பீகாரில் பீரங்கி முழக்கம்!

4 Min Read

கடந்த 27ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின், காங்கிரஸின் மூத்த தலைவர் ராகுல்காந்தி ராஷ்டிரிய ஜனதா தளத்தின் முக்கிய தலைவர் தேஜஸ்வி மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்று நடத்திய பேரணி பீகார் மாநிலத்தை இந்தியாவே திரும்பிப் பார்க்கச் செய்து விட்டது.

குறிப்பாக 65 லட்சம் வாக்காளர் திருடப்பட்ட நிலையில் மக்களின் வாக்குரிமையைக் கபளீகரம் செய்தவர்களை அம்பலப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட அந்தப் பேரணி – ஏதோ பீகார் மக்களை மட்டுமல்ல; இந்திய குடிமகன் ஒவ்வொருவரையும் உலுக்கி எடுத்து விட்டது.

அதுவும் தமிழ்நாட்டு முதலமைச்சர் அப்பேரணியில் பங்கேற்றது மேலும் எழுச்சியை ஏற்படுத்தி விட்டது. பிஜேபி ஆளும் மாநிலங்களுக்கு ஒரே ஒரு முறை முதல் அமைச்சர் செல்வாரேயானால் பிற்போக்குச் சக்திகள் வேட்டியைக் காணோம். துண்டைக் காணோம் என்று ஓடும் நிலை ஏற்படும் என்பதில் அய்யமில்லை.

நமது முதலமைச்சர் வைத்த முதல் குற்றச்சாட்டு தேர்தல் ஆணையத்தை பா.ஜ.க. பொம்மை போல் ஆட்டுவிக்கிறது என்பதுதான்.

தேர்தல் ஆணையத்தில் மூன்று பேர் உறுப்பினர்கள். இதில் இருவர் பிஜேபிக்கு ஆதரவாளர்கள். எந்த நிலையிலும் தாங்கள் எடுக்கும் நிலைப்பாட்டுக்கு எதிராக தேர்தல் ஆணையம் முடிவெடுக்கக் கூடாது என்பதற்கான திட்டமிட்ட ஏற்பாடு இது.

மூவரில் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர், ஒருவர் ஆளும் கட்சிக்காரர், இன்னொருவர் உச்சநீதிமன்ற நீதிபதி என்று உச்சநீதிமன்றம் கூறிய முடிவைப் புறந்தள்ளி, தனக்கு வசதியாக மூவரில் இருவர் பிஜேபிக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற திட்டமிட்ட ஏற்பாட்டை மறுக்க முடியுமா?

சொந்த மண்ணில் வாழ்ந்த மக்களையே வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்குவதைவிட பயங்கரவாதம் வேறொன்று இருக்க முடியுமா என்பது தமிழ்நாடு முதலமைச்சரின் இரண்டாவது கேள்வியாகும்.

ஜனநாயகத்தைப் படுகொலை செய்வோரின் மார்பில் தைத்த வேல் போன்றது இந்த இரண்டாவது கேள்வி. ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையைக் களவாடுவது எத்தகைய கொள்ளை என்பதை எண்ணிப் பார்த்தால் இதற்குக் காரணமானவர்கள் எந்தக் கொடூரத்தை செய்யத்தான் தயங்குவார்கள் என்ற கேள்வி நிச்சயமாக மக்கள் மத்தியில் வெடித்து எழத்தான் செய்யும்.

அந்த அடிப்படைப் பணியைத்தான் பீகாரில் மூன்று தலைவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட பேரணி வெகு சிறப்பாகச் செய்திருக்கிறது.

சகோதரர் ராகுலும், தேஜஸ்வியும் பெறவிருக்கும் வெற்றியைத் தடுக்க முடியாத பிஜேபி கொல்லைப்புற வழியாக வாக்காளர் உரிமைப் பறிப்பு வேலையைச் செய்துள்ளது என்று நமது முதலமைச்சர் வைத்த குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க முடியாமல், பிஜேபி வகையறாக்கள் திக்குமுக்காடுகிறார்கள்! கேள்விக்குப் பதில் சொல்லும் துப்பின்றி வசைமாரிப் பொழிகிறார்கள். இது அவர்களின் தோல்விக்கான பிலாக்கணம் ஆகும்.

நான்காவதாக நமது முதலமைச்சர் அவர்கள் காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல் காந்தியைப் பற்றிப் பாராட்டிச் சொன்ன வார்த்தைகள்!

நமது ராகுல்காந்தி தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு மோசடிகளையும் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதற்குத் தேர்தல் ஆணையம் முறையான ஒரு பதிலைக்கூடச் சொல்ல முடியவில்லை.

மாறாக ராகுல்காந்தி உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும், மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சொல்கிறார். இந்த மிரட்டல்களுக்கெல்லாம் ராகுல்காந்தி பயப்படக் கூடியவரா? என்று அருமையாக ராகுலைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

‘திராவிடமாடல்’ அரசின்  மாண்புமிகு முதலமைச்சர்
மு.க. ஸ்டாலினாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியாக இருந்தாலும் சரி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் முன்னணித் தலைவர் தேஜஸ்வியாக இருந்தாலும் சரி இவர்களை எல்லாம் ஒன்றாக இணைக்கும் மய்யப் புள்ளி சமூகநீதிதான்.

அதனால்தான் செய்தியாளர்களைச் சந்திக்கும்போதுகூட உங்களில் எத்தனைப் பேர் ஓ.பி.சி. என்று வினாவைத் தொடுக்கிறார் ராகுல். ஒன்றிய அரசில் இருக்கக் கூடிய 90 செயலாளர்களில் வெறும் மூன்று பேர்கள் மட்டும் தான் ஓ.பி.சி. என்று நேருக்கு நேர் குற்றச்சாட்டுகிறார். ராகுல் வைக்கும் எந்தக் குற்றச்சாட்டுக்கும் நாணயமாகப் பதில் சொல்ல முடியாத பிரதமர் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியினர், தனிப்பட்ட தாக்குதல்களைத் தொடுக்கிறார்கள்.

பேரணியில் பேசிய மூன்று முக்கிய தலைவர்களும் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஜெயப்பிரகாஷ் நாராயண் கர்ப்பூரிதாகூர், லாலு பிரசாத் யாதவ் முதலியவர்களின் பெயர்களை உள்ளத்தின் வேரிலிருந்து உச்சரித்தது மிகச் சரியானது.

எப்பாழுதுமே பீகார் மாநிலம் சமூகநீதிக்கான குரல் கொடுக்கும் மண்ணாகவே இருந்து வருகிறது.

ஒரு காலத்தில் சமூகநீதிக்குக் குரல் கொடுத்த இன்றைய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், சூழ்நிலையின் கைதியாகி, பதவி நாற்காலி தன்னை விட்டுப் போகக் கூடாது என்ற நினைப்பில் இடம் மாறி, தனக்குத்தானே மூளை விலங்கைப் போட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில்கூட பிஜேபி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கவில்லை. ஆந்திர மாநிலமும், பீகாரும் கை கொடுத்துக் காப்பாற்றிக் ெகாண்டுள்ளது.

இப்பொழுது பீகாரில் ஏற்பட்டிருக்கிற எழுச்சி பீகார்  பிஜேபி கூட்டணி ஆட்சிக் கப்பலைத் தலைகீழாகப் புரட்டிக்   கவிழ்க்கும் சுனாமியாக மாறப் போகிறது என்பதில் எட்டுணையும் மாற்றமில்லை.

ஆக, பீகார் பேரணி எழுச்சி என்பது எதிர்கால அரசியலை அடையாளம் காட்டும் கலங்கரை விளக்கம் என்றே சொல்ல வேண்டும்.

இந்த அலை இந்தியா முழுவதும் சுழன்றடிக்க இத்தகைய பேரணி அனைத்து மாநிலங்களிலும் நடக்கட்டும்! நடக்கட்டும்!!

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *