சென்னை, ஆக.15 பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம், மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டில் (2025-26) கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி நிலவரப்படி பள்ளிகளில் உள்ள மாணவர் எண்ணிக்கைக்கேற்ப முதுநிலை ஆசிரியர் பணி இடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பணியாளர் நிர்ணயம்
அதன்படி தமிழ் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு 24 பாடவேளைகளும், இதர பாட ஆசிரியர்களுக்கு வாரத்துக்கு 28 பாடவேளைகளும் குறைந்தபட்சம் வருமாறு பணியாளர் நிர்ணயம் செய்யப்படுகிறது. 11, 12-ஆம் வகுப்புக்கு 1:40 என்ற ஆசிரியர் – மாணவர் விகிதத்தைப் பின்பற்ற வேண்டும். மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ள பகுதி மாநகராட்சி, நகராட்சியாக இருப்பின் 30 மாணவர்களும், ஊரகப் பகுதியாக இருந்தால் மாணவர் எண்ணிக்கை 15 ஆகவும் குறைந்தபட்சம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒருமுறை பணிநிரவல் செய்த ஆசிரியர்களை அடுத்த 3 ஆண்டுகளுக்கு மீண்டும் மாற்றம் செய்யக்கூடாது. அதேநேரம், பணிநிரவல் நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியர் இந்த ஆண்டும் விருப்பம் தெரிவித்தால் அவரை தற்போதைய பணியாளர் நிர்ணயித்தின்போது உபரியாகக் காண்பிக்கலாம். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி முதுநிலை ஆசிரியர்களை பணி நிர்ணயம் செய்து, அதன் விவரங்களை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
வி.சி.க. தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் கொண்டாட்டம்
சென்னையில் நாளை நடைபெறுகிறது
சென்னை, ஆக 15 விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளான ஆக.17-ஆம் தேதி, தமிழர் எழுச்சி நாளாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருமாவளவனின் 63-ஆவது பிறந்தநாளை சென்னை, காமராஜர் அரங்கில் ஆக.16-ஆம் தேதி (நாளை) கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆக.16-ஆம் தேதி மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை விழா நடைபெறவுள்ளது. அதன்படி, மாலை 4 மணிக்கு ஸ்டீபன் ராயல் குழுவினரின் இசைப்பாய்ச்சல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு ஜாஹிர் உசேன் குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, ‘மதச்சார் பின்மை காப்போம்’ தலைப்பில் கவியரங்கம் நடைபெறும். இதில் இயக்குநர் கே.பாக்யராஜ், கவிஞர் விவேகா, ஆண்டாள் பிரியதர்ஷினி, இளைய கம்பன், தஞ்சை இனியன், அருண் பாரதி, லாவரதன், புனிதஜோதி ஆகியோர் பங்கேற்கின்றனர். விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு வரவேற்புரையாற்றுகிறார்.
வாழ்த்தரங்கம் இரவு 11 மணிக்குத் தொடங்குகிறது. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் எம்.பி., தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் அய்.லியோனி, ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் அதிகாரி வே.வனிதா, திரைப்பட இயக்குநர் லட்சுமி ராம கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். இவ்விழாவுக்கு, விசிக பொதுச்செயலாளர்கள் ம.சிந்தனைச் செல்வன், துரை.ரவிக்குமார், எம்எல்ஏ-க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் மு.பாபு ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.