புதுடில்லி, ஆக. 23 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் என்.டி.ஏ. வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என மகாராட்டிரா மாநில முதலமைச்சர்பட்நாவிஸ் கேட்டுக்கொண்ட நிலையில், தனது கோரிக்கையை ஏற்க முடியாத இயலாமையை (வாக்களிக்க முடியாது) வெளிப்படுத்தியதாக தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சரத்பவார் கூறியதாவது:-
எதிர்க்கட்சிகளின் வேட் பாளர் பி. சுதர்சன் ரெட்டி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். எதிர்க்கட்சி களுக்கு என்டிஏ-வை விட குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருந்தபோதிலும், அதனால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை.
எதிர்க்கட்சிகளின் அனைத்து வாக்குகளும் சுதர்சன் ரெட்டிக்கு செல்லும். அதன்மூலம் பலம் தெரியவரும். நாங்கள் எந்தவொரு வியப்பையும் எதிர்பார்க்கவில்லை.
என்.டி.ஏ. வேட்பாளர் எங்களுடைய சித்தாந்தத்துடன் ஒத்துப் போகவில்லை. அவர் ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்தபோது, முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அவர் ஆளுநரை சந்தித்தபோது கைது செய்யப்பட்டார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்கு இது தெளிவான உதாரணம். அத்தகைய வேட்பாளருக்கு ஆதரவை எதிர்பார்ப்பது பொருத்தமானது அல்ல. எனவே, முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்க முடியாத எனது இய லாமையை நான் வெளிப் படுத்தினேன்.
இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.