சென்னை, ஆக.15 பொதுமக்கள் அரசு சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் பெற வசதியாக, தமிழ்நாடு அரசு ‘வாட்ஸ்-அப்’ மூலம் பல்வேறு சேவைகளை வழங்க ‘மெட்டா’ நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் அரசு சேவைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
இந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மெட்டா நிறுவனத்தின் இந்திய வர்த்தக மெசேஜிங் பிரிவு இயக்குநர் ரவி கார்க் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த புதிய ‘வாட்ஸ்-அப்’ சாட்பாட் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் செயல்படும். இதன் மூலம் பொதுமக்கள் வாட்ஸ்-அப் வாயிலாக புகார்கள் அளிப்பது, மின்சாரம், குடிநீர் கட்டணங்களை செலுத்துவது, மாநகராட்சி வரிகள் கட்டுவது, மெட்ரோ ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வது போன்ற 50 அத்தியாவசிய அரசு சேவைகளை வீட்டிலிருந்தபடியே எந்த நேரத்திலும் பெற முடியும். இதனால் சேவை மய்யங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. இந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் அரசின் முதன்மை செயலாளர் பிரஜேந்திர நவ்னித், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை முதன்மை செயல் அதிகாரி ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்த சேவை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.