வாரணாசி, செப்.11 கல்லூரி மாணவிகளைப் பற்றி அவதூறாகப் பேசிய சாமியார் அனிருத்தாச்சாரியாவை எதிர்த்து, பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக மாணவிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகள், அவரது படத்தைத் செருப்பால் அடித்து ஊர்வலமாக எடுத்துச் சென்று தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
சர்ச்சையை ஏற்படுத்தியது!
மதுராவில் உள்ள விருந்தாவன் என்ற இடத்தில் அரிமடம் என்ற மடத்தின் தலை வரான அனிருத்தாச்சாரியா, நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ‘‘கல்லூரிக்குச் செல்லும் பெண்கள் நடத்தை கெட்டவர்கள். அவர்கள் தங்களது குடும்பத்திற்கும், வருங்கால கணவருக்கும் நல்லவர்களாக நடந்துகொள்ள மாட்டார்கள்’’ என்று கூறினார். மேலும், கல்லூரிப் பெண்களை ‘‘தெருவில் இருக்கும் பெண் நாய்களோடு’’ ஒப்பிட்டுப் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சாமியாரின் இத்தகைய அருவருப்பான பேச்சு கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக மாணவிகளும், பேராசிரியர்களும் இணைந்து அனிருத்தாச்சாரியாவின் உருவப்படத்தை கல்லூரிக்கு வெளியே எடுத்து வந்து செருப்பால் அடித்தனர்.
மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்!
இதற்கிடையில், சாமியாரின் ஆதரவா ளர்கள் பெண்களின் கூட்டத்தில் அத்துமீறி நுழைந்து அவரது படத்தைப் பறித்துச் சென்றனர். ஆனால், ‘‘அனிருத்தாச்சாரியா மீது வழக்குப் பதிவு செய்யப்படும் வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு அகல மாட்டோம்’’ என்று கூறி மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறை, சாமியாருக்குச் சாதகமாகப் பேசி, போராட்டத்தைக் கைவிடச் சொன்னாலும், மாணவிகள் பின்வாங்காமல் தங்களது கோரிக்கையில் உறுதியாக உள்ளனர்.
இந்த நிலையில், ‘‘நான் சாஸ்திரத்தில் உள்ளதைத் தான் பேசினேன், என்னைப் பற்றித் தவறாக செய்தி பரப்பியவர்கள் மீது புகார் கொடுக்க உள்ளேன்’’ என்று கூறிய அனிருத்தாச்சாரியா, ‘‘நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை. எனக்கு எதிராகப் போராடுபவர்கள் காசை வாங்கிக் கொண்டு இவ்வாறு செய்கின்றனர். ஹிந்து விரோதிகளின் வலையில் அவர்கள் வீழ்ந்து விட்டனர்’’ என்று கூறினார்.
சாமியார் பிரேமானந்தா
மற்றொரு சாமியார் பிரேமானந்தா என்பவர், ‘‘போராடும் பெண்கள் சாக்க டைப் புழுக்கள். இவர்களுக்கு, நாம் நல்லதைச் சொன்னாலும் அவர்களுக்கு நாற்றமாகத்தான் இருக்கும்’’ என்றார்
மழுப்பலாகக் கூறினார்
அனிருத்தாச்சாரியா என்ற இதே சாமியார், 2023 ஆம் ஆண்டில் டில்லியில் பாலியல் சீண்டல் குற்றம் செய்த பாஜக மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ்பூசனுக்கு எதிராகப் போராடிய வீரங்கனைகளைத் தவறாகப் பேசி, பிறகு ‘‘எனது கருத்து திரிக்கப்பட்டது’’ என்று மழுப்பலாகக் கூறியதும் குறிப்பிடத்தக்கது.