‘வாக்குத் திருட்டு’ என்றால் இதுதான்! மராட்டிய மாநிலம் பன்வேல் தொகுதியில் பகல் கொள்ளை!

6 Min Read

ராகுல்காந்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) செயல்பாட்டுக்கு எதிராக எழுப்பிய முக்கிய பிரச்சினைகளில் ஒன்று,  வாக்காளர் பட்டியலில் டூப்ளிகேட் வாக்காளர்கள்.

அதாவது ஒரே தொகுதி மற்றும் அருகில் உள்ள தொகுதியிலும் உள்ள வாக்காளர் பட்டியலில் ஒரு நபரே பல முறை இடம் பெறுவது.

ராகுல்காந்தி மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் 2024 முடிவுகள் வெளியானபோது தேர்தல் மோசடி குறித்த தனது சந்தேகங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு தனியார் அமைப்புகள், ஊடகவியலாளர்கள் ஆய்வில் இறங்கினர். இதன் விளைவாக இந்தியா முழுவதும் வாக்குப்பதிவு மோசடிகள் குறித்த அதிர்ச்சியளிக்கும் விவரங்கள் வெளியாகி வருகின்றன.

மகாராட்டிராவின் 288 தொகுதிகளில், ராய்காட் மாவட்டத்தின் பன்வேல் சட்டமன்றத் தொகுதி (எண் 188)யில் இருந்து மிகவும் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளன.

2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி 17 இடங்களைப் பெற்றது, அதேசமயம் காங்கிரஸ் கூட்டணியான மகாராட்டிரா விகாஸ் அகடி (MVA) 30 இடங்களைப் பெற்றது. இதனால், சட்டமன்றத் தேர்தலிலும் ‘மகா விகாஸ் அகாடி’ வெற்றி பெறும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், மகா யுதி தேர்தலை வென்றது. இது நாடு முழுவதும் சந்தேகங்களை எழுப்பியது.

பன்வேல் தொகுதியில் இரு முக்கிய வேட்பாளர்கள்: பா.ஜ.க.வின் பிரசாந்த் தாகூர் (மகா யுதி) மற்றும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சியின் பாலராம் பாட்டில் (MVA) இருவருமே மாநில தேர்தல் ஆணையத்திடம் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் லட்சக்கணக்கான டூப்ளிகேட் வாக்காளர்கள் உள்ளதாக புகார் தெரிவித்திருந்தனர்.

ஆனால், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் பாலராம் பாட்டில் தனது தொகுதி மற்றும் அண்டை தொகுதிகளில் போலி அல்லது இரட்டை வாக்காளர்களை ஆய்வு செய்ய முடிவு செய்தார்.

அவரது ஆய்வில் வாக்காளர் பட்டியலில் 85,211 வாக்காளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை  பட்டியலில் இருப்பது தெரியவந்தது.

இவற்றில், பன்வேல் தொகுதியில் மட்டும் 25,855 பெயர்கள் இரண்டு, மூன்று, நான்கு முறைகூட இருந்தன. பக்கத்து தொகுதியான உரானில் 27,275 வாக்காளர் பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை இருந்தன. அய்ரோலி தொகுதியில் 16,096 பெயர்கள். பெலாப்பூர் தொகுதியில் 15,397 வாக்காளர்கள் பன்வேல் பட்டியலிலும் இருந்தன. கூடுதலாக, 588 பெயர்கள் சந்தேகத்திற்குரியவை. மொத்தம் 85,211 பெயர்கள் இருந்தன.

இந்த ஆய்விற்குப் பிறகு, பாட்டில் துணை கோட்டாட்சியரிடம் (SDO), போலி வாக்காளர்களை நீக்குமாறு கோரினார்.

ஆனால், அவர் நடவடிக்கை எடுக்காததால் செப்டம்பர் 26, 2024 அன்று, பாட்டில் பாம்பே உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றம் SDO-க்கு இரு வாரங்களுக்குள் உரிய முடிவெடுக்க உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் தான் ஒன்றும் செய்யமுடியாது என்று கூறிவிட்டார்.

தேர்தல் நடைபெற்றபோது, பாட்டில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நவம்பர் 20 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. நவம்பர் 23 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது, தாகூர் 1,83,931 வாக்குகளைப் பெற்றார். பாட்டில் 1,32,840 வாக்குகளைப் பெற்றார். மொத்த வாக்குகள் 3,83,964, தாகூரின் வெற்றி வித்தியாசம் 51,091. பாட்டில் தோல்வியை ஏற்க மறுத்தார்.

அவர் கூறும்போது “ஒவ்வொரு பூத்துக்கும் வாக்குப்பதிவு பட்டியலை ஆய்வு செய்திருந்தோம்.

விசாரணையின் ஒரு பகுதியாக, பாட்டில் ஒவ்வொரு பூத்தின் வாக்காளர் பட்டியலின் நகலை டிசம்பர் 13, 2024 அன்று பன்வேல் தேர்தல் அதிகாரியிடம் கோரினார். அதிகாரியோ நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தர முடியாது என்று பதிலளித்தார். பாட்டில் பெலாப்பூர், அய்ரோலி, உரான்  தேர்தல் அதிகாரிகளிடமும், ராய்காட் (உரான் மற்றும் பன்வேல்) மற்றும் தானே (அய்ரோலி மற்றும் பெலாப்பூர்) மாவட்ட ஆட்சியர்களிடமும் கோரினார். உரான், அய்ரோலி, பெலாப்பூர் தரவுகள் வரவில்லை. ஆனால் பாட்டில் தொடர்ந்து முயற்சித்தார். தனது அனைத்து பூத் லெவல் உதவியாளர்களிடமும் வாக்குப்பதிவின்போது குறிப்பிட்ட பட்டியல்களை சமர்ப்பிக்க கோரினார்.

பன்வேல் சட்டமன்ற பிரிவில் 574 பூத்கள் உள்ளன. பாட்டிலின் குழு ஒவ்வொரு பூத்தையும் வேலை செய்யத் தொடங்கியது. இன்றுவரை 490 பூத்களை முடித்துள்ளனர். அவர்கள் பயன்படுத்தும் முறை: ஒவ்வொரு பூத்தின் தரவையும் எக்செல் ஷீட்டில் உள்ளிட்டு பிரதிபலிப்புகளை தேடுதல். இதன் மூலம், 11,628 வாக்குகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை இருப்பதைக் கண்டறிந்தனர்

பிரதீப் போராஜி, 23 வயது, EPIC ID RSC6522387, பூத் எண் 4இல் வாக்கு செலுத்தினார். பாட்டிலின் குழு, அதே பிரதீப் போராஜி, அதே ஒளிப்படத்துடன், ஆனால் 22 வயது மற்றும் EPIC ID RSC5081641 உடன் பூத் எண் 310இல் வாக்கு செலுத்தியிருப்பதை கண்டறிந்தது. இருவரின் தந்தை பெயரும் ராமு போராஜி. இதுபோன்ற 11,628 உள்ளன. “80க்கும் மேற்பட்ட பூத்கள் இன்னும் இருக்கின்றன. தான் ஆய்வு செய்த சில பூத்தில் மட்டுமே  17,000அய் தாண்டும்,” என்று பாட்டில் கூறினார்.

இந்தப் பெரிய அளவிலான டூப்ளிகேட் வாக்குப்பதிவை கண்டுபிடித்த பிறகு, பாட்டில் மகாராட்டிரா தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை அணுகினார், ஜூனில் அனைத்து விவரங்களையும் அஞ்சலில் அனுப்பினார். இதுவரை பதில் இல்லை. “நேர்மையாகச் சொல்ல வேண்டுமானால், தேர்தல் ஆணையத்திடம் நம்பிக்கையும் இல்லை. ஏனெனில், இந்த மோசடி பாஜகவால் தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் செய்யப்படுகிறது என்று எனது குற்றச்சாட்டு. தேர்தல் ஆணையம் நடுநிலையாக இருந்தால், இத்தகைய ‘வாக்குத் திருட்டு’ சாத்தியமில்லை. இது பகல் கொள்ளை,” என்று பாட்டில் கூறினார். அவர் தனது சட்ட ஆலோசகர்களுடன் எதிர்கால நடவடிக்கையை முடிவு செய்து வருகிறார்.

பன்வேல் தொகுதியில் ஒரு நபருக்கு இரு வோட்டர் அய்டி கார்டுகள் இருப்பதற்கான பல சான்றுகள் உள்ளதை  மராட்டி நாளிதழ் கண்டறிந்தது.

