வாசிங்டன், ஆக. 28- அமெரிக்காவின் பெடரல் ரிசர்வ் வங்கி ஆளுநர் லிசா குக்கை பதவியில் இருந்து அதிபர் டிரம்ப் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார். லிசா மீது பல்வேறு குற்றச்சாட்டு இருப்பதால் அவரை பதவி நீக்கம் செய்ததாக டிரம்ப் தெரிவித்தார். இந்த நிலையில் தன்னை பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து டிரம்ப் நிர்வாகத்தின் மீது வழக்கு தொடர போவதாக லிசா குக் தெரிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக லிசாவின் வழக்குரைஞர் அபே லோவெல் கூறும்போது, மத்திய வங்கி ஆளுநர் லிசா குக்கை நீக்க அதிபர் டிரம்பிற்கு அதிகாரம் இல்லை. ஒரு பரிந்துரை கடிதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவரை நீக்க டிரம்ப் மேற்கொண்ட முயற்சியில் எந்த சட்ட அடிப்படையும் இல்லை. இந்த சட்டவிரோத நடவடிக்கையை எதிர்த்து நாங்கள் வழக்குத் தாக்கல் செய்வோம் என்றார்.
தென்கொரியாவில் பள்ளியில்
மாணவர்கள் கைப்பேசி பயன்படுத்தத் தடை
சியோல், ஆக. 28- தென்கொரியாவில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே கைப்பேசி பயன்பாடு அதிகரித்து வந்தது. இதனால் பாலியல் குற்றச்சம்பவங்கள், போதைப்பொருள் பயன்பாடு, இணையத்தள விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் மாணவர்கள் சிக்கி அவர்களின் வாழ்க்கை சீரழிவதாக புகார் எழுந்தது.
இந்தநிலையில் பள்ளியில் மாணவ-மாணவிகள் கைப்பேசி பயன்பாடுக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இங் பள்ளியில் மாணவர்கள் கைப்பேசி பயன்படுத்த தடை விதிப்பதற்காக மசோதாவை நேற்று (27.8.2025) நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தார்.
இந்த மசோதாவுக்கு ஆளுங்கட்சியினர் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் தென்கொரியாவில் அடுத்த கல்வியாண்டு முதல் (மார்ச் 2026) பள்ளியில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.