வாசிங்டன், ஆக.13- ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாத காரணத்தால், இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட வரியைப் போல சீனாவுக்கும் இரண்டு மடங்கு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கூடுதல் வரி
கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித் திருந்தது.
இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை எனக் கூறி, கூடுதலாக 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்தார். இதன் மூலம், இந்தியாவுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 50 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர் ஒருவர், “இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்தீர்கள். ஆனால், இந்தியாவை விட ரஷ்ய கச்சா எண்ணெயை அதிகம் வாங்கும் சீனா மீது ஏன் வரி விதிக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ட்ரம்ப் பதிலளிக்கையில், “இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டு உள்ளது. அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் மேலும் பல நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்” என்றார்.
சீனாவுக்கும் வரி
மேலும், “ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் இருப்பது உண்மைதான். இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்திருப்பது சீனாவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ஆகும். இந்தியாவுக்கு விதிக்கப்பட்டதைப் போலவே சீனாவுக்கும் கூடுதல் வரி விதிக்கப்படும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.