ஒன்றிய பா.ஜ.க. அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் சார்பாக ‘சுதந்திர நாள்’ போஸ்டர் வெளியிடப்பட்டு சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. காந்தியார், போஸ், பகத்சிங் ஆகியோரைவிட அதிகம் சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர் என்று பார்ப்பவர், படிப்பவர் மனதில் உருவாக்கும் வகையில் – இவர்கள் அனைவருக்கும் மேலாக உயர்ந்தவர் என்று செய்தி வெளிப்படும் வகையில் வி.டி. சாவர்க்கர் படத்தினை வெளியிட்டுள்ளார்கள்.
டில்லியில் நடைபெறும் குடியரசு நாள் பேரணியில் வி.டி. சாவர்க்கரின் உருவத்தைப் பெரிதாக வைத்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஊர்வலம் நடைபெற்றது.
யார் இந்த வி.டி. சாவர்க்கர்?
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் தண்டனையாக லண்டனில் பிரிட்டிஷ் அதிகாரி சுட்டுக் கொல் லப்பட்ட வழக்கில் இரு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப் பட்டவர் அவர். சிறையிலிருந்து தண்டனைக் காலத்திற்குமுன் தன்னை விடுதலை செய்தால் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடங்கி, விசுவாசமாக இருப்பேன் என்று மன்னிப்புக் கடிதங்கள் எழுதியவர். பல நேரங்களில் பிரிட்டிஷாருக்கு மன்னிப்புக் கோரி கடிதம் எழுதிய ‘மன்னிப்புத் திலகம்’ தான் விடி. சாவர்க்கர். நாட்டு விடுதலைக்கு எந்தவித பங்களிப்பும் ஆற்றாத காவிக் கட்சியினர் பார்வையில் ‘மன்னிப்புத் திலகம்’ சாவர்க்கர் எனத் தோன்றலாம்.
இன்றைக்கு நாட்டின் ஒற்றுமைக்கும், பன்முக பண்பாட்டிற்கும் ஊறுவிளைவித்து வரும் ‘இந்துத்துவா’ எனும் சொலவடையை கொண்டு வாழ்ந்தவர்தான் சாவர்க்கர். சுதந்திர நாளில் போற்றப்பட வேண்டியவரா வி.டி. சாவர்க்கர்?
மேலும் ‘தேசப் பிதா’ எனப் போற்றப்படும் காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டவர்.