ஒன்றிய பா.ஜ.க. அரசின் யூ.ஜி.சி. (UGC) வெளியிட்டுள்ள (LOCF) காவி வரைவு அறிக்கையைக் கண்டித்து
சென்னை, செப்.8 ஒன்றிய பா.ஜ.க. அரசின் யூ.ஜி.சி. (UGC) வெளியிட்டுள்ள (LOCF) காவி வரைவு அறிக்கையைக் கண் டித்து சென்னையில் திராவிட மாணவர் கழக (DSF) நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் கண்டன உரையாற்றினார்.
ஒன்றிய பாஜக அரசின் யூ.ஜி.சி. (UGC) வெளியிடப்பட்டுள்ள எல்.ஓ.சி.எஃப் (LOCF) காவி வரைவு அறிக்கையைக் கண்டித்து இன்று (8-9-2025) காலை 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றிய அரசு திணித்த தேசியக் கல்விக் கொள்கையின் விளைவாக நாளும் கல்வித்துறையின் மீது தாக்குதல்கள் நடைெபற்ற வண்ணம் இருக்கின்றன.
அண்மையில் பல்கலைக்கழக மானியக் குழுவால் (‘UGC – University Grants Commission’) வெளியிடப்பட்ட LOCF எனப்படும் ‘கற்றல் விளைவு அடிப்படையிலான பாடத்திட்டம் கட்டமைப்பு’ வரைவு பாரம்பரிய பாரத அறிவை முன்னிறுத்துதல் என்ற பெயரில் பிற்போக் குத்தனமான காவிக் கொள்கையின் கூறுகளை வெளிப்படையாகக் கொண்டி ருக்கிறது. ‘‘இந்தப் பாடத்திட்டத்தில் சூரிய சித் தாந்தம் போன்றவற்றைக் கொண்டு வந்து, யுகங்கள், கல்பங்கள் முதல் பிரம்மாவின் நாள் (பிரம்ம வர்சா) வரையிலான அண்ட காலச் சுழற்சிகளையும், விஷ்ணு வர்சா, சிவ வர்சா போன்ற தெய்வீக சுழற்சிகளையும் விளக்கும் பாடங்கள் இடம் பெறுமாம். இடம்பெற வேண்டுமாம்.
‘ஜோதிடம் அறிவியல் அல்ல’ என்று நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டனரே! இன்றும் அறிவியல்படி நிரூபிக்க முடியாத முட்டாள்தனத்தின் முடைநாற்றம் வீசும் மோசடியை மாணவர்களுக்குத் திணிக்கப்போகிறார்களா? சில ஆண்டுகளுக்கு முன்னால் நோபல் பரிசு பெற்றவரான அறிவியல் அறிஞர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், ஜோதிடம் என்பது போலித்துறை என்று வெளிப் படையாக அறிவித்தாரே! அதைத்தான் இந்த 21ஆம் நூற்றாண்டில் மாணவர்களுக்குக் கற்றுத்தரப் போகிறார்களா?
அண்மையில் இந்தியாவின் சுதந்திர நாள் விழாவின் போதும், இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட காந்தியார், சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் ஆகியோருடைய படங்களுக்கு மேல் சாவர்க்கரின் படத்தைப் போட்டு தங்களது ஹிந்துத்துவ புத்தியை காட்டிக் கொண்டனர் ஒன்றியத்தை ஆளும் பாஜகவினர்.
எனவே இந்த ஒன்றிய பாஜக அரசின் எல்.ஓ.சி.எப் வரைவு அறிக்கையை கண்டித்து திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், சென்னை, விழுப்புரம், சேலம், திருச்சி, மதுரை, தஞ்சை ஆகிய தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் 8.9.2025 அன்று நடை பெறும்’’ என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 4.9.2025 அன்று அறிவித்தார். அதன்படி இன்று (8.9.2025) மேற்கண்ட முக்கிய நகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திராவிடர் மாணவர் கழகம், திராவிடர் கழக இளைஞரணி, மகளிர் பாசறைத் தோழர்கள் உள்பட அனைத்து அணிகளின் தோழர் – தோழியர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று ஒன்றிய பாஜக அரசின் காவிக் கொள்கை திணிப்பைக் கண்டித்து ஒலி முழக்கமிட்டனர்.
கழக துணைத் தலைவர் கண்டன உரை நிகழ்த்தினார்
இந்த ஆர்ப்பாட்ட விளக்க கண்டன உரையை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நிகழ்த்தினார். பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் தேவ.நர்மதா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பெரியார் யுவராஜ் வரவேற்புரையாற்றினார்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், செயலாளர் ந.இராஜேந்திரன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், ஆவடி மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன், செயலாளர் க.இளவரசன், கும்முடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன், செயலாளர் ஜெ.பாஸ்கரன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் செம்பியன், மாவட்டச் செயலாளர் நரசிம்மன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வே. பாண்டு, செயலாளர் உ.விஜய் உத்தமன்ராஜ், மாநில மகளிரணி துணைச் செயலாளர்கள் இறைவி, பெரியார் செல்வி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர்.
திராவிட மாணவர் கழகம், இளைஞரணி, திராவிட மகளிர் பாசறை ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்ட நிறைவில் வடசென்னை மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் த.மரகதமணி நன்றியுரையாற்றினார்.