சென்னை, ஆக.12- டில்லியில்ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட மாநிலத்தலைவர் கு. செல்வப்பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சாலை மறியல்
டெல்லியில் போராட்டம் நடத்திய ராகுல்காந்தி உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று (11.8.2025) தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் சத்தியமூர்த்தி பவனில் இருந்து ஜி.பி.சாலைவழியாக அண்ணாசாலை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள். பின்னர், சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்தனர்.
இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, பேரணியாக செல்ல முயன்ற காங்கிரஸ் கட்சியினர் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உருவப்படம் எரிக்க முயற்சி
அப்போதுஒன்றிய பா.ஜனதா அரசை கண்டித்து அவர்கள் முழக்கமிட்டனர். மேலும் பிரதமர் மோடி உருவப்படத்தை தீயிட்டு எரிக்க முயன்றனர். காவல்துறையினர் அவர்களை தடுத்து உருவப்படத்தை பறிமுதல் செய்தனர். பின்னர், காவல்துறையினர் அவர்களை கைது செய்ய முயன்றனர்.
இதனால், காவல்துறையினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றி சென்று திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர்.
இந்த போராட்டத்தில், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ., மாநில பொதுச்செயலாளர் காண்டீபன், மாநில செயலாளர் அகரம் கோபி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.