புதுடில்லி, ஆக.21 குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் இருந்த பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை பதவிநீக்கம் செய்யும் மசோதாவை நேற்று (20.8.2025) ஒன்றிய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் மசோதா நகலை கிழித்து அமித் ஷா மீது வீசியெறிந்தனர்.
இந்நிலையில் இந்த மசோதாவை மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘‘பாஜக முன்மொழி யும் புதிய மசோதா மூலம் மன்னர் யாரை வேண்டுமானாலும் பதவி நீக்கம் செய்யக்கூடிய பழங்காலத்துக்கு நாம் திரும்பிச் செல்கிறோம்.
அவர்களுக்கு ஒருவரின் முகம் பிடிக்கவில்லை என்றால் அமலாக்கத் துறையிடம் கூறி ஒரு வழக்கு போடச் சொல்வார்கள்.
பின்னர் மக்களால் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பிரதிநிதியின் பதவி 30 நாள்களுக்குள் பறிக்கப்பட்டு தூக்கி எறியப்படுவார்.
கைது செய்யப்படுவதால் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக அர்த்தமல்ல. ஆனால், இந்த மசோதா மூலம், அர சாங்கங்கள் தங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிராக கோஷ்டிவாதத்தில் ஈடுபடும் அபாயம் உள்ளது.
இது நீதித்துறையின் சுதந்திரத்தை மீறுவதாகும். அதிகாரமே நீதியை ஆளும் சூழ்நிலை உருவாகும்’’ என்று தெரி வித்தார்.