புதுடில்லி, ஆக.17- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பின் காரணமாக பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வைரம் சார்ந்த தொழில்துறையில் 1 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இதில் முதற்கட்டமாக 25 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்துவிட்டது. அடுத்தக்கட்டமாக 25 சதவீத வரி விதிப்பு இந்த மாத இறுதியில் அமலுக்கு வர உள்ளது.
டிரம்பின் இந்த நடவடிக்கையால் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பொருட்களுக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்குமான உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இரண்டு மடங்கு
உயரும் அபாயம்
இந்நிலையில் தான் டிரம்பின் வரி விதிப்பின் காரணமாக குஜராத்தில் வைரம் சார்ந்த தொழில்துறையில் 1 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக குஜராத் வைரம் சார்ந்த தொழிலாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் பவேஷ் டேங்க் கூறியுள்ளதாவது:
டிரம்ப் 25 சதவீத வரி விதித் துள்ளதால் கடந்த 10 நாட்களாக வேலையிழப்பு என்பது அதிகரித்து வருகிறது. இது இன்னும் இரண்டு மடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாவ்நகர், அம்ரேலி, ஜூனாகத் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் சிறிய யூனிட்களில் பணியாற்றும் நபர்கள் வேலையிழந்து வருகின்றனர்.
இந்த யூனிட்டுகளில் 3 லட்சம் முதல் 4 லட்சம் மக்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை வருமானம் கிடைத்து வந்தது. அமெரிக்கா மற்றும் சீனாவின் கொள்முதல் சரிவதால் அவர்களின் வேலைக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. தற்போது டிரம்பின் வரி விதிப்பால் அமெரிக்காவில் இருந்து வந்த ஒப்பந்தங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வேலையிழப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஏப்ரல் மாதம் வரி விதிப்பு மிரட்டலால் வைரத்தை வெட்டுவது மற்றும் பாலிசிங் செய்யும் தொழிலில் இருந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இப்போது மீண்டும் வேலையிழப்பு ஏற்பட தொடங்கி உள்ளது” என்றார்.
கூடுதல்
வேலையிழப்பு ஏற்படும்
இதுதொடர்பாக குஜராத் மாநில ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதி ஊக்குவிப்பு கூட்டமைப்பின் தலைவர் ஜெயந்திபாய் சவாலியா கூறுகையில், ‛‛அமெரிக்க மார்க்கெட்டை பொறுத்தவரை லேப் உதவியுடன் பட்டை தீட்டப்படும் வைரத்துக்கு அதிக மவுசு உள்ளது. தற்போதைய 50 சதவீத வரி அதனை பாதிக்கும். இதனால் கூடுதல் வேலையிழப்பு ஏற்பட உள்ளது” என்றார். இதன்மூலம் சுமார் ஒரு லட்சம் பேர் வரை வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவை எடுத்துக் கொண்டால் உலகின் மிகப்பெரிய வைர ஏற்றுமதியாளராக உள்ளது. நமக்கு அமெரிக்காவும், சீனாவும் முக்கிய ஏற்றுமதி சந்தையாக இருக்கின்றன. அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் இந்தியாவில் இருந்து ஏராளமான ரத்தின கற்கள், நகைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2025ஆம் ஆண்டு நிதியாண்டில் ரத்தினம் மற்றும் நகைகள் என்று அமெரிக்காவுக்கு 10 பில்லியன் டாலர் வரை ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் வெட்டப்பட்ட வைரம் மற்றும் மெருகூட்டப்பட்ட வைரம் முக்கிய பங்கு வகித்தது.
பொதுவாக கிறிஸ்துமஸ் விழாவையொட்டி அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு அதிக ஒப்பந்தங்கள் வரும். குறிப்பாக அமெரிக்கா உள்பட வெளி நாட்டுக்கான ஏற்றுமதியில் பாதியளவு கிறிஸ்துமஸை முன்னிட்டே அனுப்பி வைக்கப் படும்.
கிறிஸ்துமஸ்க்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் டிரம்பின் வரி விதிப்பு என்பது இந்தியாவின் வைர ஏற்றுமதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.