மருத்துவக் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்! உயர்நிலைக் குழு அறிக்கை அளிப்பு

2 Min Read

சென்னை, ஆக. 17  சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வியில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமானால், இவை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்று, தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட ஒன்றிய – மாநில உறவுகளை ஆராயும் உயர்நிலைக் குழுவிடம் பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றிய – மாநில அரசுகள் இடை யிலான உறவுகளை மேம்படுத்தவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும் தேவையான ஆலோசனைகள், பரிந்துரைகளை  வழங்க உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது. அந்த குழுவின் கூட்டம் சென்னையில் கடந்த 14 ஆம் தேதி நடந்தது. குழு உறுப்பினர்கள் அசோக் வர்தன் ஷெட்டி, பேராசிரியர் எம்.நாகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வியில் நிகழும் ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பு மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்த விரிவான அறிக்கையை மாநில திட்டக்குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான நா.எழிலன்  அளித்தார்.

அதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

சுகாதாரம், மருத்துவக் கல்வி

ஒன்றிய அரசு பின்பற்றும் ஒற்றை ஆட்சி அணுகுமுறை காரணமாக இந்தியாவில் சுகாதாரத் துறை மிகவும் சிக்கலான இடத்தில் நிற்கிறது. இந்திய அரசியல் சட்டம் கூட்டாட்சி நிர்வாக முறையை வலியுறுத்தும் நிலையில், ஒன்றிய அரசு அதற்கு நேர்மாறாக சுகாதார கொள்கைகளைச் சிதைத்ததால், சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வியில் மாநில அரசின் சுயாட்சி அழிந்துபோனது.

மாநிலப் பட்டியலில் இருந்த மருத்துவக் கல்வி 42 ஆவது திருத்தம் மூலம் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆணையத்தால் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி பாடத் திட்டங்களுக்குத்தான் நீட் தேர்வு சாதகமாக உள்ளது. மாநில பாடத்திட்டத்தில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் படிக்கும் மாண வர்கள் நீட் தேர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நீட் தேர்வால் நகர்ப்புற, வசதி படைத்த, ஆங்கில வழி கல்வி மாணவர்கள்தான் பெரிதும் பயன் அடைந்துள்ளனர் என்பதை தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி
ஏ.கே.ராஜன் குழு தெளிவாக சுட்டிக்காட்டியது. அரசு மருத்துவக் கல்லூரிகளில், கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களின் பிரதி நிதித்துவம் 14.9 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைந்தது.

சுகாதாரமும், மருத்துவக் கல்வியும் சிறப்பாக இருக்க வேண்டுமானால், தற்போதைய தேசிய மருத்துவ ஆணையத்தை நீக்கிவிட்டு, மீண்டும் இந்திய மருத்துவக் கவுன்சிலை ஏற்படுத்த வேண்டும். மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்குரிய விதிமுறைகளை உருவாக்கும் பொறுப்பும், அவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரமும் மாநில அரசிடம்தான் இருக்க வேண்டும். சுகாதாரம், மருத்துவக் கல்வியில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமானால், இந்தத் துறைகளில் மாநிலங்களுக்கு தன்னாட்சி தகுதி வழங்கப்பட வேண்டும். இவை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *