முஸாஃபர்பூர், ஆக.28– இந்தியா கூட்டணியில் நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம் என்றும், நம் கரங்களை வலுப்படுத்த இங்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வந்துள்ளார் அவரை வருக வருக என வரவேற்கிறேன் என்றும் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவர் தேஜஸ்வி குறிப்பிட்டார்.
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்ற பெயரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாஜகவின் வாக்குத் திருட்டுக்கு எதிராக பீகாரில் ராகுல் காந்தி வாக்காளர் உரிமைப் பயணத்தை கடந்த 17 ஆம் தேதி தொடங்கினார். 11 ஆவது நாளாக நேற்று (27.8.2025) நடைபெற்ற வாக்காளர் உரிமைப் பயணத்தில் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் பீகார் சென்று கலந்து கொண்டார். சென்னையில் இருந்து விமானத்தில் தர்பங்கா நகர் சென்ற முதலமைச்சர், முஸாபூர் மாவட்டத்தில் இப் பேரணியில் பங்கேற்றார். அவரை காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
கனிமொழி கருணாநிதி எம்.பி. பங்கேற்பு!
அங்கிருந்து ஒரே வாகனத்தில் ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வியுடன் வாக்காளர் உரிமைப் பயணத்தைத் தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வழி நெடுகிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்று உற்சாகத்துடன் வரவேற்றனர். பிரியங்கா காந்தி மற்றும் நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கருணாநிதி ஆகியோரும் இந்த பேரணியில் பங்கேற்றனர்.
இங்கு நடைபெற்ற பேரணிப் பொதுக்கூட்டத்தில் ராஷ்ட்ரிய ஜனதா கட்சித் தலைவர் தேஜஸ்வி பேசியது வருமாறு:-
பீகாரில் பொய் புரட்டுகள் நிறைந்த பாஜக கூட்டணி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்.
பீகாரில் முற்றிலும் ஊழல் நிறைந்த ஆட்சிதான் நடைபெற்று வருகிறது. பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சியில் பெண் களுக்கு பாதுகாப்பு இல்லை.
பிரதமர் மோடி தொடர்ந்து பொய்களை கூறி மக்களை ஏமாற்றி வருகிறார். நம் கரங்களை வலுப்படுத்தவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இங்கு வந்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை வருக வருக என வரவேற்கிறேன். -அவருக்கு நன்றி.
இவ்வாறு தேஸ்வி பேசினார்.