் மானி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்த விபத்தில் வாகன விற்பனை நிலையத்தின் முதல் தளத்தின் முற்பகுதி முற்றிலும் சேதமடைந்துள்ளது. அழகுக்காக வைக்கப்படும் வேலைப்பாடு மிகுந்த தடுப்புகள் அனைத்தும் இடிந்து விழுந்துள்ளன. மேலும் முதல் மாடியின் கண்ணாடி உடைந்து நொறுங்கிவிட்டது.
இதனால் கார் விற்பனையகத்திற்கு ரூ.17 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என, அஜாக்கிரதையால் விபத்தை ஏற்படுத்திய அப்பெண்ணிடம் கார் விற்பனை நிறுவனம் ரூ.17 லட்சம் வரை இழப்பீடு கேட்டு உள்ளது.
நவீன தொழில்நுட்பம் நிறைந்த வாகனத்தைப் பயன்படுத்தும்போது, பழமையான மூடநம்பிக்கை களைப் பின்பற்றியதால் இந்த விபத்து நிகழ்ந்தது.
நம் நாட்டுப் படிப்பு என்பது வயிற்றுப் பிழைப்புக்கு லைசென்ஸ் என்பார் தந்தை பெரியார்.
அது எத்தகைய உண்மை என்பதை மேற்கண்ட நிகழ்ச்சி வெளிப்படுத்தவில்லையா?
கார் விற்பனை நிறுவனத்தை நடத்துபவர்கள்கூட இதனைத்தான் செய்கிறார்கள். எந்தக் காலத்திலோ யாரோ ஒரு கிறுக்கன் செய்த மூடத்தனம், பரம்பரையாகத் தொடர ஆரம்பித்து விட்டது.
காருக்கு முன்னால் கயிற்றில் ஸ்படிகம் முதலியவற்றைக் கட்டித் தொங்க விடுவதும் உண்டு.
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய நவக்கிரகங்களை குறிக்க ஒன்பது வகையான கற்களைத் தொங்க விடுகிறார்கள்.
இப்படித் திருஷ்டிகளைத் தொங்க விடுகிறார்களே, அந்தக் கார்கள் விபத்துக்கு ஆளாவதே கிடையாதா? பயணித்தவர்கள் மரணம் அடைவதே கிடையாதா?
மனிதனுக்குத் தேவை பகுத்தறிவு என்று தந்தை பெரியார் திருப்பித் திருப்பி, அழுத்தம் அழுத்தமாகச் சொல்லி வந்ததன் உண்மை புரிகிறதா?