பிரச்சி டோங்கரேயின் பெயர் பூத் எண் 1 இல் உள்ளது. அவரது தந்தை பெயர் பஜ்ரங் டோங்கரே, வீட்டு எண் 327 A. அவர் 18 வயது. EPIC ID RSC6376198. அதே விவரங்களுடன் பூத் எண் 2 இலும் உள்ளது, EPIC ID RSC6381800. இதேபோல், ஹரிஷ்சந்திர பாலே, 21 வயது, பூத் எண் 3இல். தந்தை புத்தா பாலே, வீட்டு எண் 906. EPIC ID RSC6712871. அதே விவரங்களுடன்  வேறு பூத்தில் EPIC ID RSC6481519 என்ற வாக்களர் அடையாள அட்டை உள்ளது.

நேகா விவேக் குல்கர்னி, 27 வயது, விவேக் குல்கர்னியின் மகள், 701, சிவ் பூமி ப்ளாட் எண் 35 இல், பூத் எண் 4 மற்றும் 2இலும் உள்ளது, EPIC IDகள் UZZ9331422 மற்றும் RSC6678189. பூத் 2இல் மட்டும் வயது 28 என்று மாற்றம்.

நவசக்தி மராட்டிய இதழில் கிரீஷ் சித்ரே மகாராட்டிராவின் தலைமை தேர்தல் அதிகாரி எஸ். சொக்க லிங்கத்திடம் இந்த டூப்ளிகேட் வாக்காளர் பட்டியல் குறித்து பேச முயன்றார், ஆனால் அவர் பதிலளிக்கவில்லை.

குறியிட்ட வாக்காளர் பட்டியல்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தால் மட்டுமே, பன்வேலில் கூறப்படும் வாக்குப்பதிவு மோசடியின் உண்மை தெரியும்.  ஆனால். ஆகஸ்ட் 17 செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் சிசிடிவ் காட்சிகளுக்கான கோரிக்கையை நிராகரித்தார், “பெண் வாக்காளர்களின் தனியுரிமை” என்று காரணம் கூறினார். ஆனால் நேகா விவேக் குல்கர்னி போன்ற டூப்ளிகேட் வாக்காளர்கள் எங்கு எங்கு சென்று வாக்கு செலுத்தியுள்ளனர் என்பதை அறிய சிசிடிவி பதிவு அவசியம் என்பதை காட்டுகின்றன, ஒவ்வொரு மறுப்பும் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை குறித்த சந்தேகத்தை ஆழப்படுத்துகிறது.

டூப்ளிகேட் வாக்காளர்களை நீக்கவேண்டும் என்றால் அனைத்து விவரங்களை ஃபார்ம்-7 பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும். அதாவது சுமார் ஒரு லட்சம் டுப்ளிகேட் வாக்காளர்களை நீக்க ஒரு லட்சம் பார்ம் 7 நிரப்ப வேண்டும். அதனை 5 நகல் எடுக்க வேண்டும், அனைத்து நகலிலும் உள்ளூர் மக்கள் தொடர்பு அதிகாரி தாசில்தார் அல்லது வி.ஏ.ஓ.விடம் கையெழுத்து மற்றும் சீல் வாங்கவேண்டும்.

பிறகுதான் தேர்தல் ஆணையம் இதை வாங்கும் அதுவும் அனைத்தையும் ஆய்வு செய்யும் அதில் ஒன்றில் தவறு இருந்தால் கூட அனைத்து விண்ணப்பங்களும் நிரகரிக்கப்படும்.

இந்த விதிமுறைகள் எல்லாம் சமீப காலமாக மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, ஒரு தொகுதியில் 13 லட்சம் வாக்காளர்கள் என்றால் அதில் டூப்ளிகேட் வாக்காளர் 4 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டால் 4 லட்சம் பார்ம் 7 படிவங்களை 20 லட்சம் நகல் எடுத்து ஒவ்வோரு நகலிலும் அட்டஸ்டேட் வாங்க வேண்டும். ஒன்று பிழையாக இருந்தாலும் அத்தனையும் நிராகரிக்கப்படும். இப்படி இருக்கிறது தேர்தல் ஆணையத்தில் விதிமுறை. அதாவது மோசடிகளை அவர்கள் கவனத்திற்குக் கொண்டு செல்ல முடியாத அளவிற்கு தேர்தல் ஆணையம் விதிமுறைகளை வகுத்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *