ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் மகாராட்டிராவின் நாக்பூரில் கட்டட திறப்பு விழாவில் பங்கேற்று இப்படிப் பேசி இருக்கிறார்.
‘‘மோதல்கள் நிறைந்த இன்றைய உலகுக்கு ஹிந்து மதம் தேவை. ஏனெனில் அது பன்முகத்தன்மையை எவ்வாறு ஏற்றுக்கொள்வது, நிர்வகிப்பது என்பதை கற்பிக்கிறது. உலகம் முழுதுக்கும் இந்த மதம் தேவை!
பன்முகத்தன்மையை நிர்வகித்து, எவ்வாறு வாழ்வது என உலகத்துக்கு தெரியாததால் தான் பல மோதல்கள் நடக்கின்றன. இந்தியர்களை பொறுத்தவரை மதம் என்பது உண்மையை தவிர வேறில்லை.
இந்த மதம் ஒற்றுமையை வலியுறுத்துவதுடன் பன்முகத்தன்மையையும் ஏற்றுக்கொள்கிறது. ஹிந்து மதம் இயற்கையின் மதம்; இது உலகளாவிய நம்பிக்கை; மனித குலத்தின் மதம். ஒவ்வொரு இதயமும் இந்த மதத்தால் விழித்தெழ வேண்டும்.’’
இவ்வாறு பேசியிருக்கிறார் மோகன் பாகவத்.
(‘தினமலர்’ 7.8.2025)
‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே!’ என்ற ஒரு பாடல்வரிதான் நினைவிற்கு வருகிறது.
‘மோதல்கள் நிறைந்த இன்றைய உலகுக்கு ஹிந்து மதம் தேவை’யாம்! எந்தப் பொருளில் இதனைக் கூறுகிறார்.
மோதலுக்கு இந்து மதம் தேவை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
‘ரகுபதி ராகவ ராஜாராம்!’ என்று பாடிக் கொண்டிருந்த தேசப் பிதா என்பது போற்றப்பட்ட காந்தியாரை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சே ஆர்.எஸ்.எஸ். அல்ல – அவன் இந்து மகா சபைக்காரன் என்று சொல்வதைக்கூட விவாதத்துக்காக ஏற்றுக் கொள்வோம்!
‘இந்து மகாசபை’ என்ற பெயரிலேயே ‘இந்து’ இருக்கிறதே! இதுதான் மோதல் அற்ற உலகிற்குத் தேவையான மதமா?
நமது கால கட்டத்திலேயே சமூக சீர்திருத்தவாதிகளை எம்.எம். கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கோபிநாத் பன்சாரே சுட்டுக் கொல்லப்பட்டனரே! அந்தக் கொலைகளுக்குப் பின்னணியில் இருந்த சக்தி அல்லது அமைப்பு எது?
450 ஆண்டு கால வரலாறு படைத்த பாபர் மசூதியை ஒரு பட்டப் பகலில் இடித்து நொறுக்கியதில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இல்லையா? விஸ்வ ஹிந்து பரிஷத்காரர்கள் இல்லையா? காவி வேட்டி சாமியார்கள் இல்லையா? பிஜேபியினர் இல்லையா?
இன்றைய பிரதமர் நரேந்திர மோடி அன்றைய குஜராத் முதல் அமைச்சராக இருந்தபோது குஜராத்தில் நடைபெற்ற வன்கொடுமைகளை வார்த்தைகளால் அளவிட முடியுமா?
உச்சநீதிமன்றமே முதலமைச்சர் மோடியை நீரோ மன்னனுக்கு ஒப்பிட்டு விமர்சனம் செய்யவில்லையா?
முகாம்களில் அடைக்கலமாகியிருந்த முஸ்லீம்களைப்பற்றி நாராசமாக முதலமைச்சர் மோடி என்ன சொன்னார்? ‘‘மக்கள் பெருக்கத்தைச் செய்து கொண்டிருந்தனர்’’ என்று சொன்ன ஒலிப் பேழைகள் வெளி வந்தனவே.
மோடிக்கு விசா கொடுக்க அமெரிக்கா போன்ற நாடுகள் மறுத்தனவே – அதற்கு என்ன காரணம்?
‘எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்வேன்?’ என்று பிரதமர் ஏ.பி. வாஜ்பேயி புலம்பினாரே ஏன்?
