தி.மு.க.வை ஆதரிப்பதற்கு காரணம் என்ன? எழுச்சித்தமிழர் திருமாவளவன் விளக்கம்

2 Min Read

சென்னை, ஆக. 18-  ஒடுக்கப்பட்டவர் களின் தலைநிமிர்வுக்காக தொடர்ந்து களத்தில் நிற்போம் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

திருமாவளவன் பிறந்தநாள்

விசிக தலைவர் திருமாவளவனின் 63ஆவது பிறந்தநாள் நேற்று  (17.8.2025) கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு, சென்னை காமராஜர் அரங்கத்தில் ‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற கருப்பொருளுடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மநீம தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.

இதில் ஏற்புரை நிகழ்த்தி திருமாவளவன் பேசியதாவது: விசிக என்பது தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத சக்தி, தமிழ்நாட்டின் எதிர்காலம் என்பதை, இந்த விழாவில் பங்கேற்ற ஒவ்வொருவரும் ஆற்றிய உரை உறுதிப்படுத்தி உள்ளது. நாம் மேலும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்ற உணர்வை இது தருகிறது. ஒடுக்கப்பட்டவர்களின் தலை நிமிர்வுக்காக நாம் களத்தில் நிற்கிறோம், தொடர்ந்து நிற்போம்.

இந்த நிலையில், தூய்மைப் பணியாளர் பிரச்சினையில் திருமாவளவன் ஏன் அரசை எதிர்த்துப் போராடவில்லை என்று விமர்சிக்கின்றனர். குப்பை அள்ளுவோரை பணி நிரந்தரம் செய்து, நீங்கள் தொடர்ந்து அந்த தொழிலையே செய்து கொண்டிருங்கள் என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. இதை நாம் சொன்னால் எதிராக பேசுவதாக கருதுவார்கள். அதனாலேயே, நாமும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று சொல்ல நேர்ந்தது.

தி.மு.க.வை
ஆதரிப்பதற்குக் காரணம்?

வாக்குரிமையை பறிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. ஆனால், அவர்களை யாரும் விமர்சிப்பது இல்லை. ஆனால், ‘திருமாவளவன் இரண்டு சீட்டுக்காக போய் நிற்கிறார்’ என்கின்றனர். அது எங்கள் விருப்பம். எந்த கூட்டணி என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். அரசியல் நகர்வுகளை நாங்களே தீர்மானிப்போம். யாரும் என்னை தடுக்க முடியாது. யாராலும் விலை பேச முடியாது.

நாங்கள் திமுகவோடு இணைந்து பயணிப்பதற்கு, அம்பேத்கர், பெரியார் கருத்தியலை பின்பற்றுவதே காரணம். திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என்பதல்ல விஷயம். மதச்சார்புள்ள கூட்டணி, மதச்சார்பற்ற கூட்டணி என்பதே நாடு முழுவதும் உள்ள முக்கியமான அரசியல். மதச்சார்பின்மை காப்போம் என்ற கருத்தியலை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதன் மூலமாகவே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை நாம் மேலும் உறுதிப்படுத்த முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *