பாலசோர், ஜூன் 4 தவறான சிக்னலால் தான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள் ளானது என்பது ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 2.6.2023 அன்று இரவு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்குரயில், பெங்களூரு யஷ்வந்த்பூர்-ஹவுரா ரயில்கள் மோதிக் கொண்டதில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமா னோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், இந்த பயங்கர விபத்து எப்படி நடந்தது என்ற விவரம் ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோரமண்டல் ரயில் பாலசோர் நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் பாஹாநாகாவுக்கு முன்பாக உள்ள வனப்பகுதி அருகே ஆளில்லாத சிக்னலில் பச்சை சிக்னல் தவறுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில விநாடிகளிலேயே அந்த பச்சை சிக்னல், சிவப்பு சிக்னலாக மாற் றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் ரயில் இன்ஜினில் இருக்கும் ஓட்டுநர் பார்க்கும் போது அதில் பச்சை சிக்னல் இருந்துள்ளது. இதனால்தான் அவர் ரயிலை வேகமாக இயக்கி முன்னே சென்றிருக்கிறார். அப்போதுதான் எதிரே வந்த சரக்கு ரயிலும், கோரமண்டல் ரயிலும் ஒன்றோடு ஒன்று மோதியுள்ளன.
அதாவது, அந்த சிக்னலில் சிவப்பு சிக்னல் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் ஓட்டுநர் ரயிலை நிறுத்தி இருப்பார். அந்த நேரத்தில் சரக்கு ரயில் வேறு தண்டவாளத்தில் சென்றிருக் கும். ஆனால் சில நொடிகள் காட்டப்பட்ட பச்சை சிக்னலால்தான் இந்த கோர விபத்து நேரிட்டுள்ளது என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஏன் அந்த நேரத்தில் சில விநாடிகள் மட்டும் பச்சை சிக்னல் காட்டப்பட்டது. பச்சை நிற சிக்னலை வேண்டுமென்றே யாரேனும் போட்டு விட்டார்களா அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பச்சை சிக்னல் ஒளிர்ந்ததா என்பது குறித்து ரயில்வே காவல்துறையினர் அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் மனிதத் தவறு காரணமாக விபத்து நடந் ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பான முதல் கட்ட அறிக்கையை ரயில்வே மூத்த அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர்.
புதிய தொழில் நுட்பம் இல்லை
ஒடிசா வழித் தடத்தில் செல்லும் ரயில்களில் கவச் பாதுகாப்பு சிஸ்டம் பொருத்தப்படவில்லை என்று தெரியவந் துள்ளது. ரயில்வே லெவல் கிராசிங்குகள் அனைத்தையும் ஆள் உள்ளதாக மாற் றுதல், விபத்து பாதிப்புகளை குறைக்கும் எல்.எச்.பி. பெட்டி என பல்வேறு நட வடிக்கைகளை ஒன்றிய ரயில்வே அமைச் சகம் எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக ஒன்றிய பாது காப்புத்துறை அமைச்சகத்தின் அங்கமான டி.ஆர்.டி.ஓ. அமைப்பு, ரயில் மோதல்களை தவிர்ப்பதற்கான ‘கவச்’ என்ற அதிநவீன மின்னணு தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளது. ரயில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை மீறி சென்றாலோ, சிக்னலை மீறி சென்றாலோ தானியங்கி முறையில் தாமாகவே பிரேக் போட்டு ரயிலை நிறுத்துவதே கவச் தொழில்நுட்பமாகும். இந்த கவச் தொழில்நுட்பம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நாட்டில் இயக்கப்படும் பல்வேறு ரயில்களில் இந்த கவச் தொழில்நுட்பக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனி டையே ஒடிசாவின் பாலசோர் அருகே 3 ரயில்கள் விபத்தில் சிக்கின. இதுகுறித்து ரயில்வே அமைச்சக செய்தித் தொடர் பாளர் அமிதாப் சர்மா கூறும்போது, “இந்தத் தடத்தில் செல்லும் ரயில்களில் இதுவரை கவச் தொழில்நுட்பக் கருவி பொருத்தப்படவில்லை. விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன’’ என்றார்.
சென்னை மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு ஏற்பாடு
ஒடிசாவில் இருந்து 250 பயணிகள் 4.6.2023 அன்று சிறப்பு ரயில் மூலம் சென்னை வர உள்ளனர். அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர் பாக நேற்று (3.6.2023) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்பு அவர் செய்தி யாளர்களிடம் பேசுகையில், “6 மருத்துவக் குழுக்கள் ஆம்புலன்ஸ் வாகனத்துடன் தயார் நிலையில் உள்ளது. ஒடிசாவில் இருந்து வருபவர்களுக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தி மருத்துவமனையின் அவரச சிகிச்சை பிரிவில் 40 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. சிறிய காயம் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஸ்டான்லி, ஓமந்தூரார், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. தேவைப் பட்டால் புறநகர் மருத்துவமனையில் கூட சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் ஒடிசா செல்ல மருத்துவர்களின் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. மருத்துவர்களும் தயார் நிலையில் உள்ளனர்.” இவ்வாறு அவர் கூறினார்.
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி, சென்னை வரும் பயணிகளுக்கு உதவவும், மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று உதவவும், சென்னை பெருநகர காவல்து றை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசூர் என்ற இடத்தில் 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில் மோதிக் கொண்ட விபத்தில், ரயில் பெட்டிகள் சேதமடைந்து, உயிர் சேதம் ஏற்பட்டதுடன், பலர் காயமடைந் தனர். இதில் காயமடைந்து சென்னை வரும் பயணிகளுக்கு உதவ சென்ட்ரல், விமான நிலையத்தில் காவல் துறை சார் பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளது.
சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டறையில் (எழிலகம்), அரசு அதிகாரிகள் குழுவினருடன் பணியாற்ற, சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் குழு இணைக்கப்பட்டுள்ளது. மேற்படி பயணிகளுக்கு உதவும் வகையில், சென்னையிலுள்ள பேரிடர் மீட்பு மய்யம் உதவி எண். 94458 69843, ரயில்வே உதவி எண்.90035 11919 மற்றும் ஒடிசா உதவி மய்யம் எண்.94422 35375 ஆகிய உதவி மய்ய எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் நிலைய சிறப்பு ஏற்பாடுகள்: விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களைச் சேர்ந்த பயணிகள் விமானம் மற்றும் இதர இரயில்கள் மூலம் சென்னை வருவதால், சென்னை விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில், அமைக்கப்பட்டுள்ள சிறப்பு உதவி மய்யத் தில், ரயில்வே மற்றும் தமிழ்நாடு ரயில்வே காவல்துறை (நிஸிறி) உடன் இணைந்து சென்னை பெருநகர காவல் ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
ரயிலில் பயணம் செய்து, சென்னை, சென்ட்ரல் நிலையம் திரும்பும் பயணி களுக்கு உதவுவதற்காக, சென்னை பெரு நகர காவல், பூக்கடை காவல் துணை ஆணையாளர் ஷ்ரேயா குப்தா, (அலை பேசி எண்.94982 33333), தலைமையில், பூக்கடை உதவி ஆணையாளர் பால கிருஷ்ணபிரபு (அலைபேசி எண்.94440 33599) மற்றும் சிறப்பு உதவி மய்ய வழிகாட்டும் அதிகாரி (Liaison Officer)/C-1 பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் தள வாய்சாமி அலைபேசி எண்.98409 76307) மற்றும் காவல் குழுவினர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தயார் நிலையில் இருப்பர். மேலும் காவல் குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருப்பர்.
காயமடைந்த பயணிகளுக்கு உடனடி யாக சிகிச்சைக்கு அளிக்க இராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ( RGGGH), உதவி ஆய்வாளர் ரமேஷ் (அலைபேசி எண்.94442 06868), சிறப்பு உதவி ஆய்வாளர் ஆனந்தி (அலைபேசி எண்.94981 32395) தலைமையில் காவல் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சென்ட்ரல் இரயில் நிலையத்தில் உதவி தேவைப்படும் பயணிகள் 044-2342454 மற்றும் 94981 00211 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.
சென்ட்ரல் ரயில் நிலைய கட்டுப் பாட்டறை எண்.044-25330952 மற்றும் 044-25330952 ஆகியவற்றில் தொடர்பு கொண்டும் உதவி பெறலாம்.
விமான நிலையத்தில் சிறப்பு ஏற் பாடுகள்: ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த பயணிகள், சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும்போது, அங்குள்ள காவல் சிறப்பு கட்டுப்பாட்டறை குழுவினர் மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இதற்காக, சென்னை விமான நிலையத்தில் சென்னை பெருநகர காவல்துறை சார்பில் உதவி எண்.94981 00151 அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் திரும்பிய பயணிகளுக்கு, சிகிச்சை அளிக்கவும், படுகாயமடைந்து சென்னை திரும்பியவர் களை ஆம்புலன்ஸ் வாகனத்தில் மருத்து வமனை அழைத்து செல்லவும், அவ்வாறு ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் Green corridor வழித்தடத்தில் விரைவாக அழைத்துச் செல்லவும் போக் குவரத்து காவல் அதிகாரிகள் தலைமையில் காவல் வாகனம் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு வாடகைக் கார் மற்றும் ஆட்டோக்களில் எந்த இடையூறும் இல்லாமல் பயணிக்கவும், பயணிகளிடம் இருந்து ஆட்டோ மற்றும் வாடகைக் கார்களில் அதிக கட்டணம் வசூலிக்காததை உறுதி செய்யவும், போக்குவரத்து காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உரிய உதவிகளை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேற்படி விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு உதவி தேவைப்படும் வகையில், சென்னை பெருநகர காவல் கட்டுப்பாட்டறை எண்.044-23452359, தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டறை எண்.100, அவசர உதவி எண்.112 ஆகிய வற்றில் தொடர்பு கொண்டு உதவிகள் பெறவும், குறைகள் இருப்பின் தெரிவிக் கவும், பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.
உயிர் பிழைத்தவர்கள் கண்ணீர்
கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் பல்டி அடித்து தண்டம் புரண்டதாகவும், ஒரு சிலர் உடல் உறுப்புகள் சிதறி மரணம் அடைந்தாகவும் விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்து உயிர் பிழைத்த பயணி ஒருவர் தெரிவித்தார்.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட் டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே 2.6.2023 அன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ஹவுரா அதிவிரைவு ரயிலும் அங்கு விபத்துக்குள்ளானது. மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட இந்த கோர விபத்தில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 900-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த ரயில் விபத்தில் உயிர் தப்பிய ஒரு சிலர் விமானம் மூலம் சென்னை வந்தனர். இவர்களில் ஆதிலட்சுமி என்ற மாணவி விபத்து குறித்து செய்தியாளர்களிடம் விவரித்தார். அவர் கூறுகையில், “நான் சென்னை லயோலா கல்லூரியில் படித்து வருகிறேன். ‘இன்டர்ன்ஷிப்’ பயிற்சிக்காக கொல்கத்தா சென்று இருந்தேன். திரும்பி வர கோரமண்டல் விரைவு ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்து கொண்டு இருந்தேன். இந்தப் பயணத்தின்போது, 2.6.2023 அன்று இரவு 7 மணிக்குதான் இந்த விபத்து நடந்தது. நான் பி8 பெட்டியில் இருந்தேன். எங்களின் பெட்டியில் பெரிய சேதம் இல்லை. விபத்து ஏற்பட்டவுடன் எங்களது பெட்டியில் இருந்த பலர் நிலை தடுமாறி விழுந்தனர். இதன் காரணமாக பலருக்கு காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ரயில் நின்றுவிட்டது. நான் இறங்கி சென்று பார்த்தபோதுதான் ரயில் தடம் புரண்டு இருப்பது தெரியவந்தது. பி6 பெட்டிக்கு அடுத்த உள்ள பெட்டிகளில் பெரிய பாதிப்பு இல்லை. பி6 பெட்டிக்கு முன்னதாக உள்ள பெட்டிகள் பல்டி அடுத்து சாயந்து இருந்தது. இன்ஜின் தொடங்கி, முன்பதிவு செய்யாத பெட்டிகள், படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகள் அனைத்தும் தரம் புரண்டு இருந்தன. நான் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தபோது அருகில் உள்ள தண்டவாளத்தில் ஒரு ரயில் சென்று கொண்டு இருந்தது. விபத்து நடந்து 15 நிமிடம் கழித்துதான் ஆம்புலன்ஸ் வந்தது. முன்பதிவு செய்யாத பெட்டிகளில் அதிகம் பேர் பயணித்தனர். அவர்களில் பலருக்கு 17 முதல் 30 வயது வரைதான் இருக்கும். நான் நடந்து சென்று பார்த்த போது ஒருவர் அழுது கொண்டு இருந்தார். அவரிடம் பேசியபோது, உடன் வந்தவர் இறந்து விட்டதாக கூறினார். உடல் உறுப்புகள் வெளியே வந்து அவர் இறந்துவிட்டதாக கூறினார். விபத்து ஏற்பட்டு 2 மணி வரை நேரம் அங்குதான் இருந்தோம். இதன்பிறகு பேருந்து மூலம் புவனேஸ்வர் வந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்துள்ளோம்” என்று அவர் கூறினார்.
ஒடிசா ரயில் விபத்தில்
தமிழர்கள் யாரும் மரணம் இல்லை
ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதிய தால் கொல்கத்தாவில் இருந்து சென் னைக்கு வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 296 பேர் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந் தோர், காயமடைந்தோரில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “ஒடிசாவில் 2.6.2023 அன்று ஏற்பட்ட கோர விபத்தில் நூற்றுக்கணக் கான அப்பாவி மனித உயிர்கள் பறிபோயிருக்கும் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளமுடியவில்லை. தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
தற்போது வரை அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தோர், சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டோருள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை எனத் தெரியவந்துள்ளது. ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் தலைமையிலான குழுவினர் மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாகச் சென்னை வந்தடைவதை உறுதி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன். மேலும், இவ்விபத்தில் காயமடைந்தவர் களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காகச் சென் னையில் உள்ள மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளன” என முதலமைச் சர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
சுதந்திரத்துக்குப் பிறகு நிகழ்ந்த மிகவும் மோசமான விபத்து
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் அடுத்தடுத்து மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். இது ரயில்வே துறை வரலாற்றில சுதந்திரத்துக்குப் பிறகு நிகழ்ந்த மிகவும் மோசமான விபத்துகளில் ஒன்று என புள்ளிவிவரம் கூறுகிறது. இதற்கு முன்பு நிகழ்ந்த மோசமான விபத்துகள்:
1964 டிசம்பர் 23: ராமேஸ்வரம் புயல் காரணமாக பாம்பன்-தனுஷ்கோடி பயணிகள் ரயில் விபத்தில் சிக்கியதில் 126 பேர் உயிரிழந்தனர்.
1981 ஜூன் 6: பீகார் மாநிலம் பாக்மதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தை கடக்கும்போது நிகழ்ந்த ரயில் விபத்தில் 750-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
1995 ஆகஸ்ட் 20: உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் அருகே நின்று கொண்டிருந்த களிந்தி எக்ஸ்பிரஸ் ரயில் மீது புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 305 பேர் உயிரிழந்தனர்.
1998 நவம்பர் 26: பஞ்சாபின் கன்னா பகுதியில் பிரன்டீர் கோல்டன்டெம்பிள் மெயிலின் தடம்புரண்ட 3 பெட்டிகள் மீது ஜம்மு தாவி-சீல்டா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 212 பேர் உயிரிழந்தனர்.
1999 ஆகஸ்ட் 2: மேற்கு வங்கமாநிலம் கைசால் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவாத் அசாம் எக்ஸ்பிரஸ் ரயில் மீது பிரம்மபுத்ரா மெயில் மோதிய விபத்தில் ராணுவம், துணை ராணவ வீரர்கள் உட்பட 285 பேர் உயிரிழந்தனர்.
2002 செப்டம்பர் 9: பீகார் மாநிலம் ரபிகஞ்ச் நகருக்கு அருகே தாவே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது சென்ற ஹவுரா-ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
2010 மே 28: மேற்கு வங்க மாநிலம் ஜார்க்ரம் அருகே தடம்புரண்ட ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 148 பயணிகள் உயிரிழந்தனர்.
2016 நவம்பர் 20: உத்தரப்பிரதேச மாநிலம் புக்ராயன் நகரில் இந்தூர்-ராஜேந்திர நகர் எக்ஸ்பிரஸ் ரயிலின்14 பெட்டிகள் தடம் புரண்டதில் 152 பேர் உயிரிழந்தனர்.
வெளிநாட்டுத் தலைவர்கள் இரங்கல்
ரஷ்ய அதிபர் புதின் அனுப்பியுள்ள செய்தியில், “இந்த துயரமான விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் துயரத்தில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா விடுத்துள்ள செய்தியில், “ஒடிசா ரயில் விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தது மற்றும் ஏராளமானோர் காயம் அடைந்தது குறித்த செய்தியால் நான் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளேன். ஜப்பான் அரசு மற்றும் மக்கள் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்” கூறியுள்ளர்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது ட்விட்டர் பதிவில், “குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன். இத்துயரமான நேரத்தில் பிரான்ஸ் உங்கள் பக்கம் நிற்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை எண்ணி வேதனைப் படுகிறேன்” என்று கூறியுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விடுத்துள்ள செய்தியில், “ஒடிசா ரயில் விபத்து தொடர்பான படங்கள் மற்றும் செய்திகள் என் மனதை உடையச் செய்தன.அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன். இந்த கடினமாக நேரத்தில் இந்திய மக்களுக்கு கனடா மக்கள் துணை நிற்கின்றனர்” என்று கூறியுள்ளார்.
ஜெர்மனி பிரதமர் ஒலாஃப் ஸ்கோல்ஸ், தைவான் அதிபர் சாய்-இங் வென், அய்ரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், அய்.நா. பொதுச் சபையின் தலைவர் சபா கொரோசி, இத்தாலி துணை பிரதமர் அன்டோனியோ தஜானி, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி உள்ளிட்டோரும் இரங்கலை தெரிவித்துள்னர்.
நேபாளம், பூடான், இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகளும் இரங்கல் தெரிவித்துள்ளன. நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா தனது ட்விட்டர் பதிவில், “ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். இத்துயரமான நேரத்தில் பிரதமர் மோடி அரசுக்கும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
ரயில் விபத்துக்கு யார் பொறுப்பு – எதிர்க்கட்சிகள் கேள்வி
ஒடிசா ரயில் விபத்துக்கு யார் பொறுப்பு என்று கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சியினர், இந்த விபத்து தொடர்பாக ஒன்றிய அரசு உரிய விளக்கம் அளிக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர்: விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்துக்கு யார் பொறுப்பு என்பது அறியப்பட வேண்டும். இந்த விபத்து தொடர்பாக பிரதமரும், ரயில்வே அமைச்சரும் உரிய விளக்கம் கொடுக்க வேண்டும்.
சாகேத் கோகலே, செய்தித்தொடர்பாளர், திரிணாமுல் காங்கிரஸ்: இந்தச் சம்பவத்தை அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல். தொழில்நுட்பக் கோளாறு இந்த விபத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. இந்த விபத்துத் தொடர்பாக நிறைய கேள்விகள் உள்ளன. உரிய பதில் வழங்கப்பட வேண்டும்.
பினாய் விஷ்வம், நாடாளு மன்ற உறுப்பினர், சிபிஅய்: ஒன்றிய அரசு சொகுசு ரயில்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. சாமானிய மக்களுக்கான ரயில்களும் அவற்றின் தடங்களும் புறக்கணிக் கப்படுகின்றன. ஒடிசா ரயில் விபத்து அதற்கு ஓர் உதாரணம். ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்.
தீபங்கர் பட்டாச்சார்யா, பொதுச் செயலர், சிபிஅய் (எம்எல்): ரயில்வேயில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அம்சங்கள் எதுவும் இல்லையா? இத்தகைய விபத்துகள் இனி தொடர்ந்து நிகழுமா? பதில் தெரியப்பட வேண்டிய கேள்விகள் இவை.