சென்னை, ஆக. 18- ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 1,736 மாணவர்களுக்கு ரூ.2.15 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று (17.8.2025) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்தத் தொகையை வழங்கினார்.
கல்வி உதவித் தொகை
நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர், “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முதன்முறையாக 25 மாணவர்களுக்கு ரூ.3 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை, மொத்தம் 3,734 மாணவர்களுக்கு ரூ.4.58 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒரு சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் ஒரே இயக்கம் தி.மு.க.தான்,” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசின் திட்டங்கள் குறித்தும் அவர் பேசினார். “நான் முதல்வன்”, “இல்லம் தேடி கல்வி”, “எண்ணும் எழுத்தும்” போன்ற திட்டங்கள் மூலம் மாணவர்களின் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை அரசு உறுதி செய்கிறது. இதன் விளைவாக, தமிழ்நாட்டில் 75 சதவீதம் மாணவர்கள் உயர் கல்வியில் சேர்கின்றனர். இந்த விகிதத்தை 100 சதவீதம் ஆக உயர்த்த முதலமைச்சர் பாடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், “ஒன்றிய பா.ஜ.க. அரசு மாணவர்களை கல்வியிலிருந்து வெளியேற்ற பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்து வருகிறது. இதை எதிர்த்து முதலமைச்சர் போராடிக்கொண்டு இருக்கிறார். மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டு, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். முதலமைச்சரின் இந்த முயற்சிகளுக்கு மாணவர்கள் என்றைக்கும் ஆதரவாக நிற்க வேண்டும்” என்றும் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிற்றரசு உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.