லால்கிஷன் அத்வானி எழுதி வெளி வந்துள்ள ‘‘என் நாடும் என் வாழ்க்கையும்’’ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ன?
‘குஜராத்தில் நடந்த சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று, நரேந்திர மோடி பதவி விலக வேண்டும் என்று வாஜ்பேயி கூறியதாகவும், அதற்கு மோடியும் கோவாவில் நடக்கவிருக்கும் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறியதாகவும் கூறினார்’ என்று எழுதப்பட்டுள்ளதே – இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்!
மோகன் பாகவத்துக்கு முந்தைய ஆர்.எஸ்.எஸ். தலைவராகவிருந்த கே.எஸ். சுதர்சன்.
“பூர்வீகத்தில் தாங்கள் இந்துக்கள் என்ற கருத்தை முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினாரா இல்லையா?
ஆக்ராவில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூன்று நாள் தேசியப் பாதுகாப்பு முகாமின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த முகாமில் அப்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானி, உ.பி. முதல்வர் ராம்பிரகாஷ் குப்தா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
நிறைவு நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ். சுதர்சன் ஆற்றிய உரை இதோ!
பூர்வீகத்தில் தாங்கள் இந்துக்கள் என்ற கருத்தையும், பிற மதங்களின் கருத்தையும், பிற மதங்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் தன்மையையும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர் களும் ஏற்று தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும்.
ராமபிரான், கிருஷ்ண பகவான் ஆகியோருடைய ரத்தம் தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை முஸ்லிம்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்.
அன்னிய நாட்டிலிருந்து நமது நாட்டின்மீது படையெடுத்த பாபரை எதற்காக முஸ்லிம்கள் சொந்தம் கொண்டாட வேண்டும்? பாபருடைய கல்லறைக் கருத்துகளை முஸ்லிம் நாடான ஆப்கானிஸ்தானமே புறக்கணித்துவிட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்களின் முன்னோர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அல்ல. எனவே முஸ்லிம்களின் முன்னோர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள்தான்.
ஈரானிலுள்ள முஸ்லிம்கள் தங்களுக்கென ‘சுபியிசத்தை’ வகுத்துக் கொண்டனர். எனவே இஸ்லாமிய புதிய அமைப்பை ஏற்படுத்துவது பற்றி இந்தியாவிலுள்ள முஸ்லிம்களும் சிந்திக்க வேண்டும்
இந்தியாவைத் துண்டாடியது மனித வரலாற்றின் மிகப் பெரிய தவறு என்று பாகிஸ்தானைச் சேர்ந்த முத்தா ஹிதா குவாமி இயக்கத்தின் தலைவர் அல்தாப் ஹாசன் தெரிவித்துள்ள கருத்தை முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
‘அனைத்து மதங்களும் சமமானதல்ல’ என்று வாடிகனிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையிடம் வெளியிட்டுள்ள அறிக்கை கண்டனத்துக்குரியது. இதுபோன்ற கருத்துகளில் நம்பிக்கை கொண்டுள்ள கிறிஸ்தவ அமைப்புகளை (கத்தோலிக்க மிஷினரிகளை) இந்தியாவில் பணியாற்ற அனுமதிக்க வேண்டுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மதமாற்றம் கூடாது என்பதே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கருத்து.
வாடிகனிலுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமை யிடத்தின் கருத்துக்கு பெரும்பாலான இந்திய கிறிஸ்தவர்கள் கட்டுப்பட்டுள்ளனர். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகியவை தங்களுக்கென சுதேசி சர்ச் கருத்துகளைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
எனவே இந்தியக் கிறிஸ்தவர்களும் கத்தோலிக்க தலைமையிடத்தின் ஏற்க முடியாத கருத்தை உதறித் தள்ளிவிட்டு, அதனுடன் உள்ள உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். ரட்சிப்புக்கு இதர பல வழிகள் உள்ளன.”
(‘தினமணி’ 16.10.2000)
சொன்னவர் அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர். இதனை மறுக்கிறாரா இன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்?
வன்முறையின் மறுபெயர்தான் ஆர்.எஸ்.எஸ். இந்தியாவில் அதன் வன்முறைக்காக மூன்று முறை தடை செய்யப்பட்டது ஏன்?
பதில் சொல்லட்டும் மோகன் பாகவத்துவும் அவர்களின் வகையறாக்களும்!