மதுரை, செப். 1- மதுரை ஆதீனத்துக்கு எதிராக விஷ்வலிங்க தம்பிரான் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மதுரை முனிச்சாலை அருகே 292ஆவது ஆதீனத்தின் சமாதி உள்ளது. இதன் முன்பாக அமர்ந்து விஷ்வலிங்க தம்பிரான் நேற்று (31.8.2025) தர்ணாப் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் 2018 ஜூலை முதல் 292ஆவது ஆதீனமாக இருந்த குருமகா சன்னிதானத்தின் கரங்களால் தீட்சை பெற்று, மதுரை ஆதீன மடத்தின் தம்பிரானாகப் பணிபுரிந்து வருகிறேன். 292ஆவது ஆதீனம் 2021இல் மகாசித்தி அடைந்த பிறகு, தற்போதைய 293ஆவது ஆதீனத்தின் கீழ் தம்பிரானாகப் பணிபுரிந்து வருகிறேன்.
மதுரை ஆதீன மடத்தின் 292ஆவது குருமகா சன்னிதானம் விருப்பப்படி, அடுத்த ஆதீனமாக நான்தான் வரவேண்டும். ஆனால் தற்போதைய ஆதீனம், 292ஆவது குருமகா சன்னிதானம் மற்றும் தருமபுரம் ஆதீனத்தின் கட்டளையை நிறைவேற்றாமல் வேறு ஒருவருக்குப் பட்டம் சூட்டத் திட்டமிட்டுள்ளார்.
மதுரை ஆதீனம் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தருமபுரம் ஆதீனத்தின் ஆலோசனைப்படியே நடக்க வேண்டும். தற்போதைய மதுரை ஆதீனம், தருமபுரம் ஆதீனத்துடன் ஆலோசனை செய்து 292ஆவது குருமகா சன்னிதானத்தின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், விஷ்வலிங்க தம்பிரானிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, அவர் போராட்டத்தைக் கைவிட்டார்.
தமிழ்நாட்டில்
சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
சென்னை, செப்.1- தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் நான்கில் இன்று (1.9.2025) முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இந்த விலை உயர்வுக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலையில் 78 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு ஒரு முறை 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்திக் கொள்ள ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி ஏப்ரல் மாதம் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை, திருச்சி மாவட்டம் சமயபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள சுங்கச் சாவடிகளில் இன்று (1.9.2025) முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
கார், ஜீப் போன்றவை ஒரு முறை பயணிப்பதற்கான கட்டணத்தில் மாற்றம் இல்லை. இரு முறை பயணிப்பதற்கான கட்டணத்தில் 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணத்தில் ரூ 70 உயர்த்தப்பட்டுள்ளது.
பல அச்சு வாகனங்கள் ஒரு முறை பயணிக்க 15 ரூபாயும் இரு முறை பயணிக்க 20 ரூபாயும் மாதாந்திர கட்டணத்தில் 395 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. மீதமுள்ள சுங்கச் சாவடிகளிலும் விரைவில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
இதை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு எந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது என்கிற விவரங்கள் தெரியவில்லை.
சுங்கக் கட்டண உயர்வால் தனியார் வாகனங்களின் வாடகை உயர்த்தப்படும். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயரக் கூடும். இதனால்தான் சுங்கக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
தமிழ்நாட்டின் பொறுப்பு டிஜிபி: வெங்கட்ராமன்
தமிழ்நாட்டில் பொறுப்பு காவல்துறை தலைமை இயக்குநராக வெங்கட்ராமனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இப்பதவி வகித்து வந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற நிலையில், நிர்வாகப் பிரிவு தலைமை இயக்குநராகப் பணியாற்றி வரும் வெங்கட்ராமனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சங்கர் ஜிவால் பணி கோப்புகளை வெங்கட்ராமனிடம் ஒப்படைத்தார். இவர் 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு பேட்ச் அய்பிஎஸ் அதிகாரி ஆவார்.