புதுடில்லி, ஆக.15 உயிரிழந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், சட்டவிரோத குடியேறிகள் என 65 லட்சம் பேரை பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.
இதற்காக சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்ட ஆணையம் கடந்த ஆகஸ்ட் 1 இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் (13.8.2025) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜோய்மால்யா பக்சி அமர்வு விசாரணையின்போது சமூக ஆர்வலரான யோகேந்திர யாதவ் திடீரென இரு வாக்காளர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.
அவர்கள் இருவரும், தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உயிரிழந்துவிட்ட நபர்கள் என்று கூறப்படுகிறது.
அவர்களை சுட்டிக்காட்டி பேசிய யோகேந்திர யாதவ், “ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள இவர்கள், இன்னும் இருக்கிறார்கள். அதை நீங்களே இப்போது நேரில் பார்க்கலாம். அவர்களிடம் ஆதார் அட்டை மற்றும் பிற ஆவணங்களும் இருக்கின்றன. ஆனால், அவற்றையும் மீறி இன்னும் அவர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படவில்லை” என்றார்.
இதனைத்தொடர்ந்து, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திவிவேதி, இப்படி நீதிமன்ற விசாரணையில் திடீரென இருவர் நேரில் ஆஜர்படுத்துவதை எதிர்த்தார்.
“அவர்கள் இருவரும் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உரிய முறையில் விண்ணப்பித்திருக்கலாமே. வெறும் விளம்பரத்துக்காக யாதவ் அவர்களை இங்கே வரச் செய்திருக்கிறார்” என்று திவிவேதி தெரிவித்தார் .
இதற்கிடையே பேசிய நீதிபதிகள், “செயல்பாட்டில் ஏற்பட்ட குழப்பங்களால் இத்தகைய தவறு நேர்ந்திருக்கக்கூடும். அதை சரிசெய்துகொள்ள முடியும். தற்போது வெளியிடப்பட்டுள்ளது வரைவு வாக்காளர் பட்டியல் மட்டுமே. அவற்றை திருத்த இன்னும் கால அவகாசம் உள்ளது. இது இறுதிப்பட்டியல் அல்ல” என்று தெரிவித்தனர்.