அலாஸ்கா, ஆக.17- உக்ரைன் போர் தொடர்பாக, அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆங்கரேஜ் நகரில் அதிபர் டொனால்ட் டிரம்ப் – ரசிய அதிபர் விளாதிமிர் புதின் இடையேயான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப் படாவிட்டாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பல முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன.
பேச்சுவார்த்தையில் பங்கேற்க வந்த ரசிய அதிபர் புதினை, கைகுலுக்கி வரவேற்றார் அமெரிக்க அதிபர் டிரம்ப். சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் நேரடியாக சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என டிரம்ப் அறிவித்தாலும், புரிதல் ஏற்பட்டிருப்பதாக புதின் கூறியிருந்தார்.
- உலக மேடையில் புதின்: 2022ஆம் ஆண்டு உக்ரைன் போருக்குப் பிறகு, உலக நாடுகளால் புறக்கணிக்கப்பட்ட ரசியா, தற்போதைய பேச்சுவார்த்தையின் மூலம் உலக அரங்குக்குள் வந்துள்ளது. போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையில் புதின் பங்கேற்றது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
- உடன்பாடு இல்லை: ஆனால்.. 3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டாலும் சில முக்கிய விவகாரங்கள் பேசப்பட்டன. அவற்றை தீர்ப்பதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும் அதை அடைய முடியவில்லை என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.
- சிவப்புக் கம்பள வரவேற்பு: அமெரிக்கா வந்த புதினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும், வானில் அமெரிக்க ராணுவ விமானங்கள் பறக்கவிடப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
- நண்பர்கள் இணைந்தனர்–: அமெரிக்க – ரசிய அதிபர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து புன்னகையுடன் கைகுலுக்கிக் கொண்டனர். செய்தியாளர் சந்திப்பின்போதும் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பாராட்டிக்கொண்டனர்.
- சந்திப்பைத் தாண்டிய சந்திப்பு: இந்த சந்திப்பு வழக்கமான கூட்டங்களைப் போல அல்லாமல் இருக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தியதால் அதிகாரிகள் மிக கவனத்துடன் ஒரு இறுக்கமான சந்திப்பாக இல்லாமல் பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- வெளியேறிவிடுவேன்: இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை சரியாக போகவில்லை என்றால் பாதியிலேயே தான் கிளம்பிவிடுவேன் என்று டிரம்ப் சொல்லியிருந்தாலும் அவ்வாறு நடக்கவில்லை.
- அமெரிக்க அதிபராக… 2022ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்திருந்தால் உக்ரைன் போரே ஏற்பட்டிருக்காது என்று புதின் கூறினார்.
- வரி விதிப்பில் தளர்வு: பேச்சுவார்த்தைக்கு முன்பே, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நிறுவனங்களுக்கு விதித்த வரியை தளர்த்துவது குறித்து பரிசீலிப்பேன். ஆனால், உடனே அல்ல என்று கூறியிருந்தார்.
- பேசிய நிமிடங்கள்: கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது புதின் 8 நிமிடம், 3 வினாடிகள் உரையாற்றினார். டிரம்ப் வெறும் 4 நிமிடங்கள்தான் பேசினார். புதின் தனது பேச்சின் பெரும்பதியை டிரம்புக்கு நன்றி தெரிவிக்கப் பயன்படுத்தினார்.
- அடுத்து என்ன?: இரு தலைவர்களுமே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்பதையே சூசகமாகக் குறிப்பிட்டனர். விரைவில் சந்தித்துப் பேசுவோம் எனவும் மாஸ்கோ வருமாறும் டிரம்புக்கு அழைப்பு விடுத்தார் புதின்.