புதுடில்லி, செப்.4- மேனாள் பிரதமர் நேரு வசித்த முதலாவது அதிகா ரப்பூர்வ பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
டில்லியில் மோதிலால் மார்க் பகுதியில், மறைந்த பிரதமர் நேரு வசித்த பங்களா உள்ளது. அதுதான் அவரது முதலாவது அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்தது. அந்த பங்களா தற்போது ராஜஸ்தான் அரச குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்குமாரி கக்கார், பினா ராணி ஆகியோர் வசம் உள்ளது. அவர்கள் பங்களாவை விற்பதற்காக கடந்த சில மாதங்களாக விலை பேசி வந்தனர். அவர்கள் பங்களாவுக்கு ரூ.1,400 கோடி விலை நிர்ணயித்தனர். உள்நாட்டு மதுபான தொழிலில் கோலோச்சும் ஒரு தொழில் அதிபர் ரூ.1,100 கோடிக்கு அதை பேசி முடித்துள்ளார். இது, நாட்டின் விலை உயர்ந்த சொத்து பரிமாற்றமாக கருதப்படுகிறது.
இதையடுத்து, சட்டப்படி மேற்கொள்ள வேண்டிய பணிகளை அவர் சார்பில் ஒரு சட்ட ஆலோசனை நிறுவனம் செய்து வருகிறது. அந்நிறுவனம் ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மேற்கண்ட சொத்து மீது யாராவது உரிமை கோர விரும்பினால், 7 நாட்களுக்குள் உரிய ஆவணங்களுடன் அணுகுமாறு கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பங்களா, 28 சதுரகி.மீ. பரப்பளவு கொண்ட லுட்யன்ஸ் பங்களா மண்ட லம் என்ற முக்கிய பகுதியில் அமைந்துள்ளது. அங்கு சுமார் 3 ஆயிரம் பங்களாக்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றில் ஒன்றிய அமைச்சர்கள், நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் வசித்து வருகிறார்கள். அங்குள்ள சுமார் 600 பங்களாக்கள், நாட்டின் பெரும்பணக்காரர்கள் வசம் உள்ளன.
விற்பனை செய்யப்பட்டுள்ள நேரு பங்களா அமைந்துள்ள இடம், 3.7 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த விற்பனை பற்றி அறிந்த ஒருவர் கூறுகையில், “மிக முக்கியமான இடம், முக்கிய பிரமுகர் அந்தஸ்து, பிரமாண்ட பகுதி ஆகிய காரணங்களால் இங்குள்ள சொத்துகள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால், விலை அதிகம் என்பதால், ஒரு சில பெரும் பணக்காரர்கள் மட்டுமே இங்கு சொத்து வாங்க முடியும்” என்றார்.