சென்னை, ஆக.26- நகரப் பகுதி களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப்பள்ளியில் நடைபெறும் விழாவில், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றனர். தற்போது 34,987 பள்ளிகளில் 17.53 லட்சம் பேர் பயன்பெற்று வருகின்றனர்
முதலமைச்சரின்
காலை உணவு திட்டம்
காலை உணவு திட்டம்
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் முதலமைச்சரின் ‘காலை உணவு திட்டம்’ தொடங்கப்பட்டது. 2022 செப்டம்பர் 15ஆம் தேதி மதுரை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் காரணமாக, பல்வேறு கட்டமாக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, அடுத்த கட்டமாக ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி, 2024 ஜூலை 15ஆம் தேதி காமராஜர் பிறந்த நாளில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி கிராமத்தில் உள்ள ‘புனித அன்னாள்’ அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழகத்தில் 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 2 லட்சத்து 23, 536 மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகிறார்கள்.
தற்போது வரை முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் 34,987 தொடக்கப்பள்ளிகளில் மொத்தம் 17 லட்சத்து 53 ஆயிரம் மாணவ – மாண விகள் பயன்பெற்று வருகிறார்கள். முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குழந்தைகளின் கற்றல் திறனும் மேம்பட்டுள்ளது. 90 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் முந்தைய பாடங்களை நினைவு கூர்வது அதிகரிப்பதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. மேலும் மாணவர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதால் ஊட்டச் சத்து குறைபாடினால் பாதிக்கப்படுவதும் தடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியமும் மேம்பட்டுள்ளது.
பிற மாநிலங்களுக்கு முன்னோடி
தமிழ்நாட்டை பின்பற்றி தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்கள் தங்கள் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டின் காலை உணவு திட்டத்தை கனடா அரசும் தங்கள் நாட்டில் நடைமுறைப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் முதல மைச்சரின் காலை உணவு திட்டம் நகர்ப்புற பகுதிகளில் அமைந்துள்ள 2,430 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும் என்று 2025 மார்ச் 14 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புறங்களில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை சென்னை மயிலாப்பூரில் உள்ள ‘புனித சூசையப்பர்’ தொடக்கப் பள்ளியில் இன்று (26.8.2025) காலை 8.30 மணிக்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.