டிரம்ப்பை சுட்டி காட்டியதால் சர்ச்சை
வாசிங்டன், ஆக. 16- அமெரிக்காவின் தலைநகரான டிசி வாசிங்டனில், சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் ஒரு பயனர் அதன் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சத்திடம் ஒரு கேள்வி எழுப்பினார். ‘வாசிங்டனில் மிக மோசமான குற்றவாளி யார்?’ என்று அவர் வினவியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த எக்ஸ் தளத்தின் AI, கடந்த 30 ஆண்டுகால தரவுகளை ஆய்வு செய்து, தண்டனைகள் மற்றும் குற்றங்களின் தீவிரத் தன்மையின் அடிப்படையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் மோசமான குற்றவாளி என்று குறிப் பிட்டது. மேலும், ஜனவரி 2025 வரை, அவர் நியூயார்க்கில் 34 குற்றங்களுக்காக குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பதில் சுட்டிக்காட்டியுள்ளது.
சமீபத்தில், அமெரிக்காவில் குற்றச் செயல்கள் அதிகரிப்பதாக டிரம்ப் கவலை தெரிவித்த நிலையில், அவரைப் பற்றிய இந்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதம், டிரம்ப் மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் ஆகியோருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, அவர்கள் பிரிந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பிற்காக
கூகுள் நிறுவனம் 9 பில்லியன் டாலர் முதலீடு
ஓக்லஹோமா, ஆக. 16- செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்தில், அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கூகுள் நிறுவனம் கூடுதலாக 9 பில்லியன் டாலர் (சுமார் ரூ.75,000 கோடி) முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த முதலீட்டின் ஒரு பகுதியாக, ஓக்லஹோமாவின் ஸ்டில்வாட்டர் பகுதியில் ஒரு புதிய தகவல் தரவு மையம் (data center) அமைக்கப்படும். இதன் மூலம் அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், அந்தத் துறையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான திட்டங்களையும் உருவாக்குவதற்கு கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த முயற்சி, அமெரிக்காவில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் பெரும் உந்துதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியூபாவில் கட்டாய வேலை:
பிரேசில் அதிகாரிகளின் அமெரிக்க விசா ரத்து
ஹவானா, ஆக. 16- கியூபாவில் கட்டாய வேலை திட்டங்களில் ஊழியர்களை ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் பிரேசிலிய அதிகாரிகளின் அமெரிக்க விசாவை ரத்து செய்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரேசிலின் மைஸ் மெடிகோஸ் (Mais Medicos) திட்டத்தின் மூலம் கியூபாவைச் சேர்ந்த மருத்துவ ஊழியர்கள் கட்டாய வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில், பிரேசில் அரசாங்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள், அமெரிக்க சுகாதார நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையானது, மனித கடத்தல் மற்றும் கட்டாய வேலைகளை எதிர்த்துப் போராடுவதற்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.