‘விடுதலை’யில் அந்த நாள் ஞாபகம் வந்ததே – தோழர்களே!

Viduthalai
3 Min Read

 ‘விடுதலை’யில் அந்த நாள் ஞாபகம் வந்ததே – தோழர்களே!

அரசியல்

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சில முக்கிய நிகழ்வுகள் என்றென்றும் மறக்க முடியாத நினைவுக்குரிய பொக்கிஷங்களாகும்.

அதிலும் பொது வாழ்வில் உள்ள வர்களுக்குக் கிடைத்த – இத்தகைய அரிய  நிகழ்வுகளின் நினைவுகள் எப்போதும் தனியான ஒரு இன்பத்தை – கோடையிலே இளைப்பாற்றிக் கொள் ளும் குளிர் தருவாகக் கருதி அவர்கள் – பல்வேறு துன்பங்கள், துரோகங்கள், எதிர்ப்புகள் என்ற கொடுமைகள் தாக்கும்போது  அவற்றைப் பொருட் படுத்தாது, பழைய இன்ப அனுபவங் களை எண்ணி, அவ்வப்போது செயற் கையாகவோ, இயற்கையாகவோ ஏற் படும் இடுக்கண்கள் அல்லது விரும்பத்தகாத சூழ்நிலைகளையும், அலட்சியப்படுத்தி, மகிழ்ச் சியை நாம் – அறிவாளிகளாக இருப்பின் மற்ற வற்றை ஒதுக்கி  – நிரந்தர மகிழ்ச்சியில் வாழலாம்! இதைத்தான் – நான் கடைப்பிடிக்கிறேன்.

 அத்தகைய பல சந்தர்ப்பங்கள் 61 ஆண்டு ‘விடுதலை’ அலுவலகத்திலிருந்து பணியாற்று கையில் எனக்கு கிடைத்ததை – இந்நாளில் அசை போட்டு, அவற்றை மீண்டும் எண்ணிப் பார்த்து பெருமிதம் அடைகிறேன்.

‘விடுதலை’ ஆசிரியர் பொறுப்புக்கு அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் என்னை நியமித்ததுடன், முதல் 6 மாதங்கள் அய்யாவின் அந்நாளைய வழக்கப்படி – மவுண்ட் ரோடு, நம்பர் 1, மீரான் சாயபுத் தெரு, பெரியார் இல்லத்தில் அய்யா புழங்கிய பகுதிக்கு எதிராக உள்ள ஒரு ஹாலையே எங்கள் குடியிருப்பாக்கி – நானும், எனது வாழ்விணையரும் மூத்த பிள்ளையுடன் – வசிக்க ஏற்பாடும் செய்தார்.

அய்யா வந்து சென்னையில் தங்கும்போது ஒரே வகை சமையல் எல்லோருக்கும் – அன்னையாருடன் எனது துணைவியாரும் சேர்ந்து சமைத்து, வருகின்ற விருந்தினர் உள்பட பலருக்கும் பரிமாறல் தடல்புடலாக இருக்கும்!

முதல் நாள் சிந்தாதிரிப்பேட்டை 2, பால கிருஷ்ணப் பிள்ளைத் தெரு, ‘விடுதலை’ அலுவ லகத்திற்கு அழைத்துச் சென்று ஆசிரியர் நாற்காலியில் அய்யா என்னை அமர வைத்து எதிரில் ஒரு நாற்காலியில் அவர் அமர்ந்து கொண்டு செய்தித்தாள்களை படித்தும் – வழக்கமாக அய்யா நியூஸ் பிரிண்ட் தாள் பேட் மூலம் நூலை கட்டி தயாரிக்கப்பட்டதில் – ஏதோ அறிக்கைகளையும் எழுதத் துவங்கினார்!

எனது நெஞ்சப்படபடப்பு – ஒருவகை அச்சம் கலந்த மகிழ்ச்சி.

அச்சுக்கோர்க்கும் Foreman,  (அச்சுத்துறை மூத்த மேலாளர்) மற்றவர்களை அய்யா அறிவார். அவர்களை அழைத்து செய்திகளை விசாரித்து பேசிக் கொண்டிருந்து – பிறகு வந்த கை ரிக்ஷா, அப்போ தெல்லாம் அவர் பழக்கம். வேனில் வந்தால்கூட அதை நிறுத்திவிட்டு ‘விடுதலை’ அலு வலகம் வரும்போது கை ரிக்ஷாவில் – வழமைபோல் ஒரு தோல் கைப்பெட்டியுடன் உடன் உதவியாளர் வர,  மதியம் வரை இருப்பார். பிறகு வீடு திரும்புவார்.

அச்சுக்கலை அச்சக மொழியெல்லாம் “Font,  பைக்கா Over எடுத்தல்” போன்றவை, ‘லீடர்’  எழுதியாகி விட்டதா, பேனர் மேட்டர் இன்று என்ன? என்று இதுபோல புழங்குவதும் அய்யாவுக்கு கைதேர்ந்த பழக்க வழக்கம்!

பழைய அச்சிடும் ‘பிரிண்டிங் மெஷின்” – அது ஒட ஆரம்பித்தால் சத்தத்திற்குப் பஞ்சமே இருக்காது.

டபுள் ஃபீடர் (Double Feeder) என்பதால் பக்கம் மெஷினில் ஏறியவுடன்  நாங்கள் பக்கத்தில் நின்று முதல் பிரதி அச்சாகி வந்தவுடன் – திருத்தம் பார்க்க தனியே எடுத்துப் பார்க்க மெஷின் நிற்கும் –  ஓ.கே. சொன்ன பிறகே ஓடும். இப்படி – மெல்ல மெல்ல கற்றுக் கொண்டேன்.

குரு சீடனை அமர்த்திய பழைய நாற்காலி தந்த மகிழ்ச்சியே – எனக்கு அலுவலக தோழர்களாலோ, மற்றவர்களின் வசை புராணம் கேட்டோ – மனச்சோர்வு அடையாத மாமருந்து, எனக்கு அந்நாள் ஞாபகம் – இன்றும் பெறுதற்கரிய  பேறு அந்த அமர்த்தல் – என் வாழ்வில்!  

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *