அறிவியல் துணுக்குகள்

தென் கிழக்கு சீனாவில் ஆற்றில் வாழும் ஒரு புதிய மீன் இனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 4 அங்குல நீளமுடைய இந்த மீன்கள் பெரிய கண்களும், மூன்று வரிசை பற்களும், பளபளப்பான வெள்ளி நிறச் செதில்களும் கொண்டுள்ளன. இதற்கு ‘ஹைனானியா மின்ஜெங்கி’ என்ற விலங்கியல் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பூமியில் இருந்து 10 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது NGC 1309 கேலக்ஸி. இதன் மொத்த விட்டம் 75,000 ஒளியாண்டுகள். இதை ஹப்பிள் தொலைநோக்கி மிக அழகாகப் படம் எடுத்துள்ளது.

வெள்ளி, வியாழன் என இரு கோள்கள் ஆகஸ்ட் 12 முதல் 20ஆம் தேதி வரை அருகருகே தெரிய உள்ளன. ஆகஸ்ட் 19 அன்று பிறை நிலா இவற்றுடன் இணைந்து முக்கோணமாக அழகாகத் தெரிய உள்ளன.

தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவின் தெற்கு அட்லான்டிக் கரையை ஒட்டி சமீபத்தில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஊன் உண்ணும் கடற்பஞ்சு, பவளப்பாறை, வியப்பான நட்சத்திர மீன் உள்ளிட்ட 40 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நிலவில் தரையிறங்கி ஆய்வு மேற்கொள்ள மின்சாரம் தேவை. இதை உற்பத்தி செய்யும் வகையில் 2030ஆம் ஆண்டுக்குள் நிலவில் அணு மின் நிலையத்தை உருவாக்க நாசா திட்டமிட்டுள்ளது. இதிலிருந்து 100 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *