முழு பாதுகாப்புடன் வங்கதேச தேர்தல் முகமது யூனுஸ் உத்தரவு

4 Min Read

டாக்கா, ஆக. 12- வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையால் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்த பிறகு, இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பதவியேற்றார். வங்கதேச நாட்டில் புதிய அரசை தேர்வு செய்ய பொதுத்தேர்தல் வரும் 2026 பிப்ரவரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அரசு அதிகாரிகளின் உயர் மட்ட கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட முகமது யூனுஸ் அனைத்து வாக்கு சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதற்கு எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை, அமைதியாக நடந்த தேர்தலாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

2 மாதங்களில் 2ஆவது முறை
பாக். ராணுவ தளபதி அமெரிக்காவுக்கு பயணம்

இசுலாமாபாத், ஆக. 12- பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா,எடுத்தது. இந்த சம்பவத்துக்கு பின் கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேசினார். அதிபர் டிரம்ப், அசிம் முனீரை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து அவருக்கு விருந்து அளித்தார்.

இந்த நிலையில், அசிம் முனீர் மீண்டும் அமெரிக்கா வுக்கு சென்றுள்ளார். இது குறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவுக்கு சென்றுள்ள ராணுவ தளபதி அசிம் முனீர் அங்கு அரசியல் தலைவர்கள், ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

டம்பா என்ற இடத்தில் அமெரிக்க ராணுவ மத்திய கட்டளையின் கமாண்டராக இருந்த ஜெனரல் மைக்கேல் குரில்லா ஓய்வு பெற்றார்.அந்த நிகழ்ச்சியில் முனீர் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து அமெரிக்க ராணுவத்தின் கூட்டு தலைமை தளபதி ஜெனரல் டேன் கெயினை அவர் சந்தித்து பேசினார். சில அரசியல் தலைவர்களையும் அவர் சந்தித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

50 சதவிகித வரி விதிப்பு எதிரொலி
அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு

வாசிங்டன், ஆக. 12- அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகளால் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை வால்மார்ட் அங்காடியில் வாடிக்கையாளர் ஒருவர் காட்சிப்பதிவாக வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளார். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல், வெளிநாடுகள் மீது கடுமையான வரிகளை விதித்து வருகிறார். அமெரிக்காவின் உற்பத்தித் துறையை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்கவும் இந்த வரிகள் அவசியம் என அவர் தொடர்ந்து வாதிட்டு வருகிறார். இதனால், அமெரிக்காவுக்குள் வெளிநாட்டுப் பொருட் களைக் கொண்டுவரும் நிறுவனங்கள், அரசுக்கு கட்டாய வரி செலுத்த வேண்டியுள்ளது.

இந்த கூடுதல் செலவு, இறுதியில் நுகர்வோர் மீது சுமத்தப்பட்டு, பொருட்களின் விலை அதிகரிக்கிறது. சமீபத்தில், இந்தியா ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்கள் மீதான வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக இருமடங்காக டிரம்ப் உயர்த்தினார். இந்நிலையில், அமெரிக்காவின் வால்மார்ட் அங்காடியில் டிரம்ப் விதித்த வரிகளால், இந்திய ஆடை மற்றும் பிற பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதை மெர்சிடிஸ் சாண்ட்லர் என்ற பயனர் ஒருவர் இன்ஸ்டாகிராமில் காட்சிப்பதிவாக வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்ட காணொலியில், ஆடைகள் பிரிவில் உள்ள பழைய விலைப்பட்டியல்கள் கிழிக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு, புதிய அதிக விலை கொண்ட சீட்டுகள் ஒட்டப்பட்டிருப்பதைக் காட்டுகிறார். அதில் அவர் கூறுகையில், ‘10.98 டாலராக இருந்த ஆடையின் விலை தற்போது 11.98 டாலராகவும், 6.98 டாலராக இருந்த குழந்தைகள் உடையின் விலை தற்போது 10.98 டாலராகவும், 19.97 டாலராக (இந்திய ரூபாயில் சுமார் ரூ.1,668) இருந்த புத்தகப் பையின் விலை 24.97 டாலராகவும் (இந்திய ரூபாயில் சுமார் ரூ.2,086) உயர்த்தப்பட்டுள்ளது’ என்று அவர் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டுகிறார். இந்த காணொலி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் டிரம்ப்பின் வரிக்கொள்கையை கடுமையாக விமர்சித்தும், மற்றவர்கள் இந்த விலை உயர்வை ஆதரித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சுமார் ரூ.87.58 என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் பிரமாண்ட தொங்குபாலம் பல்லாயிரம் வேலைவாய்ப்புகள்
உருவாகும் என எதிர்பார்ப்பு

மிலன், ஆக. 12- இத்தாலியில் உள்ள கலாப்ரியா மற்றும் சிசிலி இடையே உலகின் மிக நீளமான தொங்கு பாலம் கட்ட இத்தாலி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தப் பாலம் 3.3 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இதற்கு சுமார் 13.5 பில்லியன் யூரோ (ரூ1.2 லட்சம் கோடி) செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கரோனாவிற்கு முன்பே இந்த திட்டம் துவங்கப் படுவதாக இருந்த நிலையில் கரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பால் இந்த திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை நிவாரணத்திற்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் இந்த திட்டம் துவங்கப் பட்டுள்ளது. இது இத்தாலியின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் என அந்நாட்டு அரசு நம்புகிறது. இந்தப் பாலம் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதியில் கட்டப் படுகிறது. ஆனால், நிலநடுக்கம் ஏற்பட்டாலும் பாலம் அசையாமல் உறுதியாக நிற்கும் என இத்தாலி அரசு தெரிவித்துள்ளது. இந்தப் பாலத்தின் கட்டுமானத்தால் பல்லாயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கலாப்ரியா மற்றும் சிசிலி ஆகிய ஏழ்மையான பகுதிகளில் உள்ள மக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இந்தப் பாலம் இத்தாலியின் தலைநிலத்தையும் சிசிலி தீவையும் இணைக்கும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *