வாஜ்பேயும்
வாலை ஆட்டிப் பார்த்தார்!
வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது – 1998 அக்டோபர் 22ஆம் தேதியன்று டில்லியில் அனைத்து மாநிலக் கல்வி அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் சங்பரிவாரைச் சார்ந்தவரும், கல்வி நிபுணர் என்று அவர்கள் தரப்பில் போற்றப்பட்டவருமான சிட்டியங்லாவால் தயாரிக்கப்பட்ட கல்வித் திட்டம் அரங்கேற்றப்பட்டது.
- இந்தியக் கலாச்சாரத்தை மய்யமாகக் கொண்டு முதல் வகுப்பு முதல் உயர்நிலைக் கல்வி வரைக்கும் பாடத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும்.
- இந்தியாவின் கலாச்சார ஒருமைப்பாட்டைப் பேணிப் பாதுகாக்க மூன்றாவது வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சமஸ்கிருத மொழியைக் கட்டாயமாக்க வேண்டும்.
- சரஸ்வதி வந்தனா, வந்தே மாதரப் பாடல்களை சகல பள்ளிகளிலும் கட்டாயமாக்க வேண்டும்.
- பெண்களைப் பொறுத்தவரை வீட்டை நிர்வகிப்பது சம்பந்தமாகப் போதிக்க வேண்டும்.
- பாடத் திட்டங்கள் அனைத்தும் சுதேசிமயமாக்கப்பட வேண்டும்.
- நாட்டின் நான்கு பிரதேசங்களில் சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட வேண்டும்.
- இந்தியத் தத்துவப் பாடங்கள் போதிக்கப்பட வேண்டும்.
(அ) உபநிஷத்துகள், வேதங்கள் முதலியவை பாடத் திட்டத்தில் இடம் பெற வேண்டும்.
(ஆ) எல்லோர்க்கும் உயர் கல்வி அளித்திடும் இன்றைய முறையை மாற்றி அமைத்திட வேண்டும். அப்பொழுது தான் கல்வியைத் தரமானதாக உயர்த்திட முடியும்.
சமஸ்கிருதம் பரவினால்தான் பார்ப்பனர் வாழ முடியும்
சமஸ்கிருதம் பரவினால்தான் பார்ப்பான் வாழ முடியும் – சுரண்ட முடியும். நம்மைக் கீழ்ஜாதி மக்களாக ஆக்க முடியும். அவன் பிறவி மண்ணாக இருக்க முடியும். அதன் நலிவு பார்ப்பன ஆதிக்கத்தில் சரிவு என்பதை உணர்ந்துதான் ஒவ்வொரு பார்ப்பானும் சர்வ ஜாக்கிரதையாக – விழிப்போடு காரியம் ஆற்றி வருகிறார்கள்.
– தந்தை பெரியார், ‘விடுதலை’, 15.2.1960
இதுதான் பிஜேபி கல்வி நிபுணரின் திட்ட அறிக்கை.
அதற்கு எதிர்ப்புக் கிளம்பிய நிலையில் அத்திட்டம் வந்த வேகத்தில் சவக்குழிக்குத் தள்ளப்பட்டு விட்டது. ஆனாலும் அந்த சவக்குழியிலிருந்து சமஸ்கிருத விரியன் பாம்பு மட்டும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் படம் எடுத்து ஆட்டம் காட்டுகிறது.
டில்லி கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் “சரஸ்வதி வந்தனா” பாடப்பட்டபோது அம்மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாட்டுக் கல்வி அமைச்சர் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் மாநாட்டிலிருந்து வெளிநடப்பு செய்தார் என்பது அடிக் கோடிட்டு நினைவூட்ட வேண்டியது அவசியமாகும்.
தமிழ்நாட்டுக் கல்வி அமைச்சர் வெளிநடப்பு செய்த அக்கணமே புதுச்சேரி, கேரளம், கருநாடகம், மேற்கு வங்காளம், திரிபுரா, பீகார், பஞ்சாப், ஒடிசா, மத்தியப் பிரதேசம் ஆகிய பத்து மாநிலங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சர்களும், கல்வித் திட்டத்தை எதிர்த்து முழக்கமிட்டுக் கொண்டு வெளி நடப்புச் செய்தனர்.
ராஜாஜி சென்னை மாநிலப் பிரதமராக இருந்தபோது லயோலா கல்லூரியில் “திருவாய்” மொழிந்தது என்ன?
“படிப்படியாக சமஸ்கிருதத்தைக் கொண்டு வரவே, இப்பொழுது ஹிந்தியைக் கொண்டு வந்துள்ளேன்” என்று பேசினாரா இல்லையா?
ஆர்.எஸ்.எஸ்ஸின் குருநாதர் எம்.எஸ்.கோல்வால்கர் என்ன கூறுகிறார்?
“நமது தேசிய மொழிப் பிரச்சினைக்கு வழி காணும் முறையில் சமஸ்கிருதம் அந்த இடத்தைப் பெறும் வரை, வசதிக்காக ஹிந்து மொழிக்கு நாம் முன்னுரிமை தரவேண்டியிருக்கிறது” என்றாரே!
(‘ஞானகங்கை’ இரண்டாம் பாகம் பக். 51)
சமஸ்கிருதம் படித்தால்
கீதை இலவசம்
– விஜயபாரதம், 23.1.2018 பக். 17
குருநாதரே சொல்லி விட்டார்; அவர் அடியொற்றி அதே ஆர்.எஸ்.எஸ்.சின் தற்கால தலைவர் மோகன் பாகவத் வேறு என்ன சொல்வார்?
எல்லாம் இருக்கட்டும்! சமஸ்கிருதம் படித்தால் என்ன பயன்? நாம் சொல்வதைவிட திருவாளர் ‘துக்ளக்’ சோ ராமசாமி என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா?
கவிஞர் கண்ணதாசனுக்கும் ‘சோ’வுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் குமுதம் 26.10.2022 இதழ் ரீவைண்ட் கொண்டாட்டம்’ பகுதியில் மறுபதிப்புச் செய்திருந்தது.
“நான் இண்டர்மீடியட் வரை சமஸ்கிருதம் படித்தேன். அதன் அழகைப் பாராட்டலாமே தவிர நடைமுறைக்குப் பயன் இல்லை” என்றாரே!
– முற்றும்