வேலூர், ஆக.26- விநாயகர் சதுர்த்தி விழா நாளை (27.8.2025) கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம் யாதமரி, பூமிரெட்டி பள்ளியிலிருந்து வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மீறி 10 அடிக்கும் உயரமான பல்வேறு விநாயகர் சிலைகள் வாகனங்கள் மூலம் கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து வேலூர் மாவட்ட காவல் துறையினர் காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின்பேரில், காவல் துறையினர் குடியாத்தம் அடுத்த பரதராமி அருகே தமிழ்நாடு எல்லையில் உள்ள சோதனைச்சாவடி அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழ்நாடு பகுதிக்குள் விநாயகர் சிலைகளை ஏற்றி வந்த வாகனங்களை தீவிரமாக கண்காணித்து, அனுமதிக்கப் பட்ட உயரத்தைவிட தவிர 10 அடிக்கும் அதிகமான உயரமுள்ள விநாயகர் சிலைகளை தமிழ்நாடு எல்லைப் பகுதிக்குள் அனுமதிக்காமல் மீண்டும் ஆந்திர பகுதிக்கு திருப்பி அனுப்பினர்.