அடிக்கடி எரிச்சலும் கோபமும் அடைகிறவர்களை, இவர் என்ன மூல நோய் பிடித்தவரா? எனக் கேலி செய்யும் வழக்கம் நம்மிடம் உண்டு. பெரும்பாலான சமயங்களில் மூல நோய் இருப்பினும் அறிகுறிகள் இருக்காது. அறிகுறிகள் இருப்பின் அதில் முதன்முதலாகத் தோன்றுவது, மலம் வெளிவரும்போது சிவப்பாக இரத்தம் சொட்டுவதே. இது தொடர்ந்தோ அல்லது விட்டு விட்டோ தோன்றலாம்.
டாக்டர் சு.நரேந்திரன்
சிறப்பு நிலைப் பேராசிரியர்
டாக்டர்
எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை.
இது தொடர்ந்தால், மலம் கழிக்கும் போது மூலம் வெளியே வந்து தானாக உள்ளே சென்றுவிடும். நாள்பட்ட நிலையில், வெளியே வந்த மூலம் உள்ளே செல்லாது. உள்ளே தள்ளிவிட வேண்டியிருக்கும். இது போன்ற நிலையில் மருத்துவச் சிகிச்சை பெறாவிடில், மூலம் ஆசனவாய்க்கு வெளியே துருத்தியபடி காணப்படும். நோயாளிக்கு இதனால் ஒருவித சங்கடம் ஏற்படும். வலி இருக்காது. இச்சமயங்களில் ஆசனவாயிலிருந்து சளி போன்ற திரவம் வெளிவரும். இதனால் பிசுபிசுப்பும், அரிப்பும் உண்டாகும். காலம்காலமாக மனிதனை வாட்டும் நோய்களில் மூலமும் ஒன்று. ஆண்-பெண், எழை-பணக்காரர், இளைஞர், முதியோர் என்ற வேறுபாடின்றி அனைவரும் இந்நோயால் பாதிக்கப்படலாம்.
மூலத்தின் வகைகள்
வெளி மூலம், உள்மூலம் என இருவகை மூலநோய்கள் உள்ளன. வெளி மூலம் ஆசனவாய்க்கு அருகில் தோலால் மூடப்பட்டிருக்கும். ஆனால் உள் மூலம் ஆசன வாயினுள் சளிப் படலத்தால் மூடப்பட்டிருக்கும் சிலருக்கு இரண்டுமே சேர்ந்து காணப்படலாம்.
ஆசனவாயில் உள்ள இரத்தக்குழாய்கள் (சிரைகள்) வீங்கிப் பெருத்து மேலிருந்து கீழே இறங்கி ஒரு பந்து போன்று உருண்டையாகக் காட்சியளிக்கும். மூல நோய்க்கு ஆங்கிலத்தில் ‘பைல்ஸ்’ (Piles) என்று பெயர். இதன் பொருள் பந்து என்பது ஆகும்.
பரம்பரைத் தன்மை
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பரம்பரையாக மூல நோய் அதிகமாகத் தோன்றுகிறது. நான்கு கால் விலங்குகளுக்கு மூல நோய் உண்டாவதில்லை. ஆனால் புவிஈர்ப்புச் சக்தியினால், மலக்குடலில் உள்ள ரத்த நாளங்களில் வால்வுகள் இல்லாதிருப்பின், இந்நோய் உண்டாகிறது. இது தவிர மலச்சிக்கல் காரணமாக மலம் கழிக்க முக்குவது, மலமிளக்கிகளை அதிகம் பயன்படுத்துதல், அதிக வயிற்றுப் போக்கு, சீதபேதி ஆகியவையும் இந்நோய் தோன்றக் காரணங்களாகும்.
நீர்த் தாரையில் சுருக்கம் அல்லது வயதான காலத்தில் பிராஸ்டேட் வீங்கியதால் சிறுநீர் கழிக்க முக்குவது ஆகியவை பல நாள்கள் தொடர்ந்தால் மூல நோய் ஏற்படக் கூடும். பெண்களுக்குப் பிரசவ காலத்திலும் இந்நோய் உண்டாகலாம்.
ஆப்பிரிக்காவில் மூல நோய் குறித்து பேராசிரியர் பர்கிட் (BURKIT) மேற்கொண்ட ஆய்வில், கிராம மக்களிடையே இந்நோய் மிகக் குறைந்த அளவில் காணப்படுகிறது என்பதும், பழங்குடி மக்களிடையே இந்நோய் அறவே இல்லை என்பதும் கண்டறியப்பட்டது. ஆனால் நகரங்களில் வாழ்பவர்களுக்கு, கிராம மக்களைவிட 11 மடங்கு அதிகமாக இந்நோய் உள்ளது தெரிய வந்தது.
இவ்வேறுபாடுக்குக் காரணம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் மலத்தை வெளித் தள்ளும் நார்ப் பொருள் உணவுகளை அதிகமாக உட்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதேயாகும். மூலத்தில் வெடிப்பு, புண் ஆகிய கோளாறுகள் ஏற்படாதவரை வலி இருக்காது. ஆனால் மூலத்தில் இரத்தம் கசியுமானால் இரத்த சோகை உண்டாகும்.
தடுப்பு என்ன?
மூலநோய் வராமல் தடுத்துக் கொள்ள கீரை, காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் முக்கியமாகப் பச்சைக் காய்கறிகளுடன் பழம், முழு தானியம், பருப்பு, கடற்பாசி போன்ற உணவுப் பொருட்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். சாணம் இடும்போது மாடு தனது ஆசனவாயை எப்படிச் சுருக்கி விரிக்கின்றதோ, அதே போன்று இடுப்புக் குழிப் பயிற்சி (Pelvic exercise) செய்தால் மூலம் வராமல் பாதுகாக்க முடியும்.
காரம் வேண்டாம். மசாலா நிறைந்த உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு உணவுகளை ஒதுக்க வேண்டும். நார்ச்சத்து உணவுகளை அதாவது முழு கோதுமை, கடற்பாசி, பயறு வகைகள், நாட்டுக் காய்கறிகளான அவரை, புடலை, கொத்தவரை மற்றும் கீரைகள், இரவில் இரண்டு விதமான பழங்களைச் சாப்பிட வேண்டும். ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்திருக்க வேண்டாம். உடல் பருமனாகாது பார்த்துக் கொள்ளவும்.
மூலத்துக்குக் காரம் பகை
உணவில் அதிக காரம், மசாலா பொருள்களைத் தவிர்க்க வேண்டும். மலம் கழிப்பதைத் தள்ளிப் போடக்கூடாது. அதே போல மலம் கழிக்க முக்கவும். அவசரப்படவும் கூடாது. புலால் உணவை உண்பவர்களும் காய்கறிகளை உணவுடன் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூலத்திற்கு மூல காரணம் மலச்சிக்கல்
உணவில் நார்ச்சத்துக் குறைவது, போதிய அளவு தண்ணீர் குடிக்காதது, உடல் உழைப்புக் குறைவு, கர்ப்பகாலம், வயோதிகம், பயணம், சில மருந்துகள், சில பெரிய நோய்கள், மலக்குடல் நரம்புகளில் பாதிப்பு ஆகிய காரணங்களால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.
கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படுவது வழக்கம் உணவுப் பழக்க வழக்கம் மாறுபடுகிறது. அடிவயிற்றில் உள்ள தசைகள் தளர்ந்து விடுகின்றன. பெருங்குடலில் தண்ணீர் தேவை அதிகமாகிறது. இரும்புச் சத்து மாத்திரைகள், டானிக் சாப்பிடுவது, பதற்றம் மற்றும் கவலை ஆகியவை கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் ஏற்படக் காரணமாக அமைகின்றன. வலி நிவாரண மாத்திரைகள் ஆண்டாசிட் மாத்திரைகள், குறிப்பாக அலுமினியம், கால்சியத்தை உள்ளடக்கிய மாத்திரைகள், வயிற்றில் ஏற்படும் எரிச்சலுக்குச் சாப்பிடும் மருந்துகள், வயிற்றுப் போக்குக்குச் சாப்பிடும் மருந்துகள், மயக்க மருந்துகள், உயர் இரத்த அழுத்த மருந்துகள், அதிகச் சிறுநீரைச் சுரக்கச் செய்யும் மாத்திரைகள் ஆகியவை காரணமாக மலச்சிக்கல் ஏற்படலாம்.
மேலும் மலத்துடன் சளியும் கலந்து வந்தால் அமீபியாசிஸ் நோயாகவும் இருக்கக் கூடும். மூல நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு மீண்டும் நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு எனினும் ஒரு சிலருக்கு மூல நோய் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ மூல நோய் உள்ளவர்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அறுவைச் சிகிச்சைக்குப் பின்பு நார்ச்சத்து மிகுந்த உணவு, அதிக அளவு தண்ணீர் குடித்தல், இடுப்புத் தசைகளுக்குப் பயிற்சி ஆகியவற்றைக் கடைப்பிடித்து மூலநோய் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். புலால் உணவில் நார்ச்சத்து கிடையாது என்பதால், புலால் உணவுடன் நார்ச்சத்து உணவையும் சேர்த்துக் கொள்ளத் தவறக்கூடாது.
நூடுல்ஸ், பிஸ்கட், கேக், சமோசா, பால், முட்டை, இறைச்சி, மீன் மற்றும் புலால் உணவுகளில் நார்ச்சத்து கிடையாது. நம் நாட்டின் நகர்ப்புற உணவில் 40 முதல் 60 சதவீதம் வரை நார்ச்சத்துப் பற்றாக்குறை உள்ளது. உணவில் அடிக்கடி கீரை, பீன்ஸ் உள்பட பச்சைக் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்வது நல்லது. வாழைப் பழத்திலும் நார்ச்சத்து அதிகம்.