இந்தியாவுக்கு நெருக்கடி! அமெரிக்கா, இந்தியா மீதான 50% வரிவிதிப்பு அடுத்த வாரம் திட்டமிட்டபடி அமல்

1 Min Read

வாசிங்டன், ஆக.23- ரஷ்ய எண்ணெய்யை தொடர்ந்து இறக்குமதி செய்வதன் மூலம் இந்தியா ‘லாபம் தேடும் திட்டத்தை’ நடத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ குற்றம் சாட்டினார்.

மேலும், இந்திய இறக்குமதிகள் மீதான 50 சதவீத வரிவிதிப்பு அடுத்த வாரம் திட்டமிட்டபடி அமலுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

வெள்ளை மாளிகைக்கு வெளியே செய்தியாளர் களிடம் பேசிய நவரோ, “பிப்ரவரி 2022இல் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பதற்கு முன்பு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கவில்லை. இந்தியா அப்போது தனது தேவையில் கிட்டத்தட்ட ஒரு சதவீதம் மட்டும் ரஷ்யாவிலிருந்து வாங்கியது. ஆனால், அது இப்போது 35 சதவீதமாக உயர்ந்துள்ளது. அவர்களுக்கு எண்ணெய் தேவையில்லை. இது ஒரு லாபப் பகிர்வுத் திட்டம். இது ரஷ்யாவுக்கு பணத்தை மாற்றும் ஒரு சலவைத் தொழிற்சாலை போல செயல்படுகிறது என்பதுதான் உண்மை.

இந்தியாவுடனான எங்கள் வர்த்தகத்தால் அமெரிக்கர்களுக்கு என்ன லாபம் இருக்கிறது. இந்தியா அதிக வரி போடுகிறது.

இது அமெரிக்க தொழிலாளர்களையும், அமெரிக்க வணிகத்தையும் பாதிக்கிறது. அவர்கள் எங்களிடமிருந்து பெறும் பணத்தை, ரஷ்ய எண்ணெய்யை வாங்கப் பயன்படுத்துகிறார்கள். ரஷ்யர்கள் இந்தப் பணத்தை ஆயுதங்களை உருவாக்கவும், உக்ரைனியர்களைக் கொல்லவும் பயன்படுத்துகிறார்கள்” என்றார்

ரஷ்யாவிடம், இந்தியா எண்ணெய் கொள்முதல் செய்வது என்பது ரஷ்யாவின் போருக்கு நிதியளிக்க உதவுவதாக ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனையடுத்து, இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கும் முடிவையும் அமெரிக்கா எடுத்தது.

இந்தியப் பொருட்கள் மீதான வரிகளை 50 சதவீதமாக இரட்டிப் பாக்கியதைத் தொடர்ந்து, இந்திய அமெரிக்க உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்கா இந்தியாவின் மீது கூடுதலாக 25 சதவீத வரியை விதித்த போதிலும், ரஷ்யாவிடம் மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *