புதுடில்லி, செப். 3- ஆளுநர் ‘சூப்பர்’ முதலமைச்சர் அல்ல என்றும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அதை உயிரற்றதாக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.
குடியரசுத்தலைவரின் கேள்விகள்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு, ஆளுநர் ஆர். என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத் திருந்தார். இதை எதிர்த்தும், மசோ தாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரியும் தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், ‘மசோதாக்கள் மீது ஆளுநர்களும், குடியரசுத்தலைவரும் 3 மாதங் களுக்குள் முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதை எதிர்த்து மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மசோதா மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர், குடியரசுத்தலைவருக்கு கெடு விதித்த விவகாரம் ஏற்படுத்தியது. இது தொடர்பாக நாடு முழுவதும் பரபரப்பை உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனை கருத்தை பெறும் வகையில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி அனுப்பி இருந்தார்.
தமிழ்நாடு அரசு வாதம்
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா, அதுல் எஸ்.சந்துருக்கர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.
நேற்றைய (2.9.2025) விசாரணை யின் போது, தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலவரையின்றி நிறுத்தி வைப்பதால் காலாவதியாகக்கூடாது.
இவ்வாறு நிறுத்திவைத்து அவர் சூப்பர் முதலமைச்சராகவோ, இறுதி தீர்ப்பை வழங்கும் நீதிபதியாகவோ இருக்க முடியாது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்தலும், சட்டமன்றத்துக்கு அனுப்பி வைப்பதும் ஒருங்கிணைந்த செயல்முறையாகும். மறுபடியும் சட்டமன்றத்தில் நிறைவேற்றி மசோதாவை ஆளுநருக்கு அனுப்பி வைத்தல் அடுத்தக்கட்ட நடவடிக்கையாகும்.
மாறாக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்து மசோதாக்களை உயிரற்றதாக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. சட்டமன்றத்துக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது.
ஜனநாயகத்தில் ஆளுநர்கள் தங்களை மன்னர்களாக கருதக் கூடாது; மசோதா மீதான ஆளுநர் கள். குடியரசுத்தலைவர்யின் முடிவு கள் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டவை. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் ஆளுநர்கள் பன்னாட்டு அம்சங்கள், பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு வாதிட்டுள்ளது. அப்படியென்றால் ஆளுநர்கள் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சர்களாக வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
தலைமை நீதிபதி கேள்வி
அப்போது தலைமை நீதிபதி, ‘ஆளுநர்கள், குடியரசுத்தலைவர்க்கு ஒரே மாதிரியான கெடுவை விதிக்க உச்ச நீதிமன்றம் அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தலாமா?’ என்று கேட்டார்.
அதற்கு மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘மசோதாக் களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆளுநருக்கு விதிக்கப்பட்ட கெடு அவசியமாகிறது’ என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதிகள் விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா ஆகியோர். ‘மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர்களுக்கும், குடியரசுத் தலைவர்க்கும் உச்ச நீதிமன்றம் கெடு விதிப்பது அரசமைப்பு சாசனத்தை திருத்துவதாகாதா?. கெடுவை மீறும் ஆளுநர்களுக்கும், குடியரசுத்தலைவர்க்கும் எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியுமா?. விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அரசமைப்பு சாசனத்தில் கூறியிருப்பது போதாதா?’ என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘கெடு மீறினால் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததாக கருதப்படும் என்பதே தீர்வாக அமையும். கெடு மீறாமல் இருப்பதை பார்த்துக் கொள்ளும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு உண்டு.
தண்டனை குறைப்பு மனு மீது முடிவெடுக்காத ஆளுநரின் செயலால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்களை விடுவித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும், கட்சி தாவிய பி.ஆர்.எஸ். கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க மனுவை தெலங்கானா சட்டப் பேரவை தலைவருக்கு 3 மாதங்களுக்குள் விசாரித்து முடிவு செய்ய வேண்டும் என கெடு விதிதத்தையும் உதாரணமாக கொள்ள முடியும். ஒப்புதல் அளித்ததாக கருதப்படும் என்று தீர்ப்பளித்த மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தால், அதை விசாரிக்க உச்ச நீதிமன்றத் துக்கு தடையும் இருக்காது’ என்று வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து மேற்கு வங்காள அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகி, ‘மசோதாவை ஒப்புதலின்றி நிறுத்தி வைக்கவோ. திருப்பி அனுப்பவோ முடியாது.அரசமைப்பு சாசனம் செயலாற்றுவதை இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்’ என வாதிட்டார். இதைத் தொடர்ந்து விசாரணை இன்றும் (3.9.2025) நடைபெறுகிறது.