தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது! திருப்பரங்குன்றம் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்!

2 Min Read

மதுரை. ஆக. 13- தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு முக்கியமான வாதங்களை முன்வைத்துள்ளது.

ஆர்ப்பாட்டம்

சில மாதங்களுக்கு முன்பாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் இஸ்லாமியர்கள் கந்தூரி கொடுப்பதை எதிர்த்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு, கோழியுடன் ஏறக் கூடாது என்று காவல்துறை தரப்பில் உத்தரவிடப்பட்டது சர்ச்சையாக வெடித்தது.

சமணர் குன்று

திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தமானது மற்றும் நில பயன்பாடு தொடர்பான வழக்குகள் உள்ளன. ஒரு தரப்பினர் மலையை சமணர் குன்று என்று அறிவிக்கக் கோரியும், மற்றொரு தரப்பினர் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சொந்தமானது என்று வாதிட்டனர்.

இந்த வழக்கு ஏற்கனவே உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய தொல்லியல் துறையிடம் இது தொடர்பாக மனு அளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஒன்றிய தொல்லியல்துறை அதிகாரிகளிடம் இது தொடர்பாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிக்கந்தர் மலை

திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கு மூன்றாவது நீதிபதி விஜயகுமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிக்கந்தர் மலை என்று அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? ஆடு, கோழி பலியிடுவதற்கு, கந்தூரி நடத்துவதற்கு அனுமதி உண்டா? நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி இருக்கிறதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது

நீதிபதியின் கேள்விகளுக்கு வருவாய்த் துறை ஆவணங்களுடன் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கை யில், தீட்டு என்பதே மனித குலத்துக்கு எதிரானது. தீட்டு என்பது ஜாதியிலோ, மதத்திலோ, மனிதர்களுக்கு உள்ளேயோ இருக்கவே கூடாது என்று அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

மலையில் ஆடு, கோழி பலியிடுவதால் புனிதம் கெட்டு, தீட்டுப்படும்” என மனுதாரர்கள் தரப்பு வாதம் செய்தனர். அதற்கு, அழகர் கோயிலில் பதினெட்டாம்படி கருப்புக்கு கிடா வெட்டிய பிறகுதான் பெருமாளைப் பக்தர்கள் தரிசிக்கின்றனர். அப்படி இருக்கையில் இது எப்படி தீட்டாகும்? என்றும் அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

இதையடுத்து ஒன்றிய தொல்லியல் துறை தரப்பு வாதங்களுக்காக வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *