திருவையாறில் எழுச்சியுடன் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டு பரப்புரைக் கூட்டம்

திருவையாறு, ஆக. 18- அக்டோபர் 4ஆம் தேதி செங்கல்பட்டு மறைமலை நகரில் நடைபெற உள்ள சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாடு விளக்க பரப்புரைத்  தொடர் கூட்டங்களில் ஒன்றாக திருவையாறு ஒன்றியம், நகர கழகம் சார்பாக 16.8 .2015 மாலை 6 மணிக்கு  திருவையாறு தேரடியில் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக கண்டியூர் தாமஸ் அற்புதம் மோகன்ராஜ், தஞ்சை மாநகர இளைஞரணி  துணைச் செயலாளர் பெரியார் செல்வம், அமர்சிங் ஆகியோர் தந்தை பெரியார், தமிழர் தலைவர், கலைஞர் ஆகியோரைப் பற்றிய பாடல்களை நல்ல இசை நயத்துடன் பாடினார்கள்

இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி அமர்சிங் தலைமையேற்றார். திருவையாறு ஒன்றிய தலைவர் ச. கண்ணன் வரவேற்புரை ஆற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர்  இரா.குண சேகரன், தஞ்சை மாவட்ட கழக செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி, மாவட்ட விவசாய அணி தலைவர் பாலசுப்பிரமணியன் திருவையாறு ஒன்றியச் செயலாளர் வழக்குரைஞர் துரை. ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர். சிபிஅய்(எம்) ஒன்றிய குழு உறுப்பினர் எம். ராம், மதிமுக ஒன்றிய செயலாளர் க .சாமிநாதன், நகர காங்கிரஸ் கட்சி தலைவர் கிஷ் (எ) கிருஷ்ணமூர்த்தி, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் என். இராஜலிங்கம், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோபு. பழனிவேல் நகர திமுக செயலாளர் சி.நாகராஜன் ஆகியோர் மிகச் சிறப்பாக தமிழ்நாடு தந்தை பெரியாரின் தொண்டால், சுயமரியாதை இயக்கத்தால் விளைந்த வளர்ச்சியைப் பெருமை பட பேசினார்கள்.

கரிகால் பெருவளத்தானே…

தஞ்சை மாவட்ட தலைவர்  சி. அமர்சிங் தமது தலைமை உரையில் திருவையாறு பகுதிகளில் நடைபெறும் பழமைவாத மூடநம்பிக்கை சடங்குகள் குறித்தும் பார்ப்பனர்களின் வயிறு வளர்க்கும் தந்திரம் குறித்தும் பேசினார்.  இராஜராஜன், இராஜேந்திர சோழன் போன்ற மன்னர்களை மதக் கண்ணோட்டத்தில் தூக்கி பிடிப்பதுதான் பிஜேபியின் தந்திரம். போற்ற வேண்டிய மாமன்னன் கரிகால் பெருவளத்தானே. அதனை  தமிழருக்கும் நாட்டுக்கும் தெரிவிக்கும் விதமாக தமிழர் தலைவர்.  ஆசிரியர் அவர்கள் கல்லணையில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து விழா நடத்திட அறிவித்துள்ளதையும் அந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ள  வேண்டும் என அழைப்பு விடுத்து உரையாற்றினார். கழக துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார் தமது உரையில், பச்சைத்தமிழர் என்று தந்தை பெரியார் அவர்களால் பாராட்டப் பெற்ற காமராசர் அவர்கள் முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் தந்தை பெரியாரை நேரில் பார்க்க வேண்டும் என்று செய்தி அனுப்பினார், ஆனால் தந்தை பெரியாரோ முதலமைச்சரான நீங்கள் என்னை வந்து பார்ப்பது சரியல்ல நானே வருகிறேன் என உரைத்தார். அதனை மறுத்த காமராசர் அவர்கள் தந்தை பெரியார் பிறந்த நாளில் நேரில் சென்று வாழ்த்தி ஒரு குழு புகைப்படத்தையும் பரிசாக அளித்தார். அந்தப் புகைப்படம் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் தலைவராக இருந்தபோது எடுத்துக் கொண்ட குழு புகைப்படம். அதில் உள்ள சிறப்பம்சம் கீழ் வரிசையில் உட்கார்ந்து இருப்பவர்களில் காமராஜரும் ஒருவர். தந்தை பெரியார் தலைவராக இருந்தபோது காமராஜர் ஒரு சாதாரண தொண்டராக இருந்ததை சுட்டிக் காட்டவும், என்றும் உங்கள் தொண்டனே என்று உணர்த்தும் விதத்தில் அந்த புகைப்படத்தினை காமராஜர், அய்யா அவர்களுக்கு பரிசாக அளித்தார். இதிலிருந்து காமராஜர் அவர்கள் உணர்த்துவது என்ன என்பது தெளிவாக மக்களுக்குத் தெரியும் என மாலைமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.

திருக்குறளை உலகிற்கு கொண்டு சேர்க்க மாநாடுகள் நடத்தியும், மலிவு பதிப்புகள் மூலம் புத்தகமாக மக்களிடையே பரப்பியது சுயமரியாதை இயக்கம்,

மன்னரின் செப்பேட்டை காரணம் காட்டி திருவையாறு சமஸ்கிருத கல்லூரியில் பார்ப்பனர் மட்டுமே கல்வி கற்கலாம் என்பதை உடைத்து திருவையாறு அரசர் கல்லூரி என பெயர் மாற்றி தமிழ் பயிலும் கல்லூரியாக மாற்றிய இயக்கம் சுயமரியாதை இயக்கம்.

புதிய கல்விக் கொள்கையின்படி அய்.அய்.டி.களில் குருகுல கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் 45 ஆயிரம். பிஎச்டி டாக்டரேட் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 60 ஆயிரம் ஆண்டுக்கு இரண்டு லட்சம் என நமது வரிப்பணம் பார்ப்பனர்களுக்கு கொட்டிக் கொடுக்கப்படுகிறது.

தகைசால் தமிழர் விருதினை…

கேரள, தமிழ்நாடு ஆளுநர்கள்  சுதந்திர தினத்திற்கு முன் தினத்தினை ‘பிரிவினை கொடூர நாள்’ என பாகிஸ்தான் பிரிந்த தினத்தினை மத வெறியை பரப்பும் நோக்கில் கொண்டாடி உள்ளார்கள்.அதே நாளில் தமிழ்நாட்டில் தமிழ்நாடு முததலமைச்சர் அவர்கள்  தகைசால் தமிழர் விருதினை முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் அவர்களுக்கு அளித்து இம்மண் எல்லோருக்குமானது என்று அறிவித்து சிறப்பித்துள்ளது.

திராவிட மாடல் அரசின் கொள்கையின் ப்ளூ பிரிண்ட் தான் செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாநாடு.

விஸ்வகர்மா திட்டத்தை…

ஒன்றிய அரசியல் பெண்களுக்கு சொத்துரிமை தர வேண்டும் என்ற சட்டத்திற்கு எதிராக பெண்களையே திரட்டி அதனை நிறைவேற்ற விடாமல் தடுத்தார்கள் பார்ப்பனர்கள். தமிழ்நாட்டில் கலைஞர் அவர்களால் 1989இல் அந்த சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது.

ஒன்றிய அரசு தமிழ்நாட்டின் தற்போதைய கல்வி வளர்ச்சியைத் தடுக்கும் நோக்கிலும் ஜாதீய படிநிலைப் படி தொழில்கள் நிலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வந்த விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு தடுத்துள்ளது.

எல்லா வசதிகளும் செய்து தருகிறோம் படிக்க வேண்டும் என்று படி படி என்று படிப்படியாக உயர்த்தியுள்ளது திராவிடம். இன்றைய திராவிட மாடல் அரசின் நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண்கள் முன்னேற்றத்தில் தனிக் கவனம் செலுத்தி பேருந்து பயணம், உதவித்தொகை, உரிமைத் தொகை என பல்வேறு நலத்திட்டங்களை நாளும் வழங்கி வருகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற சம நோக்கினை செயல்படுத்திடும் அரசாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.

இறுதியாக நகரத் தலைவர் ஆ.கவுதமன் இக்கூட்டம் நடைபெற பெருமளவில் உதவிய திமுக நிர்வாகிகள் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்வை.சிவசங்கரன், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கோ. அரசாபகரன் திருவையாறு நகரத் தலைவர் சி.நாகராஜன் பெருமளவில் தோழர்களுடன் கலந்து கொண்ட காங்கிரஸ் பேரியியக்கத் தோழர் களுக்கும். கூட்டம் சிறப்பாக நடை பெற நிதி வசூல் செய்து ஒத்துழைத்த தோழர்களுக்கும் நன்றி கூறினார்.

இக்கூட்டத்தில் மாநில ப.க மாநில ஊடகப்பிரிவுத் தலைவர் அழகிரிசாமி, மாவட்ட மகளிர் அணி தலைவர் கலைச்செல்வி, பூதலூர் ஒன்றிய செயலாளர் அள்ளூர் பாலு,  ஒன்றிய ப.க.தலைவர் வ.செல்வகுமரன்,  மாவட்ட இளைஞரணி செயலாளர் க. அன்பழகன் மாநகர செயலாளர், இரா. வீரக்குமார். மாவட்ட ப.க செயலாளர் பாவலர் பொன்னரசு,  தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் அ. ராமலிங்கம் ஒன்றிய ப.க அமைப்பாளர் இரா. தமிழரசன் திருப்பழனம் ஓவியர் க. புகழேந்தி பேரூர் முன்னாள் தலைவர் கோ கௌதமன்,திருப்பழனம் தலைவர் க .இரணியன் மற்றும் